சென்னை: புதிதாக கட்டப்பட்டுள்ள விடற்றோருக்கான இரவு நேர காப்பகம் – திறந்து வைத்த ...
Sreenivasan: "'விஷம் சாப்பிடாமல் இருப்பதுதான் லாபம்' என்பார்!" - பகிர்கிறார் ஸ்ரீனிவாசனின் நண்பர்!
மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக் குறைவால் கடந்த சனிக்கிழமை இயற்கை எய்தினார். 69 வயதானவர் கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த சனிக்கிழமை திடீரென இவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டிருக்கிறார். அங்கு அவருடைய உயிர் பிரிந்தது.

தமிழ், மலையாளம் என இரு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். ஸ்ரீனிவாசனை நடிகராக, இயக்குநராக, திரைக்கதையாசிரியராக நமக்குத் தெரியும்.
ஆனால், அவர் சினிமாவைத் தாண்டி இயற்கை விவசாயம் மீதும் ஆர்வம் கொண்டிருந்தார்.
ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை விரும்பும் ஸ்ரீனிவாசன், கடந்த 2012-ம் ஆண்டு இயற்கை விவசாயம் மீது கொண்ட ஆர்வத்தினால் கொச்சிக்கு அருகே உள்ள கிராமத்திற்கு குடிபெயர்ந்தார்.
ஸ்ரீனிவாசனுடனான நினைவுகள் குறித்தும், விவசாயம் மீதிருந்த அவருடைய ஆர்வத்தைப் பற்றியும் அவருடைய நண்பர் பிலிப் மனோரமா ஊடகத்திடம் பகிர்ந்திருக்கிறார்.
அவர், “ஸ்ரீனியேட்டன் என் பண்ணைக்கு வந்து இயற்கை விவசாயம் குறித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பார். உணவே மருந்து என்று அவர் உறுதியாக நம்பினார்.
ரசாயன பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதை அவர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே இல்லை. அவர் மண்ணை உயிருள்ள ஒன்றாகக் கருதினார். இயற்கை விவசாயம் லாபத்தைக் கொடுக்காது என்று எச்சரித்த போதும் அவர் பின்வாங்கவில்லை.
‘லாபம் என்பது பணத்தில் மட்டுமல்ல, என் குழந்தைகளும் நண்பர்களும், என்னைச் சுற்றியுள்ளவர்களும் விஷம் சாப்பிடாமல் இருப்பதுதான் லாபம் என நம்புகிறேன்’ எனக் கூறினார்.

ஒருமுறை விவசாயம் அவருக்கு ஏன் இவ்வளவு முக்கியம் என்று கேட்டதற்கு, ‘என் தந்தை ஆசிரியராக இருந்தாலும் விவசாயத்தை விரும்பினார். சிறுவயதில் என்னை அவர் வயலுக்கு அழைத்துச் சென்று உதவி செய்யச் சொல்வார். அதற்காக அவர் சிறிய பாக்கெட் மணி தருவார்.
அதை நான் மிட்டாய் வாங்க செலவழிப்பேன்’ எனக் கூறினார். அங்கிருந்துதான் விவசாயம் மீது அவருக்கு ஆர்வம் வந்தது. திரைத்துறைக்குள் அவர் பிஸியான பிறகும் விவசாயியாகவே இருக்க விரும்பினார்.
இயற்கை விவசாயத்தில் இழப்புகள் வருவது இயல்பு. நாங்கள் பெரிய நஷ்டங்களைச் சந்தித்திருக்கிறோம். ஆனால் ஸ்ரீனியேட்டன் எப்போதும் அமைதியாக இருப்பார்.
கவலைப்பட வேண்டாம், எல்லாம் மாறும் என்று உறுதியளிப்பார். எங்களுக்கெல்லாம் அண்ணனைப் போன்றவராக இருந்தவர்.” எனக் கூறியிருக்கிறார்.



















