Share Market: வெளியாகும் Q3 ரிசல்ட்; 'இதை' உடனடியாக ரெடி செஞ்சு வெச்சுக்கோங்க மு...
திருவனந்தபுரம்: 'மேயராக்குவதாக கூறி போட்டியிட வைத்தனர், ஆனால்...'- முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீலேகா
கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றியுள்ளது. தேர்தல் சமயத்தில் முன்னாள் டி.ஜி.பி-யும், கேரள மாநிலத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியுமான ஸ்ரீலேகா திருவனந்தபுரம் மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. ஸ்ரீலேகா சாஸ்தமங்கலம் வார்டில் கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில், கட்சியில் சீனியரான வி.வி.ராஜேஷ் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை மேயராக ஆஷாநாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சீனியாரிட்டி அடிப்படையிலும் கட்சி அனுபவத்தின் அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீலேகா கூறுகையில், "நான் பா.ஜ.க-வின் மாநில துணைத் தலைவராக உள்ளேன். அதனால் உள்ளாட்சியில் போட்டியிடும் 10 பேரை வெற்றி பெற வைக்கும் வகையில் நான் செயல்படலாம் என நினைத்திருந்தேன். மாநகராட்சி தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. ஆனால், வார்டில் போட்டியிட வேண்டும் என என்னிடம் திடீரெனச் சொன்னார்கள். ஆரம்பத்தில் நான் போட்டியிட மறுத்தேன். மூன்று முறை அவர்கள் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியாக, 'நீங்கள் வெறும் கவுன்சிலர் மட்டும் அல்ல. பா.ஜ.க-வின் முகமாக நீங்கள் இருப்பீர்கள். அனைவரையும் வெற்றி பெற செய்ய வேண்டும், மேயராக உங்களை ஆலோசிப்போம்' எனவும் கூறியிருந்தார்கள். அது அனைவருக்கும் தெரியும். இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. தேர்தல் முடிந்து, எந்த காலத்தில் இல்லாத வகையில் சரித்திர வெற்றியை பா.ஜ.க அடைந்தது. அதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் முடிந்து நான்கு நாட்கள் மேயர் வேட்பாளருக்கான விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக அனைத்து கவுன்சிலர்களையும் அழைத்து விவாதித்தனர். அப்போது மாநில தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதன்படி நான் செயல்படுவேன் என கருத்து தெரிவித்திருந்தேன். நான் கட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளே ஆகின்றன. ஆனால் 30 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் இருந்தவரும், ஏற்கனவே கவுன்சிலராக இருந்த அனுபவம் பெற்றவருமான வி.வி.ராஜேஷை மேயராக தேர்வு செய்ய முடிவு செய்தார்கள். அதை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன். தேர்தல் சமயத்தில் என்னிடம் அப்படி பேசி இருந்தார்கள். அதன் பின்னர் சில காரணங்களால் இப்படி கட்சி முடிவு எடுத்திருப்பதாக நான் கருதினேன். அவமதிக்கப்பட்டதாகவோ, சதி நடந்ததாகவோ எனக்கு தோன்றவில்லை. இப்போது நான் திருப்தியாக இருக்கிறேன். ஐந்தாண்டுகள் சாஸ்தமங்கலம் வார்டு மக்களுக்கு பணி செய்ய உள்ளேன். மேலும் கட்சித் தலைமை எப்படி ஒரு முடிவு எடுக்கும்போது 'போடா புல்லே' எனக்கூறி அங்கிருந்து நான் வெளியேற முடியாதே" என கூறியிருந்தார்.

தேர்தலுக்கு முன்பும், தேர்தல் முடிந்த பிறகும் ஸ்ரீலேகா திருவனந்தபுரம் மேயர் ஆக உள்ளதாக செய்திகள் வெளியாயின. ஸ்ரீலேகாவுக்கு மேயர் பதவி வழங்கப்படாததைத் தொடர்ந்து அவர் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்பட்டது. அதற்கு வலுசேர்க்கும் விதமாக அவரது பேச்சு அமைந்திருந்தது. இதையடுத்து ஸ்ரீலேகாவின் இந்த கருத்துக்கள் விவாதத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து ஸ்ரீலேகா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
``கேரளாவில் மீடியா செயல்பாடுகள் மோசமாக உள்ளன. என்னை அலுவலகத்தில் செல்லவிடாமல் முக்கிய செய்தி நிறுவனங்களின் செய்தியாளர்கள் பின்னால் நடந்து கேள்விகளை கேட்டு தொல்லை செய்தனர். பின்னர், பேட்டியின் பகுதிகளை எடிட் செய்து வெளியிட்டனர். விவாதங்களை விற்பனைசெய்து ரேட்டிங்கை அதிகரிக்கின்றனர். இதையெல்லாம் பார்க்கும் மக்கள் சிலராவது அதை நம்பிவிடுவார்கள். அவர்கள் எவ்வளவு பொய்களை கூறினாலும் எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை. சிறப்புமிக்க பாரதிய ஜனதா கட்சியில் பணி செய்வது எனக்கு பெருமையாக உள்ளது. நான் ஒரு பெருமைமிக்க கட்சித் தொண்டன், ஒரு மகிழ்ச்சியான வார்டு கவுன்சிலர். அர்ப்பணிப்புள்ள ஓர் பொது ஊழியர்."
இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.
















