செய்திகள் :

கோவை சம்பவம் : `பாலியல் வன்கொடுமையை கூட நார்மலைஸ் செஞ்சிடுவீங்களா?’ - பதறும் 2K கிட்ஸ் | #HerSafety

post image

சமீபத்திய கோவை பாலியல் வன்கொடுமை மட்டுமல்லாது, உங்கள் நினைவுக்குத் தெரிந்து நடந்த பாலியல் வன்கொடுமைகளைப்பற்றிய உங்கள் கருத்துகளை விகடனிடம் சொல்லுங்கள் என சில கல்லூரி மாணவர்களிடம் கேட்டோம். வெடித்துத் தீர்த்திருக்கிறார்கள்... அரசியல் தெளிவுடனும் முதிர்ச்சியுடனும்..!

HerSafety
HerSafety

முதலில் பேச ஆரம்பித்த மாணவரின் கேள்வி, இந்தத் தலைமுறையினர் பாலியல் வன்கொடுமை விஷயத்தில் இந்த சமூகத்தைப்பற்றி எத்தனை தெளிவாக கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது.

’’ ‘இரவு 11 மணிக்குமேல் அறிமுகம் இல்லாத தெருக்களுக்கு செல்ல வேண்டாம்' என்று நீயா நானா நிகழ்ச்சியில், தெருநாய்கள் பற்றி பேசியபோது அதற்கு எதிராக கொந்தளித்த சமூகம், இப்போது 'பெண்கள் ஏன் இரவில் தனியாய் வெளியே செல்ல வேண்டும்' என்கிறது. அப்படியென்றால், சமூகத்துக்கு ஒரு நியாயம்; பெண்களுக்கு ஒரு நியாயமா?

பெண்கள், எந்த நேரத்தில், யாருடன், எங்கு செல்ல வேண்டும் என்பதை சமூகமே முடிவு செய்கிறது. சரி, அதன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பெண்களாவது பாதுகாப்பாக இருக்கின்றனரா என்றால், அதுவும் இல்லை. மருத்துவக்கல்லூரி உள்ளேயே நுழைந்து வன்புணர்வு செய்த கதையும் நம் நாட்டில் உண்டே...

தன் சுய சிந்தனையில் செயல்படாமல், சமூகம் போடுகிற கோடுகளுக்குள் அடங்கி வாழ்கிற பெண்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் மட்டுமே, குறைந்தபட்ச அனுதாபமாவது கிடைக்கும் என்றால், இச்சமூகத்தை என்னவென்று சொல்வது..?’’

இரண்டாவதாக பேசிய மாணவரின் குரலிலும் கருத்திலும் அத்துனை கோபம்.

’’தன் பாலினமே தெரியாத சிறு குழந்தைகளுக்குக்கூட பாலியல் வன்கொடுமை நடக்கின்றன என்றால், சட்டங்கள், இத்தகைய கல் நெஞ்சு கொண்ட காமக்கொடூரர்களின் நெஞ்சை பிளந்து நஞ்சை அகற்றினால்தான் எஞ்சி உள்ளவர்களுக்கு பயம் வரும். அகங்காரம் பிடித்தவர்கள் அப்பெண்ணை குறை சொல்கிறார்கள். ஆதிக்கம் செய்வது ஆணாக இருக்கையில் அவனைத்தானே விரல் நீட்ட வேண்டும். நாமெல்லோரும் அமைதியாக இருந்தால், இன்னும் எத்தனை பெண்களின் உடல் சவப்பெட்டிக்குள் பன்னீர் ரோஜாக்களின் கண்ணீரோடு உறங்கப்போகுமோ..? ’’

இவரைத்தொடர்ந்து பேசிய மாணவர், தன் பெற்றோர் வயதில் இருப்பவர்களிடம் ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார். மிகுந்த நியாயமாகப்பட்டது நமக்கு...

