கோவை: வயிற்றில் கருவுடன் உயிரிழந்த பெண் யானை; ரயில் மோதியதில் மற்றொரு யானைக்கும்...
'அடக்குமுறைக்கு எதிரான குரல் தான் எங்கள் இசை; எங்கள் இசை தான் அரசியல்!' - `தம்மா த பேண்ட்' குழுவினர்
‘கலை என்பது சடங்குகளிலிருந்து விடுபட்டு அரசியலை அடிப்படையாகக் கொண்ட ஒன்றாக மாறுகிறது’ - பெஞ்சமின்
இவ்வாறு தங்களுடைய கலையை சமூக அரசியலுக்கும் கொண்டாட்டத்திற்குமான கருவியாய் முன்னெடுத்து, சமீபகாலமாக அட்டகாசமாய் களமாடிக்கொண்டிருக்கிறார்கள் இந்த ‘தம்மா த பேண்ட்’ குழு.
முன்பொரு மழைநாளில் கொஞ்சம் கட்டஞ்சாயாவோடு அவர்களோடு உரையாடத்தொடங்கினோம்…
இக்குழுவின் நிறுவனர் நந்தன் கலைவாணன் நம்மோடுபேச ஆரம்பித்தார்,
``2018 ல நாங்க சென்னை குருநானக் காலேஜ்ல படிச்சிட்டு இருக்கும் போது காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல கெத்து காமிக்கிறதுக்காக தான் இந்தக்குழுவை தொடங்கினோம். கொரோனா காலத்துல எங்கயும் வெளிய போக முடியாதுனால சோடியல் மீடியாக்களில் நிறைய வீடியோக்களை தொடர்ந்து போட ஆரம்பிக்கும் போது நிறைய பேர் எங்களை பாக்க ஆரம்பிச்சாங்க.
அதுக்கப்புறம் நம்ம ஏன் அரசியல் ரீதியா எழுதக் கூடாதுன்னு தோணவும் இதை ஒரு அரசியல் பேண்ட் குழுவா மாத்துனோம். எங்க குழுவுல இப்போ கிட்டத்தட்ட 20 பேருக்கும் மேல இருக்கிறாங்க. நிறைய பேர் வருவாங்க எங்ககூடவே பயணிப்பாங்க/ இங்க இருக்கிற எல்லாருக்குமே அரசியல் தெரியும்ன்னு சொல்ல முடியாது. அரசியல்ங்கிறது பிராசஸ்ன்னு நம்புறோம். எங்களுக்கு சமூகம் பற்றிய புரிதல் இருக்கிறது. அதுமூலமா தினந்தினம் கத்துக்கிறோம்.
எனக்கு சொந்த ஊரு திருநெல்வேலில ஒரு கிராமம். அங்க கோவில் கொடைகளில்ல வாசிக்கப்படுற இசைகளை கேட்டு தான் இசைத்துறையில ஆர்வம் வந்திச்சு. நாங்க அதை மையமா வச்சி தான் இப்பவும் இயங்குறோம். சின்ன வயசுல கேட்ட மண்ணிசை வாத்தியங்கள் தான் கலை வழியா செயல்படுறதுக்கான முக்கியமான காரணமாக இருக்குது.

இங்க இருக்கிற எல்லாருமே முறைப்படி இசை கத்துக்கிட்டவங்க கிடையாது. ஆர்வத்துனாலயும் தேடல் மூலமாகவும் கத்துக்கிட்டவங்க தான். எங்க எல்லாரையும் ஒரே புள்ளியில இணைக்கிற ஒரே ஆள் இசைஞானி இளையராஜா தான். அவரும் அவரோட இசையும் தான் எங்களை ஒன்றிணைத்து வச்சிருக்குன்னு சொல்லமுடியும்.
பொதுவாகவே நீங்க ஒரு விசயம் கத்துக்கிட்டீங்கன்னா அதுக்குள்ளயே தான் சுத்திக்கிட்டே இருப்பீங்க. எதுவுமே தெரியலன்னா நம்ம பண்றது எல்லாமே மியூசிக் தான் நம்பிட்டு இருப்போம். அப்படிதான் நாங்களும் நம்பிட்டு இருக்கிறோம்" என்று சொல்லி சிரிக்கிறார்.
மொத்த குழுவும் அறை அதிர சிரிக்கிறார்கள்.
அவர் விட்ட இடத்திலிருந்து பெண் கலைஞர் அழகு லெட்சுமியும், கணேஷூம் பேச்சைத் தொடர்ந்தனர்,
" எங்க குழுவுல சிறந்த நாட்டார் இசைக்கலைஞர்களான தஞ்சாவூரைச் சேர்ந்த டேவிட், சஞ்சய், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த பிரசன்னா என நிறைய கலைஞர்களோட சேர்ந்து பயணிச்சிட்டு இருக்கோம். சென்னைச் சேர்ந்த கானா கலைஞரான கானா சஞ்சயோட தொடர்ந்து செயல்பட்டுட்டு இருக்கோம். Contemporary Gana - Neo Folkங்கிற தான் எங்களோட தீம். ஒவ்வொருத்தர் கிட்ட இருக்கிற விசயங்களை எப்படி பயன்படுத்தலாம்ன்னு தான் யோசிக்கிறோம்.

