"நன்றி திருவனந்தபுரம்"- சிபிஎம் கோட்டையைக் கைப்பற்றிய பாஜக; வாழ்த்து தெரிவித்த ப...
`சவுக்கு சங்கர் கைது அப்பட்டமான துன்புறுத்தல்' - கார்திக் சிதம்பரம் கருத்து!
யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று (டிசம்பர் 13) அவரது வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்திக் சிதம்பரம்.

தனது யூடியூப் சேனலில் அவ்வப்போது திமுக அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் சவுக்கு சங்கர். இதன் காரணமாக, அவர் மீது வெவ்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவதூறாக பேசி தன்னிடம் ரூ. 2 லட்சம் பறித்துவிட்டதாக சினிமா தயாரிப்பாளர் ஆயிஷா என்பவர் கடந்த மாதம் சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது புகாரளித்திருந்தார்.
இந்த வழக்கில் அவரைக் கைது செய்ய ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று காலையில் காவல்துறையினர் சென்றிருக்கிறார்கள். வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் போலீஸாரால் அவரை உடனே கைது செய்ய முடியவில்லை.

தீயணைப்பு படையினர் உதவியுடன் அவரது வீட்டுக்கதவை உடைத்து திறந்தனர். பின்னர், சவுக்கு சங்கர் ஆதம்பாக்கம் வீட்டில் வைத்து இன்று (டிச., 13) மதியம் கைது செய்யப்பட்டார்.
கைதாவதற்கு முன் வீட்டுக்குள் இருந்த சவுக்கு சங்கர், தன்னை கைது செய்வதற்காக போலீஸார் வந்துள்ளதாக, வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ பேசுபொருளானது.
இந்தநிலையில் காங்கிரஸ் எம்.பி கார்திக் சிதம்பரம், "நான் சவுக்கு சங்கரை ஆதரிக்கவில்லை என்றாலும், அவர் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவது அப்பட்டமான துன்புறுத்தலாகும்." என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
