HerSafety
HerSafety

’’பாதிக்கப்பட்டப் பெண்ணை ஏசுகிற உங்களுக்கு, அதைத்தானே சுலபமாக செய்ய முடியும்..? ’ஏன் இரவில் அங்கு சென்றாள்’ என்கிற என் பெற்றோர் வயதில் இருக்கிற பெரியோர்களே... இரவில் மட்டுமா பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நிகழ்கின்றன..? உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள்.’’

அடுத்து பேசிய மாணவர், பாலியல் வன்கொடுமைகளை தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் எப்படி தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை, ஜஸ்ட் லைக் தட் விளக்கினார். தமிழக மாணவர்கள் தற்குறிகள் அல்ல, மக்களே...

’’வன்மையாக கண்டிக்கிறோம் என்பவர்கள் ஆளும் கட்சிக்கு எதிரானவர்கள், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம் என்பவர்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்கள், அவ்வளவுதான் வித்தியாசம். இதனை வெறும் அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்துவர் அரசியல்வாதிகள். அடுத்த சம்பவம் நடக்கும் வரை பேசுவார்கள் பொதுமக்கள். இல்லையென்றால், சட்டத்தைக் குறை கூறுவார்கள. இதற்குத் தீர்வு ஆண்-பெண் சமம் என்பதை சொல்லித்தருகிற பாலியல் கல்விதான்’’ என்கிறார் அதிரடியாக.

HerSafety
HerSafety

சிலரை ‘இருபுறமும் கூர்மையுள்ள வாள்’ என்பார்கள். இந்த மாணவர் அந்த வகையைச் சேர்ந்தவர். தன்னுடைய தலைமுறையினரின் தவறை சுட்டிகாட்டுவதோடு, தன் அச்சம் ஒன்றையும் இங்கே பதிவு செய்திருக்கிறார்.

’’2 கே கிட்ஸும், ஜெனரேஷன் Z தலைமுறையினரில்கூட, பெரும்பாலானோர் புரிதல் இன்றி பாதிக்கப்பட்டவர் மீதே பழி போடும் victim blaming செய்து வரும் சூழலைக் காணும்போது வருத்தமாக இருக்கிறது. இரவில் வெளியே போனால், பாலியல் வன்கொடுமை நடக்கும் என்று நார்மலைஸ் செய்துவிடுவார்களோ என அச்சமாக இருக்கிறது’’ என்கிறார் வேதனையாக.

கீழேயுள்ள கேள்வியை மாணவர் ஒருவர் நம்மிடம் கேட்டபோது, ‘சபாஷ் சரியான கேள்வி’ என்றோம் நம்மையும் மீறி.

’’ 'அந்த நேரத்தில் ஏன் அந்தப்பெண் வெளியே சென்றாள்?’ என்பதுதான் இப்போது பலரின் கேள்வியாக இருக்கிறது. அப்படியென்றால், இவர்களைப் பொறுத்தவரை ஆண்கள் இரவு நேரத்தில் மது அருந்தி, திருட்டு வாகனத்தில், ஆயுதங்களுடன் சுற்றுவது சரி; ஆனால், ஒரு பெண் வெளியே செல்வது தவறு... அப்படித்தானே..?

ஆணும் பெண்ணும் எந்த நேரத்திலும் எங்கு வேண்டுமானாலும் பாதுகாப்பாகச் செல்லக்கூடிய சமூகம்தான் உண்மையான சுதந்திரம். இதுகூட தெரியாத சமூகத்தில், இவர்களைப் போன்ற ராட்சசர்கள் தடையின்றி குற்றங்களைத் தொடரவே செய்வார்கள்’’ என்கிறார் ஆவேசமாக.

HerSafety
Liquor - மது

’’கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமைப்பற்றி பேச துவங்கினாலே, ஒரு பெண் ஏன் அந்த நேரத்தில் அங்கு சென்றாள் என்ற கேள்வியைத்தான் முதலில் எழுப்புகின்றனர். அந்த நேரத்தில், அந்த ஆண்கள் ஏன் அங்கு சென்றார்கள் என்கிற கேள்வி உங்கள் யாருக்கும் எழவே இல்லையா..? நாடு சுதந்திரம் பெற்று பல ஆண்டுகள் ஆனாலும் பெண்களுக்கு சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.

'பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல் அதிகாரியே ஒருமுறை ஒரு பெண்ணிடம், 'இந்த நேரத்தில் இப்படி உடை அணிந்து வந்தால் தவறாகத்தான் பார்ப்பார்கள்' எனக் கூறிய சம்பவத்தையும் நாம் இணையத்தில் பார்த்திருக்கிறோம். இதுபோன்ற பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மேல் முதலில் கேள்விகள் எழும் வரை குற்றங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்’’ என்றார் அழுத்தமாக.

இறந்த கால சமூக அவலம் ஒன்றை உதாரணம் சொல்லி, நிகழ்கால அவலத்துக்கு எதிராக கேள்வி கேட்கிற இந்த மாணவருக்கு சொல்ல, நம்மிடம் ஒரு நியாயமான தீர்வு இல்லை என்பது எத்துனை பெரிய அவலம்.

அரசையும் சமூகத்தையும் நியாயத்தராசில் நிறுத்துகிற துணிவும் இருக்கிறது இளம் தலைமுறையினருக்கு... இதோ ஒரு சோறு பதம்.

’’குற்றவாளிகள் போதைப் பொருட்களை பயன்படுத்தாமல் இருந்திருந்தால் ஒருவேளை இந்த குற்றத்தைச் செய்வதற்கு அவர்களுக்கு தைரியம் வந்திருக்குமா என்கிற கேள்வி எனக்குள் எழுகிறது. நிச்சயம் தைரியம் வந்திருக்காது என்றுதான் என் அறிவு எனக்கு சொல்கிறது. அதனால், தவறு அரசின் மீதும்தான். இதுபோன்ற சமயங்களில் மக்கள் ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே பாதிக்கப்பட்டப் பெண்ணுக்கும் ஆணுக்கும் நீதி கிடைக்கும். ஆனால், பாதிக்கப்பட்டப் பெண்ணின் மீதே குற்றம் சுமத்தி, குற்றவாளிகளை நீதிமான்களாக மாற்ற முயற்சிப்பதுபோல் இருக்கிறது இந்த மக்களின் செயல்’’ என்கிறார் பொளேரென...

கோவை மாணவி பாலியல் வழக்கு
கோவை மாணவி பாலியல் வழக்கு

மந்தை மனப்பான்மைக்கொண்ட ஒரு பெருங்கூட்டத்தை நோக்கி ‘உங்கள் கருத்துகள் தவறு’ என்று சொல்வதற்கு பெரும் துணிவு வேண்டும். கீழேயுள்ள வார்த்தைகளை ஒரு மாணவர் சொல்கையில், நமக்கும் அப்படித்தான் தோன்றியது.

’’இரவு 10 மணிக்கு மேல் பெண்கள் வெளியே சென்றால், இப்படித்தான் நடக்கும் என்று கூறும் சமூகத்துக்கும், பாலியல் வன்கொடுமை செய்த கொடூரர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது..? இன்று ஆணவக்கொலையை பற்றி அவ்வளவு பேசும் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் இதையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மாற்ற வேண்டியது சமூகத்தைத்தானே தவிர, பெண்களை அல்ல.’’

இவரைத் தொடர்ந்து பேசிய மாணவர், இந்திய சமூகத்தின் ஆணாதிக்க நாற்காலிகள் அத்தனையையும் சுக்குநூறாக உடைத்துத்தள்ளினார்.

’’பிஞ்சு முதல் மூதாட்டி வரை, அவள் எந்த உடை உடுத்தியிருந்தாலும், வீடு, ரோடு என எல்லா இடங்களிலும், அது எந்த நேரமாக இருந்தாலும், தெரிந்தவன், தெரியாதவன், உறவுக்காரன் எனப் பல ஆண்களின் பாலியல் வெறியால் துன்புறுத்தப்பட்ட எல்லா பெண்களுக்கும் நீதி கிடைத்ததோ இல்லையோ, மூட்டை மூட்டையாக 'victim blaming' கிடைத்துகொண்டே தான் இருக்கிறது.

