Bengaluru: பார்ட்டியில் குறுக்கிட்ட போலீஸ்; பைப் வழியாக தப்ப முயன்ற இளம்பெண்ணுக்...
பிரியாங்கா காந்தி - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு: காங்கிரஸுடன் இணையுமா ஜன் சுராஜ்?- பின்னணி என்ன?
பத்து வருடங்களுக்கும் மேலாக, தேர்தல் வியூக வகுப்பாளராக அரசியல் வட்டாரங்களில் கோலோச்சியவர் பிரசாந்த் கிஷோர். பிரதமர் மோடி முதல், மாநில அரசியல் தலைவர்களான நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, ஸ்டாலின் என சக்திவாய்ந்த தலைவர்கள் அனைவரின் நம்பிக்கையைப் பெற்ற வியூக வகுப்பாளராக அவர் விளங்கினார்.
நரேந்திர மோடி மூன்றாம் முறையாக குஜராத் முதல்வரானதில் தொடங்கி, 2014-ம் ஆண்டு முதன்முறையாக பிரதமரானது வரை பா.ஜ.க-வின் வியூக வகுப்பாளராக செயலாற்றியவர் பிரசாந்த் கிஷோர். அப்போதுதான் அரசியல் வியூக வகுப்பாளராக தேசிய அளவில் ஊடக வெளிச்சத்திற்கு வந்தார்.
அதைத் தொடர்ந்து, ஜே.டி.யூ, காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர்.சி.பி, தமிழ்நாட்டின் தி.மு.க, மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு வெற்றிகரமான வியூக வகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
குறிப்பாக பீகார் அரசியலின் ஒரு பகுதியாக இருந்து செயல்பட்ட பிரசாந்த் கிஷோர், 2018-ம் ஆண்டு நிதிஷ் குமார் தலைமையிலான ஜே.டி.யு கட்சியில் இணைந்தார். பின்னர், “கட்சி கட்டுப்பாட்டை மீறிய குற்றச்சாட்டு” அடிப்படையில் 2020-ம் ஆண்டு கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் நீக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, காங்கிரஸில் இணையவிருக்கிறார் என்றும், மீண்டும் ஜே.டி.யு-வில் இணையவிருக்கிறார் என்றும் பல செய்திகள் உலா வந்த நிலையில், 2021-ம் ஆண்டு ‘ஜன் சூரஜ் கட்சி’ என்ற பெயரில் தனிக் கட்சியைத் தொடங்கினார்.
2021–2022 ஆகிய காலகட்டங்களில் பிரசாந்த் கிஷோருக்கும் காங்கிரஸுக்கும் இடையே தீவிரப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. 2022-ல், சோனியா காந்தி முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், பிரசாந்த் கிஷோரை ஒரு சிறப்புக் குழுவில் (Empowered Action Group) இணைக்க காங்கிரஸ் அழைப்பு விடுத்தது.
அப்போது பிரசாந்த் கிஷோர், “தேர்தல் வியூகங்களில் தனக்கு முழு சுதந்திரமும், கூடுதல் அதிகாரமும் வேண்டும். கட்சி அமைப்பில் பெரிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும்” என உறுதியான குரலில் பேசினார். இதனால் அந்தப் பேச்சுவார்த்தை முறிந்தது.
அந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், “காங்கிரஸுக்கு என்னை விட ஒரு வலுவான தலைமையும், கட்டமைப்பை சீரமைக்கும் உறுதியும்தான் தேவை” என வெளிப்படையாக விமர்சித்தார்.
அதைத் தொடர்ந்து, கடந்த சில ஆண்டுகளாக பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் தலைமையையும், குறிப்பாக ராகுல் காந்தியையும் கடுமையாக விமர்சித்து வந்தார். சமீபத்தில் நடைபெற்ற பீகார் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட, “காங்கிரஸ் முன்னெடுத்த வாக்குத் திருட்டு புகார்கள் மாநிலத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தச் சூழலில்தான் பீகார் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில், பிரசாந்த் கிஷோரின் ‘ஜன் சூரஜ்’ கட்சி போட்டியிட்ட 238 வேட்பாளர்களில் 236 பேர் டெபாசிட் இழந்ததோடு, ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியாமல் படுதோல்வியைச் சந்தித்தது. அதேபோல், காங்கிரஸ் கட்சியும் தாம் போட்டியிட்ட 61 இடங்களில் வெறும் 6 இடங்களை மட்டுமே கைப்பற்றி பலவீனமான நிலையில் உள்ளது.
எனவே, இரு கட்சிகளின் நிலையும் பீகாரைப் பொருத்தவரை மிகவும் பலவீனமாக இருக்கும் சூழலில், நேற்று டெல்லியில் பிரசாந்த் கிஷோர் பிரியங்கா காந்தியை சந்தித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியுடனான கசப்பான மூன்று ஆண்டுகள் பிரிவுக்குப் பிறகு நடந்துள்ள, குறிப்பாக பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான ஒரு மாதத்திற்குள் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இரு தரப்பிலும் இந்தச் சந்திப்பு குறித்து முறையான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், காங்கிரஸை மீண்டும் வலுப்படுத்துவது குறித்த ஆலோசனைகள் இதில் இடம்பெற்றிருக்கலாம் எனத் தெரிகிறது.
மேலும், தனது அரசியல் பயணம் படுதோல்வியைச் சந்தித்திருக்கும் நிலையில், மீண்டும் அரசியல் வியூக வகுப்பாளர் அவதாரம் எடுக்கவிருக்கிறாரா? அல்லது கூட்டணிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கிறாரா? என்ற கேள்விகளையும் தவிர்க்க முடியவில்லை. இதனால், இந்தச் சந்திப்பு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


















