குப்பை மேலாண்மை: "கடந்த காலத்திலிருந்து பாடம் படிங்க" - தவெக MLA-வுக்கு பூவுலகின...
மும்பை: பக்ரீத் ஆடுகளை அகற்ற கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை; பன்றியை கொண்டு வந்த இந்து அமைப்புகள்
பக்ரீத் பண்டிகைக்கு முஸ்லிம்கள் விலங்குகளை பலியிடுவது வழக்கம். மும்பையில் ஒவ்வோர் ஆண்டும் முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கான ஆடுகளை தாங்கள் வசிக்கும் குடியிருப்பு வளாகத்தில் பலியிடுவது வழக்கம். மும்பை மீரா ரோடு பகுதியில் உள்ள பூனம் குடியிருப்பு வளாக கட்டடத்தில் வசிக்கும் முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகைக்கு பலியிடுவதற்காக மார்க்கெட்டில் இருந்து ஆடுகளை வாங்கி வந்து நிறுத்தி இருந்தனர். இதற்காக தற்காலிக குடில் ஒன்றையும் அமைத்து இருந்தனர். ஆனால் அக்கட்டடத்தில் வசிக்கும் மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சியில் புகார் செய்ததால் அந்த தற்காலிக குடிலை மாநகராட்சியினர் அகற்றினர்.
ஆனாலும் ஆடுகளை கட்டட வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். இதையடுத்து இவ்விவகாரத்தில் இந்து அமைப்புகள் தலையிட ஆரம்பித்தனர்.

அவர்கள் இரவில் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த முஸ்லிம்களுடன் வாக்குவாதம் செய்து ஆடுகளை அங்கிருந்து அப்புறப்படுத்தும்படி கேட்டுக்கொண்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
அதோடு கட்டட வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 50 ஆடுகளை மாநகராட்சியினர் நான்கு வாகனங்களில் அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பதட்ட்ம ஏற்பட்டது. முஸ்லிம்கள் மாநகராட்சி ஊழியர்களிடம் பேசி அழைத்துச் சென்ற ஆடுகளை மீண்டும் கட்டட வளாகத்திற்கு கொண்டு வந்தனர். இது குறித்து கேள்விப்பட்டதும் விஷ்வ இந்து பரிஷத் உட்பட இந்து அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் அக்கட்டட வளாகத்தின் முன்பு கூடி போராட்டம் நடத்தினர்.
இதனால் பாதுகாப்புக்கு 200க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். விஷ்வ இந்து பரிஷத் மற்றும் சில இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் ஹனுமான் பாடலை பாடி கோஷமிட்ட படி போராட்டம் நடத்தினர். அதோடு போராட்டத்திற்கு வந்திருந்த ஒருவர் கட்டட வளாகத்திற்கு ஒரு பன்றியை கொண்டு வந்தார். இதனால் மேலும் பதட்டம் ஏற்பட்டது. அந்த பன்றியை போராட்டக்காரரிடமிருந்து போலீஸார் விரட்டிச்சென்று பிடித்து பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்த பன்றியை சில போராட்டக்காரர்கள் போலீஸாரிடமிருந்து பறிக்க முயன்றனர். பன்றியை கொண்டு வந்தது குறித்து போராட்டக்காரர்களிடம் பேசியபோது, பலிக்காக ஆடுகளை வளர்ப்பதைக் கண்டிக்கும் விதமாக, "வராக பூஜையை" நடத்துவதற்காகவே அந்த பன்றி கொண்டுவரப்பட்டதாக கூறினர். இருப்பினும், வராக பூஜை" என்பது 'வராக ஜயந்தி' நாளிலேயே நடத்தப்படுகிறது. இது, விஷ்ணுவின் பன்றி அவதாரத்தின் பிறந்தநாளான செப்டம்பர் 12-ஆம் தேதியன்று வருகிறது. இப்போராட்டத்தால் அங்கு பாதுகாப்புக்கு தொடர்ந்து போலீஸார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மும்பையிலும் குடியிருப்பு வளாகத்தில் ஆடுகள் பலியிட தடை விதிக்கவேண்டும் என்று கோரி மாநகரட்சி கமிஷனரிடம் புகார் செய்தனர்.












