'கவுன்டவுன் ஸ்டார்ட் ஆகி விட்டது, திமுகவை யாராலும் காப்பாற்ற முடியாது' - நயினார...
சிம்ஸ் மருத்துவமனை; 29 வயது இளைஞர் மிகவும் அரிதான தொடர் பக்கவாத பாதிப்பிலிருந்து காப்பாற்றப்பட்டார்
மூளையில் ஏற்பட்ட இரத்த உறைவால் 29 வயது இளைஞர் ஒருவருக்கு மீண்டும் மீண்டும் ஏற்பட்ட பக்கவாதத்திற்கு, சென்னையின் முன்னணி மருத்துவமனையான சிம்ஸ் மருத்துவமனை வெற்றிகரமாக சிகிச்சையளித்துள்ளது.
மேலும், அவரது இதயம் மற்றும் காலிலும் இரத்த உறைவுக் கட்டிகள் கண்டறியப்பட்டு, அவற்றுக்கும் உடனடியாக சிகிச்சையளிக்கப்பட்டதன் மூலம் அந்த உறுப்புகளும் பாதிப்பிலிருந்து காப்பாற்றப்பட்டன.
இவ்வாறு ஒரே நபருக்கு மூன்று முக்கிய உறுப்புகளில் இரத்தக் கட்டிகள் உருவாவது மிகவும் அரிதான ஒரு நிகழ்வாகும். குறிப்பாக, ஒரு இளம் வயதினருக்கு இரண்டாவது முறையாக பக்கவாதமும், அதனுடன் ஒரே நேரத்தில் பல உறுப்புகளில் இரத்த உறைவும் ஏற்படுவது என்பது மிகவும் விதிவிலக்கான, அரிதான மருத்துவ நிகழ்வாகக் கருதப்படுகிறது.

இயல்புக்கு மாறான இரத்தக் கட்டி உருவாவதற்கான ஆபத்தை அதிகரிக்கும் ஒரு தன்னுடல் எதிர்ப்பு பாதிப்பான *APLA (ஆன்டிபாஸ்போலிப்பிட்* *ஆன்டிபாடி சிண்ட்ரோம்)* இந்த நோயாளிக்கு இருந்தது முன்னரே உறுதி செய்யப்பட்டிருந்தது. இவருக்கு 2022-ம் ஆண்டில், தனது 26 வயதில், முதல் முறையாக பக்கவாதம் ஏற்பட்டது. இந்த பக்கவாத பாதிப்பு மிகப் பெரிதாக இருந்ததால் அழுத்தத்தை குறைப்பதற்கான ஒரு அவசரநிலை அறுவைசிகிச்சை அவசியமாக இருந்தது.
அதற்கு பிறகு, இதற்காகத் தொடர்ந்து எடுத்து வந்த மருந்தை குறுகிய காலம் நிறுத்திக் கொண்டதன் காரணமாக, இவருக்கு இரண்டாவது முறையாக, மேலும் தீவிரமான பக்கவாத பாதிப்பு ஏற்பட்டது. பேச்சுக் குளறுதல் போன்ற பக்கவாதத்தின் ஆரம்ப அறிகுறிகளைக் கவனித்த அவர், உடனடியாக சிம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். அறிகுறிகள் தென்பட்டவுடன் சிகிச்சைக்காக அவர் விரைந்து செயல்பட்டது, அவருக்கு நிரந்தர பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதில் முக்கியப் பங்காற்றியது.
இந்த சிகிச்சையை வெற்றிகரமாக வழங்கிய மருத்துவக் குழுவில், நரம்பியல் துறை இயக்குநர் மற்றும் முதுநிலை நிபுணர் *டாக்டர் பிரபாஷ் பிரபாகரன், மூத்த நரம்பியல் ஆலோசகர் *டாக்டர் விவேக் ஐயர்,மற்றும் சிம்ஸ் மருத்துவமனையின் *இடையீட்டு நரம்பியல்* பிரிவின் முதுநிலை மருத்துவர்களான *டாக்டர் ரிதேஷ் ஆர்.* *நாயர்* மற்றும் *டாக்டர் எஸ்.* *செல்வின்* ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். நோயாளி குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். அவர் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன், வழக்கமான பின்தொடர் சிகிச்சையில் இருக்கிறார்.