மரண தண்டனைகள் பல விதித்தாலும், உயிர் மீதான 'அச்சத்தால்' மட்டுமே பாலியல் வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர முடியாது. இந்த ஆணாதிக்க சமூகம் கட்டிவைத்திருக்கும், 'பெண் என்பவள் ஆண்களுக்கான காமப் பொருள்' என்ற பார்வையை அடியோடு உடைத்தெறிந்தால் மட்டுமே இந்தக் கொடுமைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

இப்போது குற்றவாளிகளாகக் கைது செய்யப்பட்டவர்கள் ஒரு காலத்தில் பாதிக்கப்பட்டப் பெண்களையே குறை சொல்லும் 'victim blaming' செய்தவர்களாகக்கூட இருக்கலாம். இப்போது 'victim blaming' செய்பவர்கள் நாளை பாலியல் குற்றவாளிகளாகக் கூட மாறலாம். இவர்களை ஆங்கிலத்தில் 'potential rapists' என்று அழைப்பார்கள்.’’

’உங்க மேல இருக்கிற அக்கறையிலதானே, உங்கள திட்டுறோம்’ என்றெல்லாம் இளம் தலைமுறையினரை ஏமாற்ற முடியாதுபோல...

HerSafety
பாலியல் வன்கொடுமை

’’குடிச்சிட்டு என்ன வேணா பண்ணலாம் அப்படிங்கிற தைரியம் இந்த சமூகத்தை இன்னும் சீரழிச்சுட்டுத்தான் இருக்கு. இன்னிக்கு கோயம்புத்தூர் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை பற்றி பேசுறோம், நாளைக்கு இதே மாதிரி வேறோர் இடத்துல நடந்ததுபற்றி பேசுவோம். இந்த மாதிரியான பிரச்னைகளை வேரோடு அழிக்கணும்னா, பெற்றோர்கள், உங்க பெண் குழந்தைகளுக்கு நடனம், பாட்டுன்னு சொல்லிக் கொடுக்கிறத நிறுத்திட்டு கராத்தே மாதிரி தற்காப்புக்கலைகளை கத்துக்கொடுங்க. எங்களை நாங்களாவது காப்பாத்திக்கிறோம்’’ என்கிறார் ஒரு மாணவர் வேதனையாக.

''நடுராத்திரியில ஒரு பொண்ணு ஏன் வெளிய போனா...? அதுவும் பையனோட...!" என்று சில பிற்போக்குவாதிகளின் கருத்துகள் சக பெண்ணாக என்னையும் முள்படுக்கையில் படுத்திருப்பதுபோல் குத்திக் கிழிக்கிறது. எப்போது மாறுவார்கள் இவர்கள்... இன்னும் எத்தனை பெரியார் தான் வேண்டும்...? இவர்களின் மடத்தனத்தை மாற்ற..!

ஒரு நாடு உண்மையிலேயே சுதந்திரமானதாக ஆக முடியாது, அந்நாட்டில் பெண்கள் பயமின்றி தெருக்களில் சுதந்திரமாக நடக்க முடியாதவரை... மகாத்மாவின் கூற்றுப்படி பெண்கள் இரவில் நடமாட முடியாவிட்டால், இந்தியா இன்னும் அடிமையாகத்தானே இருக்கிறது சில காம அரக்கன்களின் ஆண்குறியில்..!’’- சக மாணவராக இந்தக் கருத்தை அவர் சொல்கையில், அவரையும் மீறி கண் கலங்கிவிட்டார். கேட்ட நமக்கும் அதே நிலைதான்...

