ஆங்கர்னா இப்படித்தான் இருக்கணுங்கிறதை உடைச்சதே மாகாபா தான்! - Ma Ka Pa Anand | D...
ரஜினி கண்டிப்பா "பூமர்" இல்லை! - 90's கிட்ஸ்-இன் நீங்காத நினைவுகள்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
நான் சிறுவனாக இருந்தபோது பார்த்த திரைப்படம் சந்திரமுகி. அக்காலத்தில் அனைத்து சிறுவர்களுக்கும் இத்திரைப்படம் நீங்காத நினைவுகள் கொடுத்திருக்கிறது. அப்படத்தில் வெளியான “தேவுடா.. தேவுடா..” பாடல் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் வரவேற்பு பெற்றது.
தினமும் தொலைக்காட்சி பெட்டியில் இப்பாட்டை பார்த்து ரசித்திருப்போம். 90 களில் பிறந்தவர்களின் முதல் மின்னணு விளையாட்டுச் சாதனமான பொம்மை தொலைபேசியில் இப்பாடலை வைத்து விளையாடி இருப்போம்.
பள்ளிகளில் தனித் திறமைகளை காட்டுவதற்கு இப்படத்தின் பாடல்களையும் வசனங்களையும் பயன்படுத்தி கைத்தட்டல்கள் வாங்குவோம்.
இவ்வாறு இப்படம் நூறு நாட்கள் வெற்றிகரமாக திரையிடப்பட்டது. அதில் ஒருநாள் நான், என் அண்ணன் மற்றும் தங்கை மூவரும் அடம்பிடித்து சந்திரமுகி படத்தை காண திரையரங்கிற்கு சென்றோம்.

அதிகாலையில் முதல் பேருந்தைப் பிடித்து 30 மைல் பயணம் செய்து திரையரங்கை வந்தடைந்தோம். அவரது ரசிகர்களின் விசில் சத்தம் காதுகளை துளைத்துக் கொண்டிருந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற பெயர் திரையில் தோன்றிய போது சத்தம் மேலும் அதிகரித்தது. படம் ஆரம்பித்த உடனே நாங்கள் விரும்பிய தேவுடா..தேவுடா..பாடல் திரையில் தோன்றியது. அந்த பாடலை மனப்பாடம் செய்த என் தங்கை பாடலை சத்தமாக பாடிக் கொண்டிருந்தாள்.
பாட்டு ஓடிக்கொண்டு இருக்கும் போது பாடலில் திடீரென நிறுத்தம் ஏற்பட்டது. பாடலை ஆடியோவாக கேட்ட போது நிறுத்தம் ஏதும் இருக்காது. இது தெரியாத என் தங்கை ஹரே ஹரே ஹரே.. என்று சத்தமாக பாடி விட்டாள். அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் சிரித்து விட்டனர். இவ்வாறு அந்தத் திரைப்பட அனுபவம் மறக்க முடியாத நினைவுகளாக இருக்கிறது.
ரஜினிகாந்த் அவர்களின் படங்கள் வசூல் ரீதியாக சாதனை படைக்கும் படங்களாக உள்ளது. எனவே அவரது படங்கள் வசூலை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அவரை பின் தொடரும் நடிகர்களும் இவர் பாணியில் படங்கள் தயாரிப்பார்கள். ஒரு படத்திற்கு ஐந்து பாடல்கள் மற்றும் ஐந்து சண்டைக் காட்சிகள் வைத்திருப்பார்கள்.
ரஜினிகாந்த் அவர்களின் படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் நீதி, நியாத்திற்காக சண்டையிடுவது போல் காட்சியமைத்திருப்பர். அவர் படங்களில் வரும் பெரும்பாலான பாடல்கள் தத்துவப் பாடல்கள் ஆகும். அவருடைய ஆரம்ப காலத்தில் நடித்த படங்கள் யதார்த்த படங்களாக இருந்தன. அவருடைய கதைத் தேர்வு பார்ப்பவரின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படுத்தும் வண்ணம் இருந்தது. அவருடைய பல படங்களில் வழிகாட்டுதல்கள் இல்லாத இளைஞராக நடித்திருப்பார்.

வறுமையிலும் நேர்மை தவறாத மனிதராக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்திருப்பார். அவருடைய ‘ புவனா ஒரு கேள்விக் குறி’ படத்தில் சாலையோர வியாபாரியாக இருந்து வறுமையில் தவறான வாழ்க்கை வாழ்வதை தடுக்கும் விதமாக நடித்திருப்பார்.
ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் ஒருவரின் இளமை காலத்தில் ஏற்படும் துன்பங்களை பொறுத்துக் கொண்டு சரியான பாதையில் சென்றால் இறுதியில் வெற்றி நிச்சயம் என்ற செய்தியை சொல்லி விட்டுச் சென்றிருப்பார்.
இன்றைய தலைமுறை இயக்குனர்கள் போதை பொருட்களை எதிர்க்கும் படங்களில் காட்டப்படும் Code Red கருத்தியலுக்கு படிக்காதவன் படத்தில் சாதாரண டாக்ஸியில் எரியும் சிவப்பு வண்ண விளக்கில் பதிவு செய்திருப்பார்.
முந்தைய தலைமுறையில் பிறந்தவர்கள் இளைய தலைமுறைக்கு வழிகாட்டாததால் பூமர்கள் என்று சிலரால் ஏளனமாக அழைக்கப்படுகின்றனர். எல்லா காலங்களிலும் இளைஞர்களை கவர்ந்து வழிநடத்தும் ரஜினிகாந்த் அவர்கள் என்றும் ‘சூப்பர் ஸ்டார் தான்.
-சுபி தாஸ்















