BB Tamil 9: ``உனக்கு மேனஸ் இல்லையா?'' - துஷாரிடம் மோதும் திவ்யா
அரசியல்வாதிகள் - போலீஸ் கூட்டணி: தொழிலதிபர்களை மிரட்டி ரூ.100 கோடி சேர்த்த உ.பி. போலீஸ் அதிகாரி!
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் துணை போலீஸ் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் ரிஷிகாந்த் சுக்லா. ‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ ஆன சுக்லா, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கும் மேலாக சொத்துகளை சேர்த்ததாக கூறி பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிடுவேன் என்ற பயத்தை ஏற்படுத்தி, பெரிய தொழிலதிபர்கள் மற்றும் பில்டர்களை மிரட்டி, நிலங்களை அவர்களிடமிருந்து எழுதி வாங்கியுள்ளார். இதுகுறித்து வந்த புகாரைத் தொடர்ந்து, அதைப்பற்றி விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை மாநில அரசு நியமித்தது.

அந்த சிறப்பு விசாரணைக் குழு நடத்திய விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளது. குற்றவாளிகளை சுட்டுக்கொல்வதில் பிரபலமானவர் என்ற புகழை பயன்படுத்தி ரிஷிகாந்த் அனைவரையும் பயமுறுத்தி பணம் சம்பாதித்துள்ளார்.
நகரில் பிரபலமான பில்டர்கள், தொழிலதிபர்கள், நிலம் வைத்திருப்பவர்கள் ஆகியோரிடம் போலியான வழக்கில் சிக்கவைத்து விடுவேன் என்று கூறி, அவர்களிடம் உள்ள நிலங்களை எழுதி வாங்கிக்கொள்வதாக தெரியவந்துள்ளது.
அவரிடம் நிலத்தை பறிகொடுத்த மனோகர் சுக்லா இதுகுறித்து கூறுகையில்,
"நானும் அவரும் சேர்ந்து தான் ஒரு நிலத்தை வாங்கினோம். நிலத்தின் விலை அதிகரித்தபோது, அந்த நிலத்திற்கு எனது பங்காக ரூ.7 கோடி கொடுப்பதாக ரிஷிகாந்த் தெரிவித்தார். அந்த நேரத்தில் எனது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். எனவே, எனது பங்கு நிலத்தை அவரிடம் கொடுத்துவிட்டு பணத்தை வாங்க முடிவு செய்தேன்.
அவரிடம் பணம் வாங்குவதற்காக சென்றபோது, என்னிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி, ‘உனக்கு பணம் கிடையாது; அனைத்தையும் நான் எடுத்துக்கொண்டேன்’ என்று கூறிவிட்டார்.

அந்த நிலத்தின் மதிப்பு ரூ.60 முதல் 70 கோடி இருக்கும். எனக்கு ஏற்பட்ட நிலை, தங்களுக்கும் ஏற்படும் எனக் கருதி பலர் இதுகுறித்து புகார் செய்ய பயந்து கொண்டிருக்கின்றனர்," என்றார்.
ரிஷிகாந்த், தனது இந்த குற்றச் செயல்களுக்கு கான்பூரில் உள்ள பிரபல வழக்கறிஞர் அகிலேஷ் துபே என்பவருடன் கூட்டுச் சேர்ந்துள்ளார். அகிலேஷ், முக்கிய போலீஸ் அதிகாரிகளுடன் இணைந்து அப்பாவி மக்கள்மீது போலி வழக்குகள் பதிவு செய்து மிரட்டி பணம் பறிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
ரிஷிகாந்த் சுக்லா கான்பூரில் இன்ஸ்பெக்டராக இருந்தபோது, அகிலேஷ் துபே அப்பாவி மக்கள்மீது போலியான பாலியல் வன்கொடுமை வழக்குகள், நில அபகரிப்பு வழக்குகள் ஆகியவற்றை பதிவு செய்து, அவர்களுக்கு நெருக்கடி கொடுத்து, அவர்களுடைய சொத்துக்களை எழுதி வாங்கி இருக்கிறார். அதோடு, இருவரும் சேர்ந்து சர்ச்சைக்குரிய மற்றும் சிக்கலில் இருக்கும் நிலங்களுக்கு பஞ்சாயத்து செய்து தீர்வு காட்டி அதன் மூலமாக கணிசமான பணம் சம்பாதித்துள்ளனர்.
துபேயின் நிறுவனத்தில் தனது மனைவி பிரபா சுக்லாவை பங்குதாரராக சேர்த்து, தானே சம்பாதித்த பணத்தை ரிஷிகாந்த் அந்த நிறுவனங்களில் முதலீடு செய்து வந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கான்பூரில் பணியாற்றிய மேலும் இரண்டு டிஎஸ்பி அதிகாரிகளும் இந்த மிரட்டி பணம் பறிக்கும் தொழிலில் கூட்டு சேர்ந்து செயல்பட்டுள்ளனர். அவர்கள் வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட பிறகும் துபேயுடன் இணைந்து இக்கிரிமினல் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சம்பாதித்த பணத்தை கட்டுமான நிறுவனங்களில் முதலீடு செய்து தங்களது பணத்தை சட்டபூர்வமானதாக மாற்றியுள்ளனர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரிஷிகாந்த் சுக்லாவுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகள் இருந்தபோதும், அவர்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பிரபலமான அரசியல் தலைவர்கள் சுக்லாவுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து காப்பாற்றி வந்ததால், அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது என்றும் விசாரணையில் வெளிச்சமிட்டுள்ளது.

சுக்லா தனது மகன் திருமணத்தை கான்பூரில் உள்ள ஆடம்பர ரிசார்ட்டில் நடத்தினார். அதில் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் என பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
விசாரணையில் சுக்லாவுக்கு கான்பூர் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் மொத்தம் 12 இடங்களில் ரூ.92 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அனைத்து சொத்துகளும் பினாமி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1998 முதல் 2008 வரை கான்பூரில் பணியாற்றிய காலத்தில் சுக்லா பெருமளவில் சொத்துக்கள் குவித்ததாகவும் விசாரணை உறுதி செய்துள்ளது.
தற்போது சுக்லா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.


















