செய்திகள் :

திருப்பரங்குன்றம் : `நீதிபதி உணர்ச்சிவசப்பட்டுத் தீர்ப்பளிக்கவில்லை.!’ - எஸ்.ஜி.சூர்யா | களம் 2

post image

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான், `களம்’

இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது  திருப்பரங்குன்றம் விவகாரம். பல்துறைகளை சார்ந்த பல்வேறு ஆளுமைகள் இந்த சர்ச்சை குறித்து விரிவாக தங்கள் கருத்துகளை முன்வைக்க உள்ளார்கள்.

முதல் பாடத்தை படிக்க... Click Here

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம், தமிழ்க் கடவுள் முருகனின் அருளாட்சி நடக்கும் புனித பூமி. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆனால், பல தசாப்தங்களாக இந்தத் திருத்தலத்தில் ஒரு வரலாற்றுப் பிழை தொடர்ந்து கொண்டே இருந்தது. மலையின் உச்சியில் உள்ளத் தொன்மையான 'தீபத்தூணில்' கார்த்திகை தீபம் ஏற்றுவது இந்து பக்தர்களின் மரபுரிமை. ஆனால், சிறுபான்மை தாஜா அரசியல் என்ற காரணங்களைக் காட்டி, அந்த இடத்தில் தீபம் ஏற்றும் உரிமை இந்துக்களுக்குத் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது.

திருப்பரங்குன்றம் தூண்
திருப்பரங்குன்றம் தூண்

இந்தச் சூழலில்தான், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் மதிப்பிற்குரிய நீதிபதி திரு.ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் சமீபத்தில் வழங்கியத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. பலரும் நினைப்பது போல அவர் ஏதோ உணர்ச்சிவசப்பட்டுத் தீர்ப்பளிக்கவில்லை. மாறாக, 1920-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட பிரிவி கவுன்சில் தீர்ப்புகள், வருவாய்த்துறை ஆவணங்கள் மற்றும் நில அளவீடு சான்றுகள் ஆகியவற்றைத் மிகத் தெளிவாகவும், சட்டப்பூர்வமாக ஆராய்ந்து ஒரு உறுதியானத் தீர்ப்பை வழங்கினார். அந்த 'தீபத்தூண்' அமைந்துள்ளப் பகுதி கோவிலுக்குச் சொந்தமானது என்பதையும், அங்குத் தீபம் ஏற்றுவது மாற்று மதத்தினருக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதையும் அவர் சட்டரீதியாக உறுதிப்படுத்தினார்.

ஆனால், ஆன்மீகத்தையும் வழிபாட்டு உரிமையையும் மதிக்காத விடியா தி.மு.க அரசு நடந்து கொண்ட விதம் அதிர்ச்சியளிக்கிறது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை மதித்து, பக்தர்களுக்குப் பாதுகாப்பு அளித்து, அமைதியான முறையில் தீபம் ஏற்ற வழிவகை செய்திருக்க வேண்டும். ஆனால், இந்த அரசு தீர்ப்பை அமல்படுத்தாமல் எதிர்த்து இரவோடு இரவாக மேல்முறையீடு சென்றது. அதுமட்டுமின்றி, நீதிமன்றம் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையை (CISF) பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டபோது, மாநிலக் காவல்துறை அவர்களைத் தடுத்து நிறுத்தியது. நீதிமன்ற உத்தரவின் பேரில் செயல்பட்ட ஒரு மத்தியப் படையை, மாநில அரசு தடுத்தது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே கேலிக்கூத்தாக்கும் செயலாகும்.

திருப்பரங்குன்றம்

சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது. உண்மையில், அங்கு அமைதியாகத் தீபம் ஏற்ற வந்த பக்தர்களால் எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை. நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த மறுத்த தி.மு.க அரசின் பிடிவாதத்தால்தான் பதற்றம் உருவானது. சிறுபான்மையினரின் வாக்கு வங்கி அரசியலுக்காக, பெரும்பான்மை இந்துக்களின் வழிபாட்டு உரிமையை நசுக்குவதுதான் தி.மு.க-வின் 'திராவிட மாடல்' ஆட்சியா?

