'ஒரு முறை உங்களை தொட்டுக் கொள்ளட்டுமா'; அரவணைத்த மோகன்லால் - மூதாட்டி செய்த நெக...
கிரிக்கெட்டுக்கும் சாம்பலுக்கும் என்ன தொடர்பு?
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் போட்டி, ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கு ஆஷஸ் தொடர் என்று பெயர். இந்த தொடரை வென்ற நாடு ஆஷஸ் கோப்பையை தட்டிச் சென்றதாக அறிவிக்கப்படுவர்.
கிரிக்கெட்டுக்கும், சாம்பலுக்கும் என்ன தொடர்பு. ஏன் இந்த கிரிக்கெட் போட்டி சாம்பல் போட்டி என்று சொல்லப்படுகிறது? அது என்ன சாம்பல் கோப்பை?
உலகில் 12 நாடுகள், ஐந்து நாட்கள் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் தகுதி பெற்றிருக்கின்றன. நாடுகளுக்கிடையே நடக்கும் போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தொடர் பெரும்பாலான ரசிகர்களை ஈர்க்கும் வல்லமை உடையது.
மேலும் இந்த இரு தொடர்களும் அந்தந்த நாட்டின் தேசிய உணர்வைத் தூண்டுவதுடன், பலரையும் கிரிக்கெட் மைதானத்திற்கு வரவழைக்கும் வல்லமையை உடையது.

1877 முதல் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஐந்து நாள் கிரிக்கெட் விளையாடி வருகின்றன.
1882ஆம் வருடம், இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இதனை, “ஸ்போர்டிங்க் டைம்ஸ்” என்ற பத்திரிகைக்கு எழுதிய பத்திரிகையாளர் ரெஜினால்ட் ஷர்லி ப்ரூக்ஸ், இங்க்லிஷ் கிரிக்கெட் ஆகஸ்ட் 29 அன்று இறந்து விட்டதாகவும், அதனுடைய சாம்பல் ஆஸ்திரேலியாவிற்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் நகைச்சுவையாக இரங்கல் செய்தி எழுதினார். இது பரவலாகி பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
1883 ஆம் வருடம், இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்றது. அப்போது இங்கிலாந்து அணித் தலைவர் இவோ ப்ளிக், “சாம்பலைத் திரும்ப கொண்டு வருவோம்” என்று சூளுரைத்துச் சென்றார்.
இந்த தொடரில் இங்கிலாந்து, மூன்று போட்டிகளில் இரண்டை வென்று, தொடரைக் கைப்பற்றியது.
இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் பயன்படுத்திய பெயில்ஸ்களை எரித்து அதனை நான்கு அங்குல உயரமுள்ள டெரகோட்டா கலசத்தில் நிரப்பி, இங்கிலாந்து அணிக்கு பரிசளித்தனர், இங்கிலாந்து அணித் தலைவர் இவோ ப்ளிக்கின் வருங்கால மனைவி ஃப்ளோரன்ஸ் மோர்பி மற்றும் விக்டோரியாவைச் சேர்ந்த சில பெண்கள். இந்த கலசத்தில் இருப்பது எரிக்கப்பட்ட கிரிக்கெட் பந்தினுடைய சாம்பல் என்றும் சொல்லப்படுகிறது.

இது முதலாக இரு அணிகளும் மோதுகின்ற டெஸ்ட் தொடர் “ஆஷஸ்” என்ற பெயர் பெற்றது.
ஆஷஸ் தொடரில் இரு அணிகளும் இது வரை 345 போட்டிகளில் விளையாடி உள்ளன. இவற்றில் 142 முறை ஆஸ்திரேலியா வென்றுள்ளது.
இங்கிலாந்து 110 முறை கோப்பையை வெல்ல, 93 போட்டிகள் வெற்றி, தோல்வியின்றி முடிந்தன.
சாம்பல் நிரப்பப்ட்ட டெரகோட்டா கலசம், பழமையான ஆஷஸ் கோப்பை என்று அறியப்படுகிறது. இந்த கோப்பை, லண்டனில் உள்ள 'மார்லேபோன்' கிரிக்கெட் கிளப் அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக உள்ளது. 1998-99 வருடத்திலிருந்து, கிறிஸ்டலில் செய்யப்பட்ட ஆஷஸ் கோப்பை, வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படுகிறது.
தற்போது ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலியா வசம் உள்ளது. சாம்பலை வென்று, ஆஷஸ் கோப்பையை இங்கிலாந்து கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
-கே.என்.சுவாமிநாதன், சென்னை



















