ரஜினிகாந்த் 75-வது பிறந்தநாள் விழா: போயஸ் கார்டனில் கொண்டாடிய ரசிகர்கள் | Photo ...
ரூ.1800 கோடி அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு வாங்கிய அஜித் பவார் மகன்; ரூ.21 கோடி செலுத்த அரசு உத்தரவு
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மகன் பார்த் பவார் பங்குதாரராக இருக்கும் தனியார் நிறுவனம் புனேயில் கடந்த மாதம் அரசுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக சீத்தல் என்பவரிடமிருந்து விலைக்கு வாங்கியது. அதுவும் ரூ.1800 கோடி மதிப்புள்ள நிலத்தை வெறும் ரூ.300 கோடிக்கு வாங்கினார். இது தொடர்பாக தெரிய வந்தவுடன் அஜித் பவார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதையடுத்து மாநில அரசு தலையிட்டு இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டதோடு நில ஒப்பந்தத்தையும் ரத்து செய்தது. இது தொடர்பாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் முதல் தகவல் அறிக்கையில் அஜித் பவார் மகன் பெயர் இடம் பெறவில்லை.

இது குறித்து கோர்ட் கேள்வி எழுப்பி இருந்தது. தற்போது நிலம் பதிவு செய்யப்பட்டதில் ரூ.21 கோடி முத்திரை தீர்வை பாக்கி இருப்பதாக கூறி கட்டணத்தை செலுத்தும்படி மாநில பத்திர பதிவுத்துறை அஜித் பவார் மகன் பார்த் பவாரின் நிறுவனத்திற்கு உத்தரவிட்டு இருக்கிறது. இது தொடர்பாக பத்திர பதிவு துறையில் விசாரணைக்கு வந்தபோது அஜித் பவார் மகன் தரப்பில் இரண்டு வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி அரசு பத்திர பதிவை ரத்து செய்து இருப்பதால் முத்திரை தீர்வை கட்டணத்தை செலுத்தவேண்டிய அவசியம் இல்லை என்று வாதிட்டனர்.
ஆனால் அவர்களது வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த பத்திர பதிவு துறை, பத்திர பதிவு செய்ததற்கு பாக்கி முத்திரை தீர்வை கட்டணம் ரூ.21 கோடி மற்றும் அதற்கு அபராதம் ரூ.1.5 கோடி ஆகிய கட்டணத்தை இரண்டு மாதத்தில் செலுத்தும்படி உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக பேச இனி வழக்கறிஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஒரு பத்திர பதிவை இரண்டு தரப்பினரும் சேர்ந்து ரத்து செய்தால் மட்டுமே முத்திரை தீர்வை செலுத்தவேண்டும் என்றும், அரசு தரப்பில் ரத்து செய்தால் முத்திரை தீர்வை செலுத்தவேண்டிய அவசியம் இல்லை என்று சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நில மோசடியை மாநில அரசு அஜித் பவார் மகனுக்கு சாதமாக முடித்து வைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.


















