ஸ்ரீ லலிதாம்பிகை மருத்துவ கல்லூரி லலிதாம்பிகை கருவுறுதல் மையத்தின் முதலாம் ஆண்டு...
தேர்தல் வெறும் கொண்டாட்டமல்ல; சமூக நலனை மனதில் வைத்து வாக்களிப்பது எப்படி?
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
தேர்தல் : தேசத்தின் நெஞ்சில் துடிக்கும் ஜனநாயக இதயத்துடிப்பே “தேர்தல்”. மக்கள் விருப்பம், மக்கள் குரல், மக்கள் கனவு ஆகிய மூன்றையும் ஒன்றுபடுத்தி உயர்ந்த இடத்தில் நிற்கும் புனிதமான செயல்பாடாக அதை நாம் கருதுகிறோம். வாக்குச்சாவடி முன் வரிசையில் நிற்கும் ஒவ்வொருவரும்,தங்கள் விரலின் நுனியில் ஒரு தேசத்தின் எதிர்காலத்தை வரைகிறார்கள்.
ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளிலும் ஒரு வருத்தமான கணம் நமது சமூகத்தில் தோன்றுகிறது “வாக்குப்பதிவு”.
ஒரே ஒரு வாக்கு, ஒரு அரசின் பாதையை மாற்றும் சக்திக் கொண்டது. ஒரு விரல், ஒரு தலைமுறையின் திசை திரும்பும் அழைப்பு சின்னமாகிறது. தேர்தல் நாளில் நீட்டப்படும் விரல்கள், வெறும் மை தடவப்பட்ட விரல்கள் அல்ல; அவை ஒரு கிராமத்தின் குரல்,ஒரு பெண்மணியின் போராட்டம், ஒரு மாணவரின் கனவு, ஒரு தொழிலாளியின் நம்பிக்கை, ஒரு தேசத்தின் தன்னம்பிக்கை, ஒரு நாட்டின் ஒழுக்கம், ஒரு சமூகத்தின் சுய மதிப்பு, ஒரு குடிமகனின் முழுமையான அடையாளம்.

என் அனுபவம்:
என் வாழ்க்கையில் பல தேர்தல்களை பார்த்திருக்கிறேன். வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்கும் முதியவர்கள், குழந்தையைக் கையில் தூக்கி வரும் தாய்மார்கள், முதல் வாக்கு போட வருவதாக உற்சாகம் காட்டும் இளைஞர்கள். அனைவரும் ஒரு விஷயத்தை எளிதாக உணர்த்தினார். வாக்கு என்பது சாதாரண நடவடிக்கை அல்ல, அது உணர்ச்சியும்,உறுதியும்,உரிமையும் கலந்து மக்களின் புனித தருணம். ஒரு மை தடவப்பட்ட விரல் பல தசாப்தங்களாக இந்த நாட்டை தாங்கும் குரல்களின் சின்னம்.
என் ஆய்வு:
தேர்தல் குறித்து என் தனிப்பட்ட கவனிப்புகள் மற்றும் வாசித்த ஆய்வுகள் கூறுவது தெளிவான ஒன்று. அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளை விட, மக்கள் உயர்வை நோக்கியே கொள்கைதான் ஒரு நாட்டின் வளர்ச்சியை நிர்ணயிக்கிறது.
ஒரு வாக்காளர் முக்கியமாக மதிப்பிட வேண்டியது- யார் அதிகமாக பேசினார் என்பதை அல்ல:யார் அதிகமாக செய்தார் என்பதைத் தான்.
சமூகநலம்,கல்வி, சுகாதாரம், பெண்கள் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு.இவற்றைத் தொடும் கொள்கைகளே உண்மையில் ஒரு குடிமகனின் வாழ்வை மாற்றும்.

தேர்தல் என்பது ஒரு நாள் நிகழ்ச்சி அல்ல, 2 வார பிரச்சாரம் அல்ல, 5 ஆண்டுகளுக்கு வரும் கடமையும் அல்ல; அது மக்கள் ஆற்றலை வெளிப்படுத்தும் ஜனநாயகப் பொக்கிஷம் நாம் யாரைத் தேர்ந்தெடுத்தாலும்,ஒரே ஒரு விஷயம் மறக்கக்கூடாது.”நல்ல அரசை உருவாக்குவது நல்ல வாக்காளர்கள் தான்”.
வாக்காளர் பார்வை:
தேர்தல் காலத்தில் மலர்கின்ற வாக்குறுதிகள், உண்மையில் சமூகத்தின் உற்பத்தித் திறனையும், பொருளாதார வளத்தையும், சமத்துவமான வளர்ச்சியையும் உயர்த்தும் வல்லமை கொண்டதா? என்று ஒரு வாக்காளர் ஆராய வேண்டும்.ஒரு நல்ல வாக்காளர் என்பது உணர்ச்சியை விட உண்மை பார்க்கக் கூடியவர். பெயரை விட பணியை மதிப்பவர்.சொல் அல்ல செயலை செவிமடுக்கிறவர்.தம் வீட்டை மட்டும் அல்ல சமூகத்தையும் சிந்திப்பவர்.

தேர்தல் என்றாலே அரசியல் கட்சிகள் தரப்பில் பல வாக்குறுதிகள், கோஷங்கள்,சுருக்கமான திட்டங்கள்,வெற்றியைக் குறிவைக்கும் உத்திகள் அனைத்தும் வானில் மின்னும் நீராவி போல நம் கண்முன் மிதக்கத் தொடங்குகின்றன.ஆனால் அவர்களின் சொற்கள், அவர்களின் செயல்களில் பிரதிபலிப்புக்கு சமமா? அரசியல் ஆளுமை என்பது ஒரு பதவி அல்ல;அது ஒரு பொறுப்பு.
ஒரு குடிமகன் கேட்கும் மிக அடிப்படை கேள்வி.நான் உங்களுக்கு கொடுக்கும் இந்த ஒரு வாக்கு, எனது வாழ்க்கையில், எனது வீதியில்,எனது ஊரில் என்ன மாற்றத்தை கொண்டு வர போகிறது? ஒரு ஆளுமை மக்களின் நம்பிக்கையை சுமப்பவர் என்கிற அளவுக்கு உயர்வதற்கு,அவன் சொல்லும் சொல் தன் காலடியில் பல வருடங்களாக மக்கள் சந்தித்த கஷ்டங்களின் ஒலியை கேட்கக்கூடிய ஆழ்மனதைக் கொண்டிருக்க வேண்டும்.

முடிவுரை:
தேர்தல் என்பது ஒவ்வொரு குடிமகனின் உள்ளார்ந்த கருத்தையும், அனுபவத்தையும், எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தும் பொருள்தான். நீங்கள் யாரைத் தேர்ந்தெடுத்தாலும், நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை மனதில் கொண்டு தரமான உயர்வை நோக்கி, சுயநலத்தை விட சமூக நலனை கண் முன்னே வைத்து, நேர்மையாகவும், தெளிவாகவும் வாக்களியுங்கள்.
“உங்கள் வாக்கு- உங்கள் குரல்;
உங்கள் குரல்- தேசத்தின் திசை”

















