`பொய் வழக்கு; தமிழ்நாடு உள்துறை ரூ.8 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும்’ - உயர் நீ...
TVK Vijay: `அதிருப்தி அணி, பாஜக-வுக்கு நோ!' - தவெக-வில் ஐக்கியமான செங்கோட்டையன்; பின்னணி என்ன?
எடப்பாடி Vs செங்கோட்டையன்
எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அ.தி.மு.க-வில் சக்திவாய்ந்த தலைவராகச் செங்கோட்டையன் இருந்து வந்தார். அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்தபிறகு செங்கோட்டையனின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் எடப்பாடியின் ஆதரவாளர்கள் பதவிகளுக்குக் கொண்டுவரப்பட்டனர். பிறகு நடந்த தேர்தலில் அந்தியூரில் அ.தி.மு.க-வுக்கு தோல்வி ஏற்பட்டது. அதற்குச் செங்கோட்டையன்தான் காரணம் எனச் சொல்லி, அவருக்குத் தெரியாமல் கட்சிக்குள் மீண்டும் மாற்றங்கள் செய்யப்பட்டன.

இதில் செங்கோட்டையன் அப்செட்டானார். அப்போது கோவையில் எடப்பாடிக்கு நடந்த அத்திக்கடவு -அவிநாசி திட்டப் பாராட்டு விழாவைப் புறக்கணித்தார். அதற்கு அழைப்பிதழில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இல்லையெனக் கூறினார். கூடவே டெல்லி பா.ஜ.க தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மூத்த தலைவர்களின் அறிவுறுத்தலால் அமைதியாக இருந்தார். இந்தச் சூழலில்தான், 'அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கும் முயற்சியை 10 நாள்களில் எடப்பாடி தொடங்க வேண்டும்' எனச் செங்கோட்டையன் கெடு விதித்தார்.
இதையடுத்து செங்கோட்டையனிடமிருந்த அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பதவிகளைப் பறித்து அதிர்ச்சி கொடுத்தார், எடப்பாடி. இதையடுத்து டெல்லிக்குப் புறப்பட்டார், செங்கோட்டையன். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, 'ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க வேண்டும்' எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல் வெளியானது. பிறகு முத்துராமலிங்க தேவரின் குருபூஜையில், ஓ.பி.எஸ், டிடிவி ஆகியோருடன் இணைந்து செங்கோட்டையன் மரியாதை செலுத்தினார்.

இது அ.தி.மு.க-வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து செங்கோட்டையனை நீக்கினார் எடப்பாடி. இதையடுத்து செங்கோட்டையன் த.வெ.க-வில் இணையப்போகிறார் என்று சில நாள்களாவே தகவல் பரவியது. இப்படியான சூழலில்தான் 26.11.2025 அன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததும் பரபரப்பு மேலும் எகிறியது. ஒரு வழியாக 27.11.2025 அன்று பனையூரில் உள்ள த.வெ.க அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜய்யின் முன்னிலையில் அக்கட்சியில் செங்கோட்டையன் இணைந்தார்.
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!'
பிறகு தனது ஆதரவாளர்களுடன் "வேற்றுமைகளைக் களைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையைக் கடைப்பிடிப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்" என்று விஜய் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அவருக்குத் த.வெ.க-வின் உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட அமைப்புச் செயலாளராகவும் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக "எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் அது நடைபெறவில்லை. நான் என்று ஒருவன் நினைத்தால், ஆண்டவன் பார்த்துக்கொள்வான். தி.மு.க வேறு, அ.தி.மு.க வேறு அல்ல. அவர்கள் ஒன்றாக இணைந்துதான் பயணம் செய்கிறார்கள். இளவல் விஜய் மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளார். தமிழகத்தில் ஒரு மாற்றம் வேண்டும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். 2026-ல் மாபெரும் புரட்சி உருவாகி வெற்றி என்ற இலக்கை இளவல் விஜய் எட்டுவார். அ.தி.மு.க-வை ஒருங்கிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு நான் கெடு விதிக்கவில்லை. நீங்களாகவே செய்தி போட்டுவிட்டீர்கள். என்னை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கில் அவரும் காய் நகர்த்திவிட்டார்" என்றார், செங்கோட்டையன்.
நம்பிக்கைக்குரியவராக..
இ துகுறித்து தனது எகஸ் பக்கத்தில் விஜய், "20 வயது இளைஞராக இருக்கும் போதே எம்.ஜி.ஆர்-யை நம்பி அவரது மன்றத்தில் சேர்ந்தவர். அந்தச் சிறுவயதில் எம்.எல்.ஏ என்ற பெரிய பொறுப்பை ஏற்றவர். அதன் பின் அவருடைய பயணத்தில், அந்த இயக்கத்தின் இரு பெரும் தலைவர்களுக்குப் பெரிய நம்பிக்கைக்குரியவராக அரசியல் களத்தில் இருந்தவர். இப்படி 50 ஆண்டுகளாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன், இன்று அவரது அரசியல் அனுபவமும், அவருடைய அரசியல் களப்பணியும் நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்துக்குப் பெரிய உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன், அவருடன் இணைந்து பணியாற்ற நம்முடன் கைகோர்க்கும் அனைவரையும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன். நல்லதே நடக்கும்… நல்லதே நடக்கும்… நல்லது மட்டுமே நடக்கும்" என்றார்.

