வளைகுடா நாடுகளில் வசிக்கும் தமிழர்களே, உங்கள் ஓய்வுக் கால செலவை எப்படி சமாளிக்கப...
இண்டிகோ விமானம் ரத்து: ஒடிசாவில் மாட்டிகொண்ட கர்நாடக மணமக்கள்; ஆன்லைனில் நடந்த திருமண வரவேற்பு!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து நாடு முழுவதும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இன்று இரவு வரை உள்ளூர் விமான சேவை அடியோடு ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இண்டிகோ ஏர்லைன்ஸ் நிர்வாகம் பைலட்களுக்குக் கூடுதல் பணி நேரம் கொடுத்து வேலை வாங்கி வந்தது.
இதையடுத்து பைலட்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு விமான சேவை பாதித்து இருக்கிறது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குச் செல்ல விமான டிக்கெட் எடுத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவைச் சேர்ந்த தம்பதி ஒன்று ஹூப்ளியில் தங்களது திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அவர்கள் புபனேஷ்வரில் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். மணமகன் ஊர் கர்நாடகா மாநிலம் ஹூப்ளியாகும்.

மேதா கிரிசாகர் மற்றும் சங்கமா தாஸ் தம்பதி ஹூப்ளியில் நடக்க இருந்த திருமண வரவேற்பில் கலந்து கொள்ள புவனேஷ்வரில் இருந்து வர இண்டிகோ விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் அவர்கள் முன்பதிவு செய்திருந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.
அதோடு அடுத்த நாள் மீண்டும் விமானம் டிக்கெட் முன்பதிவு செய்தனர். ஆனால் அந்த விமானமும் ரத்து செய்யப்பட்டது. இதனால் புதுமணத் தம்பதியால் அவர்களின் சொந்த திருமண வரவேற்பில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து திட்டமிட்டபடி ஏற்பாடு செய்யப்பட்ட திருமண வரவேற்பை நிறுத்த வேண்டாம் என்று முடிவு செய்த மணமகன் வீட்டார் திட்டமிட்டபடி திருமண வரவேற்பை நடத்தி விட முடிவுசெய்தனர்.
இதனால் திருமண வரவேற்பில் திருமண தம்பதி ஆன்லைன் மூலம் கலந்து கொண்டனர். திருமண வரவேற்பு சடங்குகளில் மணமகனின் பெற்றோர் கலந்து கொண்டனர். திருமண வரவேற்புக்கு வந்திருந்த உறவினர்கள் ஆன்லைன் மூலம் தம்பதிகளை வாழ்த்தினர்.
அதோடு அவர்கள் கொண்டு வந்திருந்த கிப்ட்களை மணமக்களிடம் ஆன்லைனில் காட்டிவிட்டு மணமகன் வீட்டாரிடம் கொடுத்தனர். மேலும் ஆன்லைனில் இருந்த திருமண தம்பதியோடு உறவினர்கள் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
இதே வரவேற்பில் கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்த பலரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அவர்களால் திருமண வரவேற்பில் கலந்து கொள்ள முடியவில்லை.

டெல்லி, ஜெய்ப்பூர், போபால், மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை மற்றும் பிற நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் விமான சேவை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் சிக்கிக்கொண்டுள்ளனர்.
இண்டிகோ தினமும் 2200 விமான சேவைகளை இயக்கி வருகிறது. ஒரே நாளில் 500 சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பைலட்களின் பணி நேர விவகாரத்தில் விதிகளை முழுமையாகப் பின்பற்ற அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை கால அவகாசம் கொடுக்கும்படி விமான நிறுவனங்கள் மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது.


















