BB Tamil 9: "இப்போ எனக்கு எல்லாம் புரியுது" - அரோராவின் காலில் விழுந்த கம்ருதீன்
அதிமுக: "தனிக்கட்சி ஆரம்பிப்பேன் எனச் சொல்லவே இல்லை" - ஓ.பன்னீர்செல்வம்
நாடாளுமன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு பா.ஜ.க-விடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக முக்கியத்துவம் குறைந்தது.
குறிப்பாக, தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியைச் சந்திக்க அனுமதி கோரியும், ஓ.பி.எஸுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. இந்த அதிருப்தியால் என்.டி.ஏ கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து கடந்த 24-ம் தேதி சென்னையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய ஓ.பி.எஸ், 'வரும் 15-ம் தேதி முக்கிய முடிவு எடுக்கப்படும்' என்று கூறினார். இதனிடையே பா.ஜ.க-வின் அழைப்பின் பேரில் தனது மகனுடன் டெல்லி சென்றதாகக் கூறப்படுகிறது.

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியானது. மேலும் டெல்லியில் முகாமிட்டிருந்த ஓ.பி.எஸ், பாஜகவைச் சேர்ந்த மற்ற தலைவர்களைச் சந்தித்ததாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், சென்னை வந்த அவர், ``தமிழக அரசியல் சூழல் குறித்து அமித்ஷாவிடம் பேசினேன்" என்றார்.
இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ் அஞ்சலி செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த இயக்கத்தை, யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வழிநடத்தி நிலை நிறுத்தினார்கள்.
அந்த நிலை மீண்டும் தமிழகத்தில் உருவாக வேண்டும் என்பதுதான் கழகத்தின் அடிப்படை தொண்டர்களின் எண்ணம் என்பதை டெல்லியில் தெரிவித்திருக்கிறேன்.
நான் எந்தச் சூழலிலும் தனிக்கட்சி ஆரம்பிப்பேன் எனச் சொல்லவே இல்லை. தவெக-வில் இணைந்திருக்கும் செங்கோட்டையனை நானும் தொடர்புகொள்ளவில்லை. அவரும் என்னிடம் பேசவில்லை.

என்னுடைய அடுத்தக்கட்ட நகர்வு தமிழக மக்கள், கழகத் தொண்டர்கள் எண்ணப்படி இருக்கும். தேர்தல் கூட்டணி குறித்து இப்போது பேச முடியாது. இன்னும் ஆறு மாதம் இருக்கிறது, பொறுமையாகப் பேசலாம்.
அதிமுக-விலிருந்து பலர் கட்சி மாறுகிறார்கள் என்றால், இது ஜனநாயக நாடு யார் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இணையலாம். ஆனால், அதிமுக தொண்டர்களின் பலம் எந்தச் சூழலிலும் பழுதுபடாது.
அதிமுக எத்தனையாகப் பிரிந்திருந்தாலும் எங்கள் நோக்கமும், கொள்கையும் ஒன்றுதான். பிரிந்திருக்கும் அதிமுக சக்திகள் ஒன்றுசேர வேண்டும் என்றுதான் டெல்லி சென்று அமித் ஷாவிடம் சொல்லிவிட்டு வந்தேன்" எனப் பேசியிருக்கிறார்.

