'கைவிட்ட பா.ஜ.க.. கடுப்பான செங்கோட்டையன்..'
இதன் பின்னணி குறித்து பேசும் விவரப்புள்ளிகள், "ஆரம்பத்தில் பா.ஜ.கதான் செங்கோட்டையனை இயக்கியது. ஆனால் டெல்லி தலைமை திட்டமிட்டதுபோல் அனைவரையும் ஒன்றிணைக்கும் முடிவுக்கு எடப்பாடி ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் அவரைப் பா.ஜ.க கைவிட்டுவிட்டது. இதனால் செங்கோட்டையன் அப்செட்டாகிவிட்டார். எடப்பாடி, பா.ஜ.க-வினரை எச்சரிக்கும் விதமாகவே வெளிப்படையாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து எடப்பாடிக்கு கெடு விதித்தார். அப்போதும் இருதரப்பும் அவரை அழைத்துச் சமாதானம் செய்யவில்லை. அதேநேரத்தில் ஏற்கெனவே தனக்கு எதிராகக் குரல் கொடுத்த சசிகலா, ஓ.பி.எஸ், டி.டி.வியை நீக்கியதுபோலச் செங்கோட்டையனையும் நீக்கினார். மேலும் ஒருங்கிணைந்த அ.தி.மு.க உருவாக வேண்டும் என விரும்பும் சசிகலா, ஓ.பி.எஸ், டி.டி.வி, செங்கோட்டையன் இடையிலும் ஒற்றுமை இல்லை. இதையடுத்துதான் அவர் த.வெ.க-வில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறார்" என்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், "செங்கோட்டையன் த.வெ.க-வில் இணைந்ததற்கு பின்னால் பா.ஜ.க இல்லை. ஏனெனில் தே.ஜ கூட்டணியில் அ.தி.மு.க இருக்கிறது. அந்தக் கட்சியிலிருந்துதான் செங்கோட்டையன் வெளியில் சென்றிருக்கிறார். தே.ஜ கூட்டணிக்குத் தலைமை தாங்கும் பா.ஜ.க-வே தங்கள் கூட்டணி பலவீனப்படும் வேலைகளைச் செய்யாது என நம்புகிறேன். அதேநேரத்தில் அனைவரையும் ஒன்றிணைத்து அ.தி.மு.கவை பலப்படுத்துவேன் என்றுதான் செங்கோட்டையன் சொல்லி வந்தார். பிறகு எப்படி இந்த முடிவை உடனடியாக எடுத்தாரென்று தெரியவில்லை.
அவர் 50 ஆண்டுக்காலம் அரசியலில் அனுபவம் உள்ளவர். திடீரென உருவாகும் ஒரு கட்சி உடனடியாக ஆட்சியைப் பிடிக்க முடியாது என அவருக்கு நன்கு தெரியும். ஆக இந்த முடிவு எடப்பாடியை பழிவாங்கும் செங்கோட்டையனின் மனநிலையைத்தான் வெளிச்சம்போட்டு காட்டுகிறது." என்றார்.

















