'மன்னிச்சிடுங்க.!' - கலவரமான கொல்கத்தா மைதானம்; மெஸ்ஸி, ரசிகர்களிடம் மன்னிப்பு ...
ஊட்டி: மூடப்பட்ட Hindustan Photo Films தொழிற்சாலையில் மண் திருட்டு; தொடரும் அத்துமீறல்; காரணம் என்ன?
தென்னாசியாவின் முதல் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 1960-ம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டது. அரசுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை சுமார் 350 ஏக்கர் பரப்பளவுள்ள வனத்துறை நிலத்தில் இயங்கி வந்தது.

இந்தப் பிரமாண்ட தொழிற்சாலையில் 5,000க்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தனர். மருத்துவத்திற்கான எக்ஸ்ரே ஃபிலிம் உற்பத்தியில் இந்த ஆலை சிறந்து விளங்கி வந்திருக்கிறது. புதிய பொருளாதாரக் கொள்கை, கலர் ஃபிலிம் தயாரிக்கும் தொழில்நுட்பமின்மை போன்ற பல காரணங்களால் படிப்படியாக நலிவடையத் தொடங்கி, 2018-ல் இந்தத் தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்பட்டது.
கைவிடப்பட்ட இந்தத் தொழிற்சாலை வளாகத்திற்குள் கடந்த சில ஆண்டுகளாக இரவு நேரங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாக உள்ளூர் மக்கள் கூறி வந்தனர். மேலும், ஃபிலிம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட அரிய உலோகங்களைத் தேடி இரவில் நுழையும் நபர்கள் மண்ணை மூட்டை மூட்டையாக அள்ளிக்கொண்டுச் செல்வதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில், வனத்துறையினர் மேற்கொண்ட சோதனையில் கடந்த ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் உலோகக் கலவை மண் திருட்டில் ஈடுபட்ட 7 நபர்களைக் கைது செய்தனர். கைது நடவடிக்கைகளுக்குப் பிறகும் தொடர்ந்து உலோக மண் திருட்டு நடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் நடைபெற்ற சோதனையில் மேலும் நேற்று முன்தினம் 7 நபர்களை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், "வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை பகுதிக்குள் கடந்த 11-ம் தேதி இரவு அத்துமீறி நுழைந்து திருட்டுத்தனமாக மண் மற்றும் கற்களை உடைத்த குற்றத்திற்காக சுரேஷ், அப்பாஸ் அருண், பஷீர், சீனி, சிவகுமார், மணி உட்பட ஊட்டியைச் சேர்ந்த 7 நபர்களைக் கையும் களவுமாகக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்றனர்.

இந்தத் தொழிற்சாலை ஆய்வகத்தில் பணியாற்றி வந்த முன்னாள் அதிகாரி மோகன்ராஜ் பேசுகையில், "வெள்ளிக் கட்டிகளில் நைட்ரேட் கலந்து சில்வர் நைட்ரேட்டாக மாற்றப்படும். ஃபிலிம் தயாரிப்பில் இந்தச் சேர்மம் முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டது. ஆய்வகத்திலிருந்து வெளியேறும் கழிவில் தங்கம், வெள்ளி போன்றவை இருக்கும்.
பல சமயங்களில் மறுசுத்திகரிப்பு செய்து எடுத்துக் கொள்ளப்படும். அதிலும் மீதமான கழிவுகள் ஒரு இடத்தில் சேகரித்து வைக்கப்படும். அதை அறிந்த கும்பல்தான் தங்கம், வெள்ளி கலந்த மண்ணைத் திருடிச் சென்று அதிலிருந்து இந்த உலோகங்களைப் பிரித்தெடுக்கிறார்கள்" என்றார்.

















