செய்திகள் :

சிலரை 'அவன் ஒரு புள்ளப்பூச்சி மாதிரி' என்பது ஏன்? பிள்ளைப்பூச்சிப்பற்றிய இன்ட்ரஸ்டிங் தகவல்கள்

post image

இன்றைக்கு நடுத்தர வயதில் இருப்பவர்களுக்குத்தான் இந்தப் பூச்சியைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. தார் ரோடும், சிமெண்ட் ரோடும் பார்த்துக்கொண்டிருக்கிற இன்றைய தலைமுறையினருக்கு இந்தப் பூச்சியின் பெயர்கூட சிரிப்பை வரவழைக்கலாம். இந்தப் பூச்சியின் பெயர் பிள்ளைப்பூச்சி. பேச்சுவழக்கில் புள்ளப்பூச்சி. ஆங்கிலத்தில் மோல் கிரிக்கெட் (Mole Cricket). நாம் பேச்சு வழக்கில் புள்ளப்பூச்சி என்றே இந்தக் கட்டுரையில் பேசுவோம்.

புள்ளப்பூச்சித் தொடர்பான சில சந்தேகங்கள்

பிள்ளைப்பூச்சி
பிள்ளைப்பூச்சி

புள்ளப்பூச்சியைக் கொன்றால், உனக்கு பிள்ளைப் பிறக்காது என்பார்கள்... அது உண்மையா?

அப்பாவி இயல்பு கொண்டவர்களை 'அவன் ஒரு புள்ளப்பூச்சி' என்பார்கள்... ஏன் அப்படிக் குறிப்பிடுகிறார்கள்?

புள்ளப்பூச்சியை நம் வீட்டில் கண்டால் செல்வம் பெருகும் என்கிறார்களே... அதன் பின்னணியில் இருக்கிற உண்மை என்ன?

புள்ளப்பூச்சியை உயிருடன் வாழைப்பழத்தில் வைத்து, குழந்தையில்லாத பெண்களை சாப்பிட வைப்பார்களே...

புள்ளப்பூச்சிகளை ராணுவத்தினர் வைத்திருப்பார்களாம்... அது ஏன்? - இத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்கிறார், காட்டுயிர் ஆர்வலரும் எழுத்தாளருமான கோவை சதாசிவம்.

மண்ணுக்கடியில் வாழும் பூச்சி இது!

Mole cricket
Mole cricket

''மண்ணுக்கடியில் வாழும் பூச்சி இது. மண்புழு போலவே, புள்ளப்பூச்சியும் விவசாயிகளின் தோழமைதான். மண்புழு போலவே இதுவும், மண்ணுக்குள் மேலும் கீழுமாக நகர்ந்துகொண்டே இருப்பதால், தாவரங்களின் வேர்களுக்கு காற்றும் ஒளியும் நீரும் கிடைப்பதற்கு உதவி செய்கிறது. மண்ணை விரைவாகத் தோண்டுவதற்கு ஏற்றவாறு இதன் கால்கள் உள்ளன. மண்ணைவிட்டு இரவுகளில்தான் வெளிவரும். பகலில் பார்ப்பது கடினம். தாவரங்களின் வேர்களும் கிழங்குகளும் பிடித்தமான உணவுகள் என்பதால், சில நேரம் செடிகளின் வேர்களை கத்தரித்தும் விடும்.

புள்ளப்பூச்சியைக் கொன்றால், உனக்கு பிள்ளைப் பிறக்காது என்பார்கள்... அது உண்மையா?

Myth regarding Mole Cricket
Myth regarding Mole Cricket

புள்ளப்பூச்சியைக் கொன்றால், மண் வளம் கெடும். மண் வளம் கெட்டால், பயிர் பச்சைகளின் வளர்ச்சிக் குன்றும். விளைவு நல்ல சத்தான உணவு கிடைக்காது. அதனால், பிள்ளை பிறக்காது. அந்த வார்த்தைக்கு சரியான அர்த்தம் இதுதான்.

அப்பாவி இயல்பு கொண்டவர்களை 'அவன் ஒரு புள்ளப்பூச்சி' என்பார்கள்... ஏன் அப்படிக் குறிப்பிடுகிறார்கள்?

Myth regarding Mole Cricket
Myth regarding Mole Cricket

புள்ளப்பூச்சியை உள்ளங்கையில் மல்லாக்க படுக்க வைத்தால், ஒரு பச்சிளம் குழந்தை கை, கால்களை மடக்கி வைத்துக்கொண்டிருக்கிற வடிவிலேயே படுத்திருக்கும். மற்றபடி, நம்மை ஒன்றும் செய்யாது. இன்னொரு முக்கியமான விஷயம், நாம் அறிந்தவரை பிரபஞ்சத்தில் பெரும்பாலான உயிர்களுக்கும் அவற்றுக்கென தற்காப்பு உத்திகள் இருக்கின்றன. ஆனால், புள்ளப்பூச்சிக்கு அப்படி எந்தவொரு தற்காப்பு யுக்தியும் கிடையாது. அதனால்தான், எந்தவொரு தற்காப்பு யுக்தியும் தெரியாத அப்பாவி குணம் கொண்டவர்களை 'அவன் ஒரு புள்ளப்பூச்சிப்பா' என்கிறார்கள்.

புள்ளப்பூச்சியை நம் வீட்டில் கண்டால் செல்வம் பெருகுமா?

Myth regarding Mole Cricket
Myth regarding Mole Cricket

வீட்டில் என்பதை தோட்டத்தில், வயல்வெளியில் என எடுத்துக்கொள்ளுங்கள். புள்ளப்பூச்சி இருக்கிற மண் வளமாக இருக்கும். வளமாக இருக்கிற மண்ணில் விளைச்சல் அமோகமாக இருக்கும். விளைச்சல் அமோகமாக இருந்தால், செல்வம் பெருகும்தானே...

புள்ளப்பூச்சியை உயிருடன் வாழைப்பழத்தில் வைத்து, குழந்தையில்லாதப் பெண்களை சாப்பிட வைக்கிறார்களே...

பிள்ளைப்பூச்சி
பிள்ளைப்பூச்சி

இது பிழையான செயல். நாம் சாப்பிடுவது இரைப்பைக்குத்தான் செல்லும்; நாம் சாப்பிடுகிற எதுவும் நேரடியாக கருப்பைக்குப் போகாது என்கிற அடிப்படை அறிவியல் குறித்த புரிதல் இல்லாமையால் செய்த செயல் அது. தவிர, ஒரு குழந்தை உருவாக கருமுட்டையும், விந்தணுவும்தான் வேண்டும். இதில் புள்ளப்பூச்சியால் என்ன செய்துவிட முடியும்..?

புள்ளப்பூச்சிகளை ராணுவத்தினர் வைத்திருந்தார்களாம்... அது ஏன்?

கோவை சதாசிவம்
கோவை சதாசிவம்

இராணுவத்தினரிடம் அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்கள் சிக்கினால், அவர்களிடம் இருந்து உண்மையை வரவழைக்க புள்ளப்பூச்சியைப் பயன்படுத்துவார்களாம். அதாவது, அவர்களுடