BB TAMIL 9: DAY 44: பாருவிடம் வில்லங்க கேள்வி கேட்ட கம்ரூதீன்; ரைமிங் ஓகே, என்டர...
SS Rajamouli: `அனுமனை அவமதிக்கும் பேச்சு' - இயக்குநருக்கு எதிராக இந்து அமைப்புகள் புகார்
திரைப்பட இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலி மீது ராஷ்டிரிய வானர சேனா அமைப்பினர் ஹைத்ராபாத்தில் உள்ள சரூர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சமீபத்தில் நடந்த வாரணாசி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்து கடவுள் ஹனுமான் பற்றி அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படம் வாரணாசி. இதன் டீசர் வெளியீட்டு விழா ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. இதில் ரசிகர்கள், சினிமாதுறையினர் என 50,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
SS Rajamouli பேசியது என்ன?
"கடவுள்கள் மீது எனக்கு அதிக நம்பிக்கை இல்லை. இது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம். நான் கடவுளை நம்புவதில்லை.
என் அப்பா வந்து, 'ஆஞ்சநேயர் உனக்கான எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்' என்று சொன்னார். ஆனால் பிரச்னை ஏற்பட்டபோது, அவரிடம் (தந்தையிடம்) குரலை உயர்த்தி, 'இப்படித்தானா என்னை வழிநடத்துகிறார்?' என்று கேட்டேன்.

என் மனைவி ஆஞ்சநேயரின் பெரிய பக்தை. அவரை தன் நண்பர் போல நினைத்து, அவரிடம் பேசுவார். 'இப்படித்தான் அவர் காரியங்களைச் செய்வாரா?' என்று அவரிடமும் என் கோபத்தை வெளிப்படுத்தினேன்." எனப் பேசியிருந்தார் ராஜமௌலி.
ராஜமௌலியின் கருத்துகள் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும், திரைப்படத் துறையில் இந்து தெய்வங்களை அவமதிக்கும் போக்கு அதிகரித்து வருவதாகவும் ராஷ்ட்ரிய வானரசேனா அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
வானரசேனாவுடன் கௌ ரக்ஷக் சங்கமும் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளது. புகாரில் 'மத வெறுப்பைத் தூண்டும் நோக்கத்துடன்' அவர் பேசியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.



















