விஜய்யை விமர்சிக்க நடிகையின் பெயர்: `அவதூறு பேசுவது அழகல்ல'- நயினாரை கண்டித்த தம...
உங்கள் துணை Green Flag-ஆ? | Red Flag-ஆ? 10 பாயிண்டுகளில் கண்டுபிடிக்கலாம்; வாங்க!
ஜென் Z-யினர் காதல் மொழிகளில் பொதுவான வார்த்தைகள் 'கிரீன் ஃபிளாக்', 'ரெட் ஃபிளாக்'.
காதலுக்கும், கல்யாணத்துக்கும், வாழ்க்கைக்கும் ஏற்ற பக்கா துணை - கிரீன் ஃபிளாக். டாக்ஸிக்கான துணை - ரெட் ஃபிளாக்.
நீங்கள் கமிட்டட்டா... இல்லை... கமிட் ஆகப்போகிறீர்களா... உங்களுடைய துணை 'க்ரீன் ஃபிளாக்கா..?' 'ரெட் ஃபிளாக்கா..?' என்று கண்டுபிடிக்கும் செக்லிஸ்டைத் தருகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த உளவியலாளர் சினேகா.

க்ரீன் ஃபிளாக்ஸ்...
உங்கள் துணையிடம் இந்தப் பண்புகள் இருந்தாலே, அடுத்து 'போலாம் ரைட்' தான்...
> மரியாதை
'ஏங்க...', 'வாங்க...' என்று அழைப்பது மட்டும் மரியாதை அல்ல. நம்முடைய பேச்சைக் கவனித்து, உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதே மரியாதை.
தனியாக இருக்கும்போது மட்டும் மதிக்காமல், முக்கியமாக, மற்றவர் மத்தியில் தகுந்த மரியாதை கொடுக்கும் பண்பு வேண்டும்.
> அச்சம் இல்லாத உறவு
கடந்த கால வாழ்க்கையையோ, நம்மைப்பற்றி தாழ்வாக உணரக்கூடிய விஷயங்களையோ அல்லது எதை வேண்டுமானாலும் தயக்கமும் அச்சமும் இல்லாமல் பகிர்ந்துக் கொள்ளும் துணிவு உறவில் வேண்டும்.
இது இருந்தாலே உறவிற்கு நடுவில் மூன்றாவது நபர் வருவதற்கு இடம் இருக்காது.
> நம்பிக்கை
உறவில் நம்பிக்கை என்பது கட்டாயம் வேண்டும். இது உறவிற்கு வலுவான பாலம்.
நம் மீது அவரும்... அவர் மீது நாமும் மிகுந்த நம்பிக்கை வைக்கும் அளவிற்கு ஒரு உறவு வேண்டும். நம்பிக்கையை வெறும் நம்பிக்கையாக அல்லாமல், அது உண்மையாக இருக்க வேண்டும்.
> குணநலன்கள்
சில நேரங்களில் வெளித்தோற்றத்தினால் காதல் ஏற்படுவது உண்டு. ஆனால், அந்தக் காதல் தொடர குணநலன்கள் மிக மிக அவசியம்.

