செய்திகள் :

SISU Road To Revenge: `ஆடின்னே இருப்பேன்' - மிரட்டும் ஆக்‌ஷன் காட்சிகள்! படமாக வெல்கிறதா?

post image
கடந்த 2022-ம் ஆண்டு வெளியான `சிசு' (SISU) படத்தின் சீக்குவலாக `சிசு - ரோட் டு ரிவெஞ்ச்' திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது.

இரண்டாம் உலகப் போரின் இறுதிக்கட்டத்தில் தன்னுடைய குடும்பத்தை இழந்துவிடுகிறார் ஃபின்லாந்தைச் சேர்ந்த முன்னாள் கமாண்டோ அடாமி கார்பி (ஜால்மரி டாமிலா).

தனது குடும்பத்தின் நினைவாக, மரக்கட்டைகளால் செய்யப்பட்ட அவருடைய இல்லத்தை முழுமையாக தகர்த்துவிட்டு, மற்றொரு அமைதியான இடத்தில் அந்தக் கட்டைகளை வைத்து புதிய வீட்டை எழுப்பத் திட்டமிடுகிறார். அதற்காக அத்தனை மரக்கட்டைகளையும் வண்டியில் ஏற்றிக்கொண்டு செல்கிறார்.

SISU Road To Revenge Review
SISU Road To Revenge Review

ரஷ்யா ஆக்கிரமித்திருக்கும் ஃபின்லாந்து எல்லை பகுதிக்கு அடாமி வந்திருப்பதை அறியும் ரஷ்ய ராணுவம், அவரை அழிக்க அவருடைய பழைய எதிரியை அனுப்புகிறார்கள்.

அவர்கள் அடாமி கார்பியை அழிக்க எப்படியான முயற்சிகளை கையிலெடுக்கிறார்கள், மரணத்தை நெருங்காமல் மீண்டும் மீண்டும் எப்படி அவர் எழுந்து வருகிறார், இறுதியில், நினைத்தபடி மற்றொரு பகுதியில் வீட்டைக் கட்டினாரா என்பதுதான் இந்த சீக்குவலின் கதை.

மரணம் என்ற சொல்லை தனது அகராதியிலிருந்து மொத்தமாக அழித்து, எதிரிகளின் பிடியிலிருந்து லாகவமாகத் தப்பிக்கும் இடம், குடும்பத்தை எண்ணி கண்கலங்கும் இடம் எனப் படத்தை முழுமையாகத் தோள்களில் சுமந்திருக்கிறார் ஜால்மரி டாமிலா.

குருதி சொட்டும் வேளையிலும், 'ஆடின்னே இருப்பேன்' எனத் துறுத் துறுவென ஓடும் பகுதிகளிலும் சர்ப்ரைஸ் செய்கிறார் இந்த யங் மேன்!

SISU Road To Revenge Review
SISU Road To Revenge Review

ஒப்பனைகள் இவருடைய முகத்தை மறைக்கும் காட்சிகளிலும் கண்களால் உணர்வைக் கடத்துகிறார்.

வெவ்வேறு வழிகளில் அடாமியைக் கொல்லத் துடிக்கும் இடம், பிறகு அவருக்கே பயந்து ஓடும் இடம் என ஸ்டீபன் லாங், நடிப்பில் வெவ்வேறு முகங்களைக் காட்டி மிளிர்கிறார். கூல் மோடில் அவர் செய்யும் சின்னச் சின்ன ஸ்டைல்களும் ரசிக்க வைக்கின்றன.

குருதி தெறிக்கும் களத்தில் தோட்டாக்களின் வேகத்திற்கு இணையாகப் பறந்து படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மிகா ஒரசமா. அடாமியின் மனவோட்டத்தை நமக்குக் கடத்துவதற்கு இவர் கையாண்டிருக்கும் யுக்திக்கும் பாராட்டுகள்.

சாப்டர்களாகப் பிரித்து ஆக்‌ஷன் காட்சிகளை அடுக்கிய படத்தொகுப்பாளர் ஜூகோ விரோலைனன், இந்தப் படம் கோரும் நிதானத்தையும் கொடுத்திருக்கிறார்.

