Messi Tour of India: "நிகழ்ச்சி திட்டமிடலில் AIFF ஈடுபடவில்லை" - இந்திய கால்பந்த...
"நன்றி திருவனந்தபுரம்"- சிபிஎம் கோட்டையைக் கைப்பற்றிய பாஜக; வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!
கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 9-ம் தேதி மற்றும் 11-ம் தேதிகளில் நடைபெற்றன. 14 வருவாய் மாவட்டங்களில் 14 மாவட்ட ஊராட்சி தலைவர்கள், 6 மாநகராட்சி மேயர்கள், 86 நகராட்சி தலைவர்கள், 152 ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், 941 ஊராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தமுள்ள 1200 உள்ளாட்சி அமைப்புகளில் 23,576 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும் கருத்து தெரிவித்த கேரளாவை ஆளும் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன், "இந்த உள்ளாட்சி தேர்தலில் சரித்திர முன்னேற்றம் ஏற்படும்" என கருத்து தெரிவித்திருந்தார். ஆட்சி மாற்றத்துக்கான தொடக்கமிடும் வகையில் இந்த உள்ளாட்சி தேர்தல் அமையும் என எதிர்க்கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். அதே சமயம் மக்கள் மாற்றத்தை குறித்து சிந்திப்பார்கள் என பா.ஜ.க கருத்து தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் உள்ளாட்சிகளில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் சுமார் 30 ஆண்டுகளாக சி.பி.எம் வசம் இருந்த திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றி உள்ளது. 101 வார்டுகள் கொண்ட திருவனந்தபுரம் மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. விழிஞ்ஞம் வார்டில் வேட்பாளர் மரணத்தால் தேர்தல் நடைபெறவில்லை. 100 வார்டுகளில் 50 வார்டுகளை கைப்பற்றியது பா.ஜ.க கூட்டணி. கேரள மாநில சரித்திரத்தில் முதன் முறையாக பா.ஜ.க ஒரு மாநகராட்சியில் பெரும்பான்மை பெற்றுள்ளது. முன்னாள் போலீஸ் டி.ஜி.பி ஸ்ரீலேகா திருவனந்தபுரம் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2020 உள்ளாட்சி தேர்தலில் 53 சீட்டுகளை பெற்ற சி.பி.எம் கூட்டணி இப்போது 29 சீட்டுகளை பிடித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 19 வார்டுகளை கைப்பற்றி உள்ளது.

இதுகுறித்து பிரதமர் நரேந்திரமோடி எக்ஸ் தளத்தில் 'நன்றி திருவனந்தபுரம்' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
திருவனந்தபுரம் மாநகராட்சியில் பா.ஜ.க-என்.டி.ஏ கூட்டணிக்கு பெரும்பான்மை அளித்திருப்பது கேரள அரசியலில் முக்கியமான தருணமாகும். மாநிலத்தின் வளர்ச்சி, தேவைகளை பா.ஜ.க-வால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். சி.பி.எம் மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளை நம்பி கேரள மக்கள் சோர்ந்துவிட்டனர். பா.ஜ.க கூட்டணியிடம் இருந்து மக்கள் நல்லாட்சியை எதிர்பார்க்கிறார்கள்கள்.
துடிப்புமிக்க நகரத்துக்கான வளர்ச்சிக்கு பா.ஜ.க துணை நிற்கும். என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டிசம்பர் 21-ம் தேதி முதல் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பதவிகளை ஏற்றுக் கொள்ள உள்ளனர்.














