"பெண்கள் கரு முட்டைகளை சேமிக்க வேண்டும்"- விவாதம் தூண்டிய ராம் சரண் மனைவியின் கர...
கேரளா: பஸ் மோதி 4 வயது சிறுமி பலி; பள்ளி வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த துயரம்!
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், செறுதோணி அருகே உள்ள தடியம்பாடு பரப்பள்ளிலைச் சேர்ந்த பென் ஜான்சன் என்பவரது மகள் ஹேசல் பென். நான்கு வயதே ஆன ஹேசல் பென் வாழத்தோப்பு பகுதியில் உள்ள கிரிஜோதி பள்ளியில் பிளே ஸ்கூல் மாணவியாக இருந்தார். தினமும் ஸ்கூல் பஸ்ஸில் பள்ளிக்குச் சென்றுவந்தார். நேற்று பள்ளிக்குச் சென்ற சிறுமி ஹேசல்பென் 17-ம் எண் கொண்ட ஸ்கூல் பஸ்ஸில் இருந்து இறங்கி வகுப்பறைக்குச் செல்வதற்காக பள்ளி வளாகத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அவருடன் தோழியான 3 வயது சிறுமி இனயா தெஹஸிலும் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது 19-ம் எண் கொண்ட ஸ்கூல் பஸ் எதிர்பாராத விதமாக நடந்துசென்ற ஹேசல் பென் மற்றும் இனயா தெஹஸில் ஆகியோர் மீது மோதியது. கீழே விழுந்த சிறுமி ஹேசல் பென்னின் தலையில் பஸ் சக்கரம் ஏறி இறங்கியதைத்தொடர்ந்து ஹேசல் பென் மரணமடைந்தார். இனயா தெஹஸில் காலில் பஸ் சக்கரம் ஏறி இறங்கியதால் படுகாயத்துடன் மீட்கப்பட்டார்.

விபத்தில் காயமடைந்த இனயா தெஹஸிலுக்கு இடுக்கி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மரணமடைந்த சிறுமி ஹேசல் பென்னின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது. ஸ்கூல் பஸ் டிரைவரின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், பைனாவ் பகுதியைச் சேர்ந்த பள்ளி வாகன ஓட்டுநர் சசியை கைது செய்தனர். பின்னர் ஸ்டேஷன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர்மீது மனப்பூர்வம் அல்லாத கொலை, ஆபத்தானமுறையில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


