தொடர்ந்து பாட்டு கேட்கிறது, எங்களால முடிஞ்ச உழைப்பை முழுமையாக போடுறோம். நாங்க எல்லா வீக் எண்ட்ஸூம் ஒண்ணா தான் இருப்போம். எங்க கிட்ட முதன்முதலா நீலம் பண்பாட்டு குழு மார்கழியில் மக்களிசை குழுவிலிருந்து நீங்க ஏன் பாடக்கூடாதுன்னு எங்களை கேட்டாங்க? அதுல இருந்து நிறைய மேடைகளில் எங்களோட கலையை கொண்டு போய்ட்டு இருக்கோம்" என்றனர்.
``ஜென்Z வயது பிரிவினருக்கு அரசியல் தெரியலன்னு சொல்றதை எப்படி பாக்குறீங்க? "
பாடகர் விஜய் கிஷன் இளங்கோவன் பேச ஆரம்பித்தார்,
“ ஜென்Z பிரிவினருக்கு அரசியல் தெரியாம இல்லை. அவங்கள டைவர்ட் ஆகுறதுக்கு வழிகள் நிறைய இருக்கு. சூப்பராவும் தைரியமாவும் கேள்வி கேக்குறாங்க. நம்மளும் நிறைய திரிக்கப்பட்ட உண்மைகளை தான் உண்மைகள்ன்னு நம்பிட்டு இருக்கோம். அதை சரி தவறுன்னு யோசிக்கிறதுக்கான சூழலோ, நேரமோ இல்லாமல் தான் நம்ம ஓடிக்கிட்டோ இருக்கோம். அதையும் தாண்டி நம்ம மொத்தமா உட்கார்ந்து கலந்து பேசினா தான் அரசியல் தெளிவு உருவாகும்ன்னு நினைக்கிறோம்.

அதற்கான காலச்சூழலும் தேவையானதாக இருக்கு. எங்களைப் பொறுத்தவரைக்கும் அரசியல் கட்சிகளையும், தலைவர்களையும் முன்வைக்கிறதுக்கு முன்னாடி அரசியல் தத்துவங்களை முன்வைக்கிறது தான் சரி. அதை நோக்கி தான் நம்மளும் நகரணும். இதுக்கு ஒரே வழி அமைப்பாய் திரள்வது மட்டும் தான்” என்று நிறைவு செய்தார்.

அடுத்து பேசிய ஆரம்பித்தார் பெண் கலைஞர் ஆரம்பா,
" ஆர்ட் வழியாக தான் மக்களை இணைக்க முடியும். நாங்க சின்ன வயசுல நிலா தம்மா குழுவுல இருக்கும் பாட்டு தான் பெளத்தம் பத்தியும் அம்பேத்கர் பத்தியும் நிறைய அறிவை கொடுத்திருக்கு. சின்ன பசங்களுக்கு கலை தான் நிறைய அறிவை கொடுக்குது.
எங்களோட ஒவ்வொரு வார்த்தையும் எதிர்ல இருக்கிறவங்கள டிரிகர் பண்ணாம நாங்க பேசுற விசயங்களைப் பத்தி யோசிக்கணும்ன்னு நினைச்சு தான் எழுதுறோம். பாட்டுக்கான வரிகளை ஒருத்தர் மட்டும் எழுதுறதுனால ஒருத்தரோட ஐடியாலஜி மட்டும் திணிக்க வாய்ப்பிருக்கு. எல்லாருமே தனித்தனியா உட்கார்ந்து எழுதுவோம். அப்புறம் எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து முழு பாட்டா உருவாக்குவோம். "

பெண் கலைஞர் சந்தோஷினி பேசத் தொடங்கினார்,
“ நாங்க எல்லாருமே வேலைக்கு போறவங்க தான். எங்களோட வருமானத்துல இருந்து கொஞ்சம் சேத்து வச்சிக்கிடுறோம். நந்தன் பெற்றோர்களான அனுரதா அம்மாவும், மாரியப்பன் அப்பாவும் தான் பெரிய நம்பிக்கையா எங்களோட நிக்கிறாங்க. எங்களோட பொருளாதார தேவைகளை அவங்களும் பாத்துக்கிடுறாங்க.
ஒவ்வொரு இடங்களில் நாங்க பாடும்போது கிடைக்கிற பணத்தை வச்சி எங்களோட செலவுகளை சமாளிச்சிக்கிடுறோம். எங்களுடைய இசைப்பயணம் முழுக்க போர், காலநிலை மாற்றம், சாதி ஒடுக்குமுறைன்னு அதிகார மையத்திற்கு எதிரான குரலா தொடர்ந்து பயணிச்சிட்டு இருக்கோம். அடங்குமுறைக்கு எதிரான மக்களோட கொண்டாட்ட வாழ்க்கை தான் எங்க இசை.
நிறைய கிராமங்களுக்குள்ள பயணிக்கனும். அவங்களுக்கு இந்த ஆர்ட் வழியான புரிதலை ஏற்படுத்தனும். இதை ஒரு பேண்ட் ங்கிறதோடு நின்னுற கூடாது அமைப்பாக கொண்டு போகனும்ன்னு ஆசை இருக்கு" என்றவர்கள் புதிதாக இசையமைத்த பாடலொன்றைக்கும் நமக்காக பாடி சியர்ஸோடு நிறைவு செய்தார்கள் தம்மா த பேண்ட் படைக்குழு.!


















