"நன்றி திருவனந்தபுரம்"- சிபிஎம் கோட்டையைக் கைப்பற்றிய பாஜக; வாழ்த்து தெரிவித்த ப...
Vikram Prabhu: "ஒரு 'கும்கி' இருந்தால் போதும்!" - 'கும்கி 2' குறித்து விக்ரம் பிரபு!
விக்ரம் பிரபு நடிகராக அறிமுகமான திரைப்படம் 'கும்கி'. பிரபு சாலமன் இயக்கத்தில், டி.இமான் இசையில் கடந்த 2012-ம் ஆண்டு அத்திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
அப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த மாதம் வெளியானது. 2016-ம் ஆண்டிலேயே அப்படத்திற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார்கள்.

அறிமுக நடிகர் மதியை கதாநாயகனாக வைத்து அப்படத்தை எடுத்திருந்தார் பிரபு சாலமன். தற்போது விக்ரம் பிரபு, அவர் நடித்துள்ள 'சிறை' படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
கோவையில் இப்படத்திற்காக செய்தியாளர்களைச் சந்தித்தவர் 'கும்கி 2' திரைப்படம் குறித்துப் பேசியிருக்கிறார்.
'கும்கி 2' குறித்து விக்ரம் பிரபு, "8 வருடத்திற்கு முன்பே அந்தப் படத்தை எடுத்துவிட்டார்கள். அந்த சமயத்திலேயே படத்தைப் பற்றி என்கிட்ட சொன்னாங்க.
அவங்க குடும்பத்துக்குள்ளவே அந்தப் படத்தைச் செய்வதாகவும் என்கிட்ட சொன்னாங்க. ஒரு படத்தை எடுத்தப் பிறகு மறுபடியும் அதைத் தொட வேண்டுமானு எனக்குள்ள எப்போதும் ஒரு கேள்வி வரும். 'கும்கி' முதல் பாகத்திலேயே கதை முடிந்துவிட்டது.
மறுபடியும் அதைத் தொட்டா எப்படி வொர்க் ஆகும்னு எனக்குத் தெரியல. அதைப் பத்தி பிரபு சாலமன் சாரும் என்கிட்ட பேசல.

நானும் அதைப் பற்றிக் கேட்கல. 'கும்கி' முதல் பாகத்துக்கு எப்படி வரவேற்பு கிடைச்சதுனு எல்லோருக்கும் தெரியும். அந்தக் கதையின் முடிவு அதுதான்னு நானும் அவரும் முடிவு பண்ணினோம்.
'கும்கி' என்கிற பெயரை வச்சு இன்னொரு படம் எடுத்தாங்கனு தெரியும். எனக்கும் அதுக்கும் சம்மந்தம் கிடையாது. அதில் என்னைச் சம்மந்தப்படுத்திக்கணும்னு நான் விரும்பல. ஒரு 'கும்கி' இருந்தால் போதும். நான் ஷூட்டிங்ல இருந்ததுனால 'கும்கி 2' படத்தை இன்னும் பார்க்கல." எனக் கூறினார்.


















