தென்காசி: பொதுமக்களை அரிவாளால் வெட்டிய 9 பேர் கைது; மற்றொரு குற்றவாளியைச் சுட்டு...
தென்காசி: பொதுமக்களை அரிவாளால் வெட்டிய 9 பேர் கைது; மற்றொரு குற்றவாளியைச் சுட்டுப் பிடித்த போலீஸ்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வசிக்கிறார்கள்.
இந்தக் கிராமத்தில், மே 29-ம் தேதி மாலையில் மூன்று இரு சக்கர வாகனங்களில் முகமூடி அணிந்து வந்த 8 பேர் கொண்ட கும்பல், கண்ணில் கண்டவர்களை எல்லாம் சரமாரியாக வெட்டினர்.
அதனால் கிராமத்து மக்கள் அலறியடித்தபடி வீட்டுக்குள் ஓடித் தப்பினார்கள். இருப்பினும், நெட்டூர் கிராமத்தைச் சேர்ந்த 6 பேருக்குப் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.
அதன் பின்னர் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் மானூர் வழியாகத் தப்பிச் செல்கையில், நெல்லை மாவட்டம் தெற்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இருவரை அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இந்தக் கும்பலின் கொடூரத் தாக்குதலில் 8 பேருக்குப் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது. அவர்களில் 4 பேர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பட்டியல் சமூக மக்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த நெட்டூர் கிராம மக்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து துரித நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், குற்றச்சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் 8 பேரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

சுட்டுப் பிடித்த போலீஸ்!
தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் நடந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறையினர் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினர்.
அதன்படி காட்டுப்பகுதிக்குள் பதுங்கி இருந்த மூவரை ட்ரோன் மூலம் கண்டறிந்த போலீசார் அவர்களைச் சுற்றி வளைத்து நேற்று கைது செய்தனர். அரிவாள் வெட்டு சம்பவத்தில் மேலும் பலருக்குத் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்ததால், அவர்களை தனிப்படைகள் அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், அரிவாள் வெட்டுச் சம்பவத்தில், தென்காசி மாவட்டம் நெட்டூரைச் சேர்ந்த அய்யப்பன் என்பவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர் நெல்லை மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரம் அருகே அரசங்குளம் பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இந்த வழக்கிற்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் அங்கு சென்று அவரைப் பிடிக்க முயன்றனர். அப்போது அய்யப்பன், அரிவாளால் காவல்துறையினரைத் தாக்க முயன்றதாகத் தெரிகிறது. இதில், தலைமைக் காவலர் முத்துக்குமார் என்பவருக்கு கையில் அரிவாள் வெட்டு விழுந்தது.
இதையடுத்து, தற்காப்பு நடவடிக்கையாக காவல்துறையினர் அய்யப்பனை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அவரது காலில் குண்டு காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு உடனடியாக சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்த காவலர் முத்துக்குமார் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அய்யப்பன் ஆகியோரைப் பார்வையிட்டார்.
காயமடைந்த அய்யப்பன் மற்றும் தலைமை காவலர் முத்துக்குமார் ஆகியோர் சேரன்மகாதேவி மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
கைதான அய்யப்பன் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், ஆலங்குளம் காவல் நிலையத்தில் அவர் மீது சரித்திரக் குற்றப் பதிவேடு பராமரிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.