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் கார்த்திகை தீபத்திருநாளை தவிரை வேற நாளில் தீபம் ஏற்றுவது ஆகம விதிகளுக்கு முரணானது என்று பிள்ளையார்பட்டி தலைமை குருக்கள் கூறியதாக ஒரு பொய்யான தகவலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்கள். ஆனால், அந்தப் பொய் வெகு விரைவிலேயே அம்பலமானது. சம்மந்தப்பட்ட பிச்சை குருக்களே, "நான் அப்படிச் சொல்லவே இல்லை, என் பெயரில் யாரோ போலியாக ஆவணம் தயாரித்து நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ளார்கள்" என்று கூறியது அதிர்ச்சியளிக்கிறது.

ஒரு ஆன்மீகப் பெரியவரின் பெயரையே களங்கப்படுத்தும் வகையில், போலி ஆவணங்களைத் தயாரித்து நீதிமன்றத்தையே திசைதிருப்ப முயன்ற இந்தக் கும்பலின் துணிச்சல் எங்கிருந்து வந்தது? இதற்குப் பின்னணியில் இருக்கும் தி.மு.கவின் முக்கியப் புள்ளிகள் யார்? இறைவனுக்குச் செய்யும் சேவையிலேயே இப்படி ஒரு மோசடியா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள், சட்டத்தின் அடிப்படையில் நேர்மையாகத் தீர்ப்பு வழங்கியதற்காக, அவரைப் பதவி நீக்கம் (Impeachment) செய்ய வேண்டும் என்று தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கூச்சலிடுவது வெட்கக்கேடானது. தங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தால் "நீதி வென்றது" என்று கொண்டாடுவதும், சட்டப்படி தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டால் நீதிபதியையே பழிவாங்கும் நோக்கில் பேசுவதும் பாசிசப் போக்கின் உச்சம். ஒரு உயர் நீதிமன்ற நீதிபதிக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன? நீதித்துறையை மிரட்டிப் பணியவைக்க நினைக்கும் இவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது.

இந்தத் தீர்ப்பை எதிர்ப்பவர்கள் யார்? வெளியிலிருந்து வந்த சில பிரிவினைவாத அமைப்புகளும், அரசியல் லாபம் தேடும் தி.மு.கவினரும் தானே தவிர, திருப்பரங்குன்றம் மக்கள் அல்ல. திருப்பரங்குன்றத்தைச் சுற்றியுள்ள உள்ளூர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள், பல ஆண்டுகளாகவே "எங்கள் மலை உச்சியில் மீண்டும் கார்த்திகை தீபம் ஒளிர வேண்டும்" என்று ஏங்கிக் கொண்டிருந்தார்கள்.

ஊர் மக்களின் விருப்பமும், பக்தர்களின் வேண்டுதலும், ஆகம விதிகளும், சட்டமும் ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது, அதைத் தடுக்க நினைக்கும் தி.மு.கவின் செயல் அராஜகமானது. பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை மிதித்துவிட்டு, ஒரு குறிப்பிட்ட சாராரைத் திருப்திப்படுத்துவதற்காகச் செயல்படும் இந்த "போலி மதச்சார்பின்மை" நாடகம் இனி எடுபடாது.

கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம்
கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம்

தமிழக பா.ஜ.க மற்றும் பக்தர்களின் கோரிக்கை நியாயமானது. நாங்கள் யாருடைய வழிபாட்டுத் தலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை; எங்களுக்குச் சொந்தமான, சட்டப்படி உரிமையுள்ள இடத்தில் விளக்கேற்றவே அனுமதி கேட்கிறோம். இந்த விவகாரத்தில், தமிழக பா.ஜ.க பக்தர்களுக்குத் துணையாகச் சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கும்.!

-

"இந்தியா மீதான வரியை ரத்து செய்ய வேண்டும்" - அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்; காரணம் என்ன?

இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால், இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத பரஸ்பர வரி, 25 சதவீத கூடுதல் வரி என மொத்தம் 50 சதவீத வரியும் தொடர்ந்த... மேலும் பார்க்க