அவர் வாழ்நாள் முழுவதும் மருந்துகளை உட்கொள்வதும், குறித்த கால இடைவெளிகளில் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதும் அவசியமாகும்.
*டாக்டர் விவேக் ஐயர்* இது குறித்துப் பேசுகையில், “இந்த நோயாளிக்கான பாதிப்பும், சிகிச்சையும் மருத்துவ ரீதியாக ஒரு பெரிய சவாலாக இருந்தது. 29 வயதான இளம் நோயாளிக்கு இரண்டாவது முறையாக பக்கவாதத் தாக்குதலும், உடலின் மூன்று முக்கிய உறுப்புகளில் ஒரே நேரத்தில் இரத்த உறைவுக் கட்டிகள் உருவாகியிருப்பதும் மிகவும் அரிதான நிகழ்வு.
நாங்கள் எதிர்கொண்ட மிகவும் சிக்கலான மருத்துவச் சூழல்களில் இதுவும் ஒன்று. அந்நோயாளிக்கு இருந்த உடனடி ஆபத்தை நீக்குவதற்கும், நீண்ட கால அடிப்படையில் நல்ல சிகிச்சை விளைவை உறுதி செய்வதற்கும், பல்வேறு துறைகளைச் சார்ந்த மருத்துவர்களின் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவைப்பட்டது.” என்று கூறினார்.

நரம்பியல் துறையின் இயக்குநரும், முதுநிலை நிபுணருமான *டாக்டர். பிரபாஷ் பிரபாகரன்* பேசுகையில், அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாகச் செயல்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். “பக்கவாதம் எந்த வயதினருக்கும் ஏற்படலாம். அதன் அறிகுறிகளை அறிந்திருப்பதும், சரியாக அடையாளம் காண்பதும் மிக அவசியம்.
இந்த நோயாளிக்கு இருந்த சுய விழிப்புணர்வும், அறிகுறிகள் தெரிந்தவுடன் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு விரைந்து வந்ததும், அவரது உயிரைக் காப்பாற்ற முக்கியக் காரணமாக அமைந்தது. தனக்கு பக்கவாதம் ஏற்பட்டிருப்பதன் ஆரம்ப அறிகுறிகளைச் சரியாக அடையாளம் கண்டு, தாமதிக்காமல் மருத்துவமனைக்கு வந்தது, அவருக்குத் தகுந்த சிகிச்சையை உடனடியாக வழங்க எங்களுக்குப் பெரிதும் உதவியது.” என்று கூறினார்.
பரிசோதனைகளில், இந்நநபரின் மூளை, இதயம் மற்றும் வலது காலில் இரத்த உறைவுக் கட்டிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால், மருத்துவர் குழு உடனடியாகச் சிகிச்சையைத் தொடங்கியது. முதலில், அவரது வலது கால் தொடைத் தமனியில் (femoral artery) இருந்த இரத்தக் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதே நேரத்தில், இதயம் மற்றும் மூளையில் இருந்த கட்டிகளைக் கரைக்க, இரத்த உறைவைக் கரைக்கும் மருந்துகளும் வழங்கப்பட்டன.
ஒரே நேரத்தில் மூன்று வெவ்வேறு உறுப்புகளில் உள்ள இரத்தக் கட்டிகளுக்குச் சிகிச்சையளிப்பது என்பது மிகவும் சவாலானது. ஏனெனில், ஒவ்வொரு கட்டியும் வெவ்வேறு விதமான ஆபத்துக்களைக் கொண்டவை, அவற்றுக்குத் தனித்துவமான சிகிச்சை முறைகள் தேவைப்படும்.