SISU Road To Revenge Review
SISU Road To Revenge Review

1950-களின் உடைகள், அப்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், ரயில்கள், டேங்கர்கள் என இந்தப் பீரியட் டிராமாவுக்கு ஆடை வடிவமைப்பாளர், கலை இயக்குநர் எனத் தொழில்நுட்பக் குழுவினர் நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.

வாவ் சொல்ல வைக்கும் ஸ்டன்ட் காட்சிகளுக்கு பெரும் சிரத்தைக் கொடுத்து உழைத்திருக்கும் ஆக்ஷன் இயக்குநர்களுக்கு தங்க மெடல்களைக் கொடுக்கலாம்.

ஆர்ப்பாட்டமில்லாமல் ஹம்மிங்கில் மிரட்டும் பின்னணி இசையைத் தந்திருக்கும் ஜூரி செப்பா, டுமாஸ் வெயினோலா கூட்டணி எமோஷனல் காட்சிகளிலும் மனமுருக வைத்திருக்கிறார்கள்.

முதல் பாகத்தில் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் களத்திலேயே நின்று கதை சொல்லிய இயக்குநர் ஜால்மரி ஹெலண்டர், இரண்டாம் பாகத்தில் கொஞ்சம் சென்டிமெண்ட் டச் வைத்துக் கதை சொல்லியிருக்கிறார்.

வசனங்கள் இல்லாமல் அடாமியின் நடவடிக்கைகள் மூலமாகவே அவருக்கு மாஸ் கூட்டிய ஐடியா, இந்த ஆக்‌ஷன் டிராமாவைத் தனித்து நிற்கச் செய்திருக்கிறது.

பரபர வேகம் இல்லாமல் நிதானமாக நகரும் இந்த 'சிசு', சோர்வாகும் சமயங்களில் சில சுவாரஸ்யமான விஷயங்களால் நம்மை சர்ப்ரைஸ் செய்கிறது.

SISU Road To Revenge Review
SISU Road To Revenge Review

அடாமிக்கு மரணம் என்பதே கிடையாது என்பதெல்லாம் முதல் பாகத்திலேயே தெரிந்த விஷயம்தான்! அதற்கென அதை நிரூபிக்க மீண்டும் மீண்டும் மரணத்திற்கு அருகில் அவரைக் கொண்டுசெல்வது, மீள்வது போன்றவை அடாமியுடன் பார்வையாளர்களையும் சேர்த்தே சோதிக்கின்றன.

அதேபோல, ட்விஸ்ட்கள் பெரிதளவில் இல்லாமல் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் பழிவாங்கும் கதை, சற்றே திரைக்கதையை 'டல்'லாக வைத்து க்ளைமாக்ஸ் காட்சியையும் முன்பே கணிக்க வைத்துவிடுகிறது.

நம்பக்கூடிய ஆக்‌ஷன் விஷயங்கள் இருப்பதெல்லாம் ஓகே, ஆனால், பல டன் எடையுள்ள டேங்கர் எப்படிப் பாஸ் அவ்வளவு சாதாரணமாகப் சம்மர்சால்ட் அடிக்கும்?

இப்படியான சில குறைகள் இருந்தாலும், முதல் பாகத்தைப் போல இதிலும் புதிய இலக்கணம் கொண்டு இந்த ஆக்‌ஷன் கதையைச் சொன்ன விதம் பாராட்ட வைக்கிறது.

Tom Cruise: "சினிமா எனக்கு தொழில் அல்ல, வாழ்க்கை" - முதல் ஆஸ்கரை வென்ற நாயகன்!

ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் கடந்த ஞாயிறு (நவ. 16) அன்று நடந்த கவர்னர்ஸ் விருதுகள் விழாவில் தனது முதல் ஆஸ்கரைப் பெற்றுள்ளார். அவருடன் நடன இயக்குநர் மற்றும் நடிகர் டெபி ஆலன் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பா... மேலும் பார்க்க

Micheal Jackson: தயாராகும் மைக்கேல் ஜாக்சன் பயோபிக்! - மைக்கேல் ஜாக்சனாக நடிக்கும் அண்ணன் மகன்

மைக்கேல் ஜாக்சனின் பயோபிக் திரைப்படமான `மைக்கேல்' படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். கடந்தாண்டு ஜனவரி மாதம் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகியிருந்தது. மைக்கேல் ஜாக்சனின் சகோதரரான ஜெர்... மேலும் பார்க்க