அதனால், உங்களுடைய உருவம், வெளித்தோற்றத்தைத் தாண்டி, அவரது குணநலன் உங்களுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்... உங்களுடைய குணநலனை அவர் ரசிக்க வேண்டும்.
> உறுதி
'நீ தான் எனக்கு எல்லாமே... உனக்காக உயிரைக் கூட கொடுப்பேன்' என்ற வார்த்தை ஜாலங்களுக்கு மயங்கிவிடக்கூடாது. அதை செயல்களில் காட்டுகிறாரா என்பதைப் பார்க்க வேண்டும்.
இந்த லிஸ்ட்டுகள் டிக்கானால், உங்களது உறவைத் தாராளமாக அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லலாம்.
ரெட் ஃபிளாக்ஸ்...
இனி கூறப்போகும் 5 புள்ளிகளில், ஒன்று உங்கள் துணையிடம் இருந்தாலும், கட்டாயம் 'நோ' சொல்லி எஸ்கேப் ஆகிடுங்க...
> குற்றம் சாட்டுவது
குறைகள் இல்லாத மனிதர்களே இங்கு இல்லை. சிறு சிறு குறைகளைச் சுட்டிக்காட்டியும், அனுசரித்தும் கடப்பது தான் காதல்.
ஆனால், உங்களது, அவரது குறைகளையும், குற்றச்சாட்டுகளையும் உங்கள் பக்கமே திருப்புவது நல்லதல்ல.
'உன்னால் தான்' என்ற வார்த்தை வந்தாலே அந்த உறவில் இருந்து கண்ணை மூடிக்கொண்டு விலகிவிடுங்கள்.

> கட்டுப்படுத்துவது
ஒருவரை அவரது இயல்பிலேயே ஏற்றுக்கொள்வது தான் காதல். அதை விடுத்து, 'நீ இதை தான் செய்ய வேண்டும்... இதை செய்யக்கூடாது' என்று எதற்கெடுத்தாலும் கட்டுப்படுத்தும் உறவு நமக்கு வேண்டவே வேண்டாம்.
பாதுகாப்பு என்கிற பெயரில் கட்டுப்படுத்துவது பெரும் ஆபத்து. அது ஒரு அடிமைத்தனம். அதை மட்டும் அனுமதித்து விடவே விடாதீர்கள்.
உங்களது போனை செக் செய்வது கூட இந்த ரகம் தான்.
> அவ மரியாதை
தனிமையிலும் சரி... பொது இடங்களிலும் சரி... உங்களை நாகரிகமாக நடத்தாமல் இருப்பது, உங்களது தவறுகளைச் சுட்டிக்காட்டுவது, அவர்களுடைய வீரத்தை நம் மீது காட்டுவது எல்லாமே அவ மரியாதையின் வகைகள்.
காதலிக்கும் போதே, இந்தப் பண்புகள் இருந்தால் உஷாராகி விட வேண்டும். இவற்றை ஆரம்பத்தில் உதாசீனப்படுத்துவிட்டு, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றால், ரிஸ்க் தான்.
> மௌனமாகப் புறக்கணிப்பது
எத்தனை ஆண்டுகள் காதலித்தாலும், எவ்வளவு துணையைப் பற்றி புரிந்து வைத்திருந்தாலும் சண்டை தவிர்க்க முடியாதது. சில நேரங்களில் சண்டைகள் உறவை வலுப்படுத்தும்.
அதனால், ஒவ்வொரு சண்டைக்குப் பிறகும் சின்ன அளாவளாவல் இருக்க வேண்டும். அதை விடுத்து மௌனமாகச் சூழலைத் தவிர்ப்பது... புறக்கணிப்பது உறவுகளில் பயங்கர விரிசலை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.

> கருத்துப் பகிர்தல்
காதலர்கள் இருவரும் வேறு வேறு தொட்டியில் பூத்த மலர்கள். கருத்து வேறுபாடு மிக இயல்பு.
ஆனால், அந்த மாறுபடும், வேறுபடும் கருத்தை துணையிடம் பகிர்ந்துகொள்ளும் ஸ்பேஸ் கட்டாயம் வேண்டும். அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் நமக்கு வேண்டும்.
இந்தக் குணநலன்கள் இருந்தால், அந்த உறவு வேண்டாம்... அமைதியாக விலகிவிடுங்கள்.
அப்புறம் மக்களே... உங்கள் துணையிடம் மட்டும் க்ரீன் ஃபிளாக் குணநலன்களை எதிர்பார்க்காமல் நீங்களும் அப்படி இருப்பது அவசியம். கட்டாயம் உங்களுக்குள் இருக்கும் ரெட் ஃபிளாக்குகளை விலக்கி விடுங்கள்.





















