ஐஸ்வர்யா ராய்: "பொறுத்துக்கொள்ள முடியாது" - விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு அபி...
நெல்லை : அரசு உதவி பெறும் மகளிர் பள்ளி மாணவிகள் மது அருந்திய அதிர்ச்சி வீடியோ - 6 பேர் சஸ்பெண்ட்!
`ஆக்ஸ்ஃபோர்ட் ஆஃப் சவுத் இந்தியா’ என நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை வர்ணிப்பார்கள். அந்த அளவுக்கு பாளையங்கோட்டையில் கல்வி நிறுவனங்கள் அதிகமாக இருக்கின்றன.
ஒழுக்கத்துடன் கூடிய தரமான கல்வி வழங்கப்படுவதால் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் இங்கு வந்து கல்வி பயில்வது வழக்கம். இந்த நிலையில், அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியொன்றில் மாணவிகள் மது குடித்த வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஆயிரக்கணக்கான மாணவிகள் படிக்கும் அந்த பள்ளியில் சில தினங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

பள்ளி இடைவேளை நேரத்தின் போது வகுப்பறை ஒன்றில் வட்டமாக அமர்ந்துள்ள மாணவிகள், தங்களின் கரங்களில் மதுவுடன் கூடிய கிளாஸை பிடித்துள்ளனர். பின்னர் ஒரு மாணவி சியர்ஸ் அடிக்குமாறு கேட்கவும் அனைத்து மாணவிகளும் கிளாஸை தூக்கிக் காட்டுகின்றனர்.
மது குடிக்கும் மாணவிகள் மட்டுமல்லாமல் வேறு சில மாணவிகளும் அந்த இடத்தில் நின்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர். வேறு சில மாணவிகள் இந்த சம்பவம் பற்றி அறிந்த போதிலும் அதை கண்டுகொள்ளாமல் வகுப்பறையில் இருந்து வெளியே செல்கின்றனர்.
பள்ளியின் வகுப்பறைக்குள் நடந்த மாணவிகள் மது குடிக்கும் சம்பவம் வெளியாகி இருப்பது பெற்றோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இது தொடர்பாக பெற்றோர் பலரும் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் உடனடியாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அப்போது வகுப்பறைக்குள் மாணவிகள் மது குடித்த சம்பவம் உண்மைதான் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோரை வரவழைத்த பள்ளி நிர்வாகம், நடந்த சம்பவம் குறித்து பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 10 மாணவிகள் ஈடுபட்டுள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் வீடியோவில் மதுவுடன் அமர்ந்திருக்கும் ஆறு மாணவிகளை தற்போது பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

மேலும் இந்த விவகாரத்தில் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் தெரிவித்தனர். மாணவிகளுக்கு மது கிடைத்தது எப்படி? அதை வாங்கி கொடுத்தது யார் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை திரட்டி வருவதாகவும், அதன் பின்னரே முழு உண்மையையும் தெரியப்படுத்த முடியும் எனவும் பள்ளி சார்பாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர் தரப்பில் கூறுகையில், " பள்ளி நிர்வாக்குழுவில் நிலவும் கோஷ்டி பூசல் காரணமாக பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லை. அத்துடன், ஆசிரியர்களுக்கு இடையேயும் கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளதால் மாணவர்களை கண்காணிப்பதில் மெத்தனப் போக்கு நிலவுகிறது" எனத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பற்றி தெரிய வந்ததும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள மாணவிகளை மனநல மருத்துவ குழுவினர் தனித்தனியே சந்தித்து கவுன்சிலிங் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி வகுப்பறை உள்ளேயே மாணவிகள் மது கொடுத்த விவகாரம் கல்வி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