HerSafety
HerSafety

’’பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடக்கும்போதெல்லாம், குற்றவாளிகளைப் பற்றி பேசாமல் அந்தப் பெண்ணின் ஆடையையும், நேரத்தையும், நடத்தையையுமே குற்றம் சொல்லும் மனநிலை இன்னும் மாறவில்லையே..! ஆண்கள் சட்டையில்லாமல் சாலையில் நடப்பது சாதாரணம். ஆனால், ஒரு பெண் ஸ்லீவ்லெஸ் அணிந்தால்கூட ‘அது தவறு’ என்கிறார்கள். பெண்ணும் ஒரு மனிதர்தானே..? ஆடையாலோ, நேரத்தாலோ அவளின் கண்ணியத்தை அளக்க முடியுமா என்ன..? பெண்களே மற்ற பெண்களை 'அவங்க சரியா உடை போடணும், இரவு வெளில போகக்கூடாது’ என்று சொல்வது இன்னும் அதிர்ச்சியளிக்கிறது. மாற்றம் பெண்களின் உடையிலோ, சுதந்திரத்திலோ வேண்டியதல்ல... மாற்றம் தேவைப்படுவது சமூகத்தின் சிந்தனையிலும், மனிதத்தன்மையிலும்தான். இனி பெண்கள் நாங்கள் பயந்து வாழ மாட்டோம்’’ என்கிறார் ஒரு மாணவர்.

’’மக்கள் பிறர் நிலையில் இருந்து யோசிக்கும் மனிதத்தன்மையை இழந்து வருகிறார்கள் என்றே நினைக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களை குற்றம் சொல்ல நமக்கு உரிமையில்லை என்கிற அடிப்படையே தெரியவில்லை. நாம் இப்போது அந்தப் பெண்ணை‌ப் பற்றி பதிவிடும் ஒவ்வொரு வார்த்தையும், அது ஆதரவாக இருந்தாலும் சரி, அவதூறாக இருந்தாலும் சரி, அது அவரின் வாழ்நாள் முழுதும் சமூக வலைத்தளங்களில் பதிந்து கிடக்கப்போகிறது மக்களே... பாதிக்கப்பட்டப்பெண்களின் கண்ணீருக்கு அஞ்சுங்கள்’’ என எச்சரிக்கிறார் இன்னொரு மாணவர்.

போதை, அரசியல், கல்வி நிறுவனம், சமூகம் என அனைத்தை நோக்கியும் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார் அடுத்துப்பேசிய மாணவர்.

HerSafety
HerSafety

’’எல்லாவற்றுக்கும் தமிழ்நாட்டில் திறந்துவிடப்பட்ட மது தான் காரணம் என்கிறார்கள். இதையே சில தலைவர்களும் தங்கள் குறுகிய அரசியலுக்காக பயன்படுத்துகிறார்கள். அனைத்து அரசியல் தலைவர்களுமே, மதுவிலக்கை தேர்தல் நேரத்தில் தங்கள் வாக்கு ஆதாயத்திற்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இதுபோன்ற தவறுகள் நடப்பதற்கு முதல் காரணம், சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்பான குடும்பமும், சிறுவயதில் பெற்றோர் அரவணைப்பு இல்லாமையும், பாலின பாகுபாட்டுடன் கூடிய வளர்ப்பும்தான்...

இரண்டாவது காரணம், மதிப்பான எண்ணங்களை விதைக்க வேண்டிய கல்வி நிறுவனங்கள் மாணவர்களை மதிப்பெண்கள் வாங்கும் கருவிகளாக மாற்றியதும், சமுதாயம் பற்றிய முற்போக்கு விதையை விதைக்க தவறியதும்...

மூன்றாவது காரணம், சமூகத்தை சீர்படுத்த வேண்டிய இளைஞர்களை அரசியல்படுத்த தவறிய அரசியல் கட்சிகள். இவை அனைத்தையும் தாண்டி, சமீபத்தில் நான் படித்த அருந்ததி ராய் அவர்களின் The great Indian rape trick என்கிற கட்டுரை, ’பாலியல் வன்கொடுமைக்கும், சமூகத்தில் நிலவுகிற குற்றங்களுக்கும் முக்கிய காரணமாக சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வு’களை குறிப்பிடுகிறது. இதையும் சற்று கவனத்தில் வைப்போம்’’ என்றார் தெளிவாக.

