BB Tamil 9: "இப்போ எனக்கு எல்லாம் புரியுது" - அரோராவின் காலில் விழுந்த கம்ருதீன்
'இதுதான் திராவிட மாடலா?' - தலைமைச் செயலகம் நோக்கி தூய்மைப் பணியாளர்கள்; கைது செய்த காவல்துறை
சென்னையில் மண்டலங்கள் 5 மற்றும் 6 ஐ சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் வேண்டியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் 100 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்நிலையில், இன்று குறளகம் அருகே இருந்து தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற 800 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

மண்டலங்கள் 5 மற்றும் 6 யை தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்து அந்த மண்டலங்களை சேர்ந்த கிட்டத்தட்ட 2000 தூய்மைப் பணியாளர்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ரிப்பன் பில்டிங் வெளியே போராட்டத்தை தொடங்கினர். ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவில் அவர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். அதன்பிறகும் சென்னை மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் போராடி தூய்மைப் பணியாளர்கள் கைதாகியிருந்தனர்.
போராட்டம் 100 நாட்களை கடந்த நிலையில் உயர் நீதிமன்ற அனுமதியோடு அம்பத்தூரில் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்தான் இன்று தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பிராட்வே குறளகம் முன்பிருந்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்று முதல்வரிடம் மனு கொடுக்க திட்டமிட்டிருந்தனர்.

இதனால் முன்னெச்சரிக்கையாக இன்று காலை 8 மணி முதலே குரளகம் பகுதியில் நூற்றுக்கணக்கான போலீசாரும் போராட்டக்காரர்களை கைது செய்ய 30 க்கும் மேற்பட்ட வேன்களும் பேருந்துகளும் குவிக்கபட்டது. சரியாக 11 மணிக்கு பேரணியை தொடங்கிய தூய்மைப் பணியாளர்கள் முதல்வருக்கு எதிராகவும் மாநகராட்சி ஆணையருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பிக் கொண்டே முன் நகர்ந்தனர்.
'இதுதான் திராவிட மாடலா...இதுதான் சமூக நீதியா...' 'மாநகராட்சி ஆணையர் ராம்கி நிறுவனத்தின் புரோக்கராக செயல்படுகிறார்...' போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.







குறளகம் சிக்னலில் அவர்களை மறித்த காவல்துறையினர், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவர்களை பேருந்துகளில் ஏற்றி அப்புறப்படுத்தினர். காவல்துறையின் தரப்பில் தலைமைச் செயலர் சந்தித்து மனு கொடுக்க ஏற்பாடு செய்து தருவதாக சமாதானம் பேசப்பட்டிருக்கிறது.
