ஆயினும், அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் குழுவிற்கு இடையே இருந்த சிறப்பான ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும், பாதிக்கப்பட்ட அனைத்து உறுப்புகளிலும் இரத்த ஓட்டத்தைச் சீராக்க உதவியது. இதன் மூலம், அந்த இளைஞருக்கு நிரந்தர பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டது.

சிம்ஸ் மருத்துவமனையின் இடையீட்டு நரம்பியல் பிரிவின் முதுநிலை நிபுணர் *டாக்டர். ரிதேஷ் ஆர். நாயர்* கூறியதாவது: “தடைகளின்றி இரத்த ஓட்டத்தைச் சீராக்குவதே எங்களின் உடனடி இலக்காக இருந்தது. அவரது காலில் இருந்த இரத்த உறைவுக் கட்டிக்கான அறுவை சிகிச்சை மிக முக்கியமானது.
அதேசமயம், இதயம் மற்றும் மூளையில் இருந்த கட்டிகளுக்கும் ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது. இடையீட்டு நரம்பியல் சிகிச்சைத் துறை அடைந்துள்ள மாபெரும் முன்னேற்றத்தையும், இத்தகைய சிக்கலான, பல உறுப்புகளைப் பாதித்த இரத்தக் கட்டிகளைக் கையாள இந்த சிகிச்சை முறைகள் எவ்வளவு திறம்படப் பயன்படுகின்றன என்பதையும் இந்த நிகழ்வு தெளிவாக வெளிப்படுத்துகிறது.”
100,000 நபர்களில், சுமார் 119-145 பேருக்கு ஓராண்டில் பக்கவாதம் ஏற்படுவதாகவும், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.6 மில்லியன் மக்கள் புதிதாக பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தியாவில், 40 வயதிற்குக் குறைவானவர்களிடையே பக்கவாத பாதிப்பு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.
சுறுசுறுப்பற்ற வாழ்க்கை முறை, நாட்பட்ட மன அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், சீரற்ற தூக்கப் பழக்கம், இரத்த உறைதல் தன்மையில் ஏற்படும் மாற்றங்கள், சுற்றுச்சூழல் மாசு மற்றும் நுண் பிளாஸ்டிக்குகளின் நீண்டகால தாக்கம் ஆகியவற்றுடன், கட்டுப்படுத்தப்படாத உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, அதிக கொழுப்பு, புகைப்பிடித்தல் மற்றும் அதிக மது அருந்துதல் போன்ற வழக்கமான இடர்க் காரணிகளும் இணைந்து, இளைஞர்களிடையே பக்கவாதம் அதிகரிக்கக் காரணமாகின்றன.

சமீப ஆண்டுகளில் பக்கவாத சிகிச்சையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதையும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டினர். ‘த்ராம்போலிசிஸ்’ மற்றும் நவீன ‘மெக்கானிக்கல் த்ராம்பெக்டோமி’ ஆகிய சிகிச்சை முறைகள் மூலம், மிகச்சிறிய மற்றும் நடுத்தர அளவிலான இரத்த நாளங்களில் கூட இரத்த ஓட்டத்தை மருத்துவர்களால் இப்போது மீண்டும் சீராக்க முடிகிறது.
இத்தகைய முன்னேற்றங்கள், நோயாளிகளுக்கான சிகிச்சை விளைவுகளைப் பெருமளவில் மேம்படுத்தியுள்ளன. இருப்பினும், பக்கவாத சிகிச்சையில், அதன் அறிகுறிகளைச் சரியான நேரத்தில் கண்டறிவதும், தாமதமின்றி மருத்துவமனையில் சேர்ப்பதும் மிக முக்கியமான அம்சங்களாகத் தொடர்கின்றன என்று மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.