இறுதியாகப் பேசிய மாணவரும், மதுவையும் சமூகத்தின் மனப்பான்மையையுமே குற்றம் சாட்டினார்.

’’பாதிக்கப்பட்டவங்களுக்கு ஆறுதலா இல்லைன்னாகூட பரவாயில்லை. ஆனா, 'இந்த நேரத்துல பொம்பள பிள்ளைக்கி அங்க என்ன வேல'னு கேட்கிறாங்க. இங்க மாற வேண்டியது தப்பு செய்றவன் மட்டுமில்ல, அது தப்புன்னு தெரிஞ்சும் அவனுங்களுக்கு ஆதரவா குரல் கொடுக்கிற ஒரு சில மதிகெட்ட மனிதர்களும்தான். மதுபோதை ஆண்களை என்னவெல்லாம் செய்ய வைக்கும்கிறதுக்கு இந்த சம்பவமும் சாட்சியாகிடுச்சு.’’

பாலியல் வன்கொடுமைகளுக்கு அழுத்தமான முற்றுப்புள்ளி வைக்காத அரசியல் தலைவர்களின் மீதும், பாதிக்கப்பட்டவர்களின் மீதே குற்றம் சாட்டுகிற சமூகத்தின் மீதும் இளம் தலைமுறை அறிவார்ந்த கோபத்துடன் இருப்பது தெளிவாக தெரிகிறது. அது, வார்த்தைகளை தவறுதலாக சிதற விடாமல், அவர்கள் பாயின்ட் பாயின்ட்டாக பேசுவதில் நன்கு புரிகிறது.

இனி, அரசும், சமூகமும்தான் தெளிவாக வேண்டும்..!

'எனக்கு டிரெயின்ல நடந்த 'அந்த' சம்பவத்தை கம்ப்ளெயின்ட் பண்ணியிருக்கலாம்; ஆனா..' | #HerSafety

ரெண்டு, மூணு பசங்க சேர்ந்து இருந்தா... தண்ணீ அடிச்சிருந்தா... பொண்ணுங்க அரைகுறையா டிரஸ் பண்ணியிருந்தா தான் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் நடக்கும்னு சொல்ல முடியாது. இது எதுவுமே இல்லாத போது தான், எனக்கு... மேலும் பார்க்க

`யாரை நம்புவது? எங்கே அனுப்புவது?' - பெண் குழந்தையை பெற்ற ஒரு தாயின் பரிதவிப்புகள் | #HerSafety

பிஞ்சுக் குழந்தைகள் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவிகள் முதல் முதியோர் வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். சென்னை, கோவை என ஊர்களின் பெயர் மட்டுமே மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் பிஞ்சு முகங்கள் சிதைக்க... மேலும் பார்க்க

கோவை மாணவியின் கண்ணீரே கடைசியாக இருக்கட்டும்! | #HerSafety

கோவை விமான நிலையம் அருகே கடந்த 2 ஆம் தேதி இரவு 20 வயதான கல்லூரி மாணவியை, 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி பெண்களுக்கு எதிரா... மேலும் பார்க்க

'ரெண்டே ரெண்டு நிமிஷம் பெண்களே! நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?’ | உங்கள் கருத்து? |#HerSafety

மீண்டும்... மீண்டும்...கோவை மாவட்டத்தில் நடந்த கல்லூரி மாணவியின் பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், அண்ணா பல்கலைக்கழக மாணவியின் ப... மேலும் பார்க்க

`இனி அந்த வார்த்தைகள், கெட்ட வார்த்தைகள் ஆகட்டும்’ | கோவை சம்பவம் | #HerSafety

'கல்லு, கண்ணாடி... முள்ளு, சேலை... ஆம்பளைன்னா அப்பிடி இப்பிடித்தான்' என்கிற போன நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள், 'அந்த ராத்திரி நேரத்துல இந்தப் பொண்ணு ஏன் அங்க போகணும்' என்கிற புத்தம் புதிய கருத்தை, சமூக வ... மேலும் பார்க்க