"நான் என் கணவரை இறுதிவரை நின்று காப்பாற்றுவேன்" - ஸ்ருதி ரங்கராஜ் அறிக்கை
Sexual Abuse: `வழி நெடுக வலியின் சத்தமும்; அழுகுரலின் நடுக்கமும்' #Hersafety
கோவையில் தனது நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த முதுகலை முதலாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவியை கத்தி முனையில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது.

அந்தச் சம்பவம் பலரையும் நடுங்க வைத்திருக்கிறது. ஏர்போர்ட் பின்னாடி உள்ள அந்த இருட்டான காட்டுப் பகுதியில் இரவு 11 மணிக்கு காரில் அமர்ந்து நண்பருடன் பேச என்ன அவசியம் இருக்கிறது? அங்கே ஆள் நடமாட்டம் இருக்காதுங்கிறது அந்தப் பெண்ணின் நண்பருக்குத் தெரியாதா?
அப்படி தெரிந்திருந்தும் இவரை ஏன் அங்கே அழைத்துச் சென்றார்? இரவு அத்தனை மணிக்கு மேல் பேச என்ன இருக்கிறது? அப்படிப் பேசியே தீரவேண்டும் எனில் காரில் போய்க் கொண்டே பேசியிருக்கலாமே? ஆமா, ஆடையின்றி பெண் மயக்க நிலையில் இருந்ததாக சொன்னார்களே உண்மையா? இன்னும் பலப்பல கேள்விகள்!
ஒரு பெண் பாலியல் ரீதியாக ஏதேனும் பிரச்னைகளைச் சந்தித்தால் உண்மையில் இந்தச் சமூகம் முதலில் தன்னுடைய குற்றப்பத்திரிகையை எழுதுவது அந்தப் பெண்ணிடமே! இத்தனைக் கேள்விகளை அந்தப் பெண்ணைப் பார்த்து கேட்கும் நபர்களால் அந்தப் பெண்ணைக் குதறிவிட்டு சென்றவர்களை நோக்கி ஒரு கேள்வியையும் எழுப்பவில்லையே ஏன்?!

` நான்
என் நண்பனுடன் பேசிக் கொண்டிருந்தேன்...
என்னை ஏன் நீங்கள் மூவரும் இழுத்துச் சென்றீர்கள் அண்ணா?
பெண் உறுப்பென்றால் போதுமா...
'ஆணாதிக்கமும் அதிகாரமும் உள்ள என்னை விட நீ
பலமானவளா' என்று நினைத்து வீட்டீர்களா?
என்னை விட்டுவிடுங்கள்!
நான் என் நண்பனுடன் செல்ல வேண்டும்...
நீங்கள் அவனை அடித்த வலியிலும் அவன் என்னைத் தேடிக் கொண்டிருப்பான்...
நாங்கள் நாளையும் சிரித்துப் பேசுவோம்..
அய்யோ... அப்பொழுதும் என்னை இப்படித்தான் துன்புறுத்துவீர்களா?
அவ்வளவு கெஞ்சினேனே...
வலிக்குது அண்ணா என்று கதறியது கேட்கவே இல்லையா உங்களுக்கு?
இப்பொழுது உங்களுடைய போதையிலிருந்து நீங்கள் மீண்டு விட்டீர்கள்!
நான்...
நான்...
நான்...
நீங்கள் குதறியதிலிருந்து எழக் கூட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்...
இனி...
இனி...
இனி...
எப்போதும் போல என் மேல் தானே இந்தச் சமூகம் குறை சொல்லும்!
ஆம்...
குறை சொல்லும்! குறை சொல்லும்!
நீங்களே உயிரோடு இருக்கிறீர்கள்...
எனக்கென்ன?
எனக்கென்ன?
தலை நிமிர்ந்து வாழப் பழகுவேன்!
குண்டுகள் காலோடு நின்றுவிட்டதா...?
இல்லை!
உங்கள் தலைக்குள்ளே இருக்கும் ஆண் மிருகத்தைக்
கொல்லும் வரைக்கும்
எனக்கு நீங்கள் செய்த
அநீதிக்காகப் போராடுவேன்!'
அந்த இருட்டு இடத்தின் மீது இப்போது வெளிச்சம் படர்ந்திருக்கிறது. ஆனால், வழி நெடுக வலியின் சத்தமும்... அழுகுரலின் நடுக்கமும் அங்குள்ள முட் செடிகளைக் கூட கருகச் செய்திருக்கிறது...
நிச்சயம் அந்த மாணவி இதிலிருந்து மீண்டு வருவாள்!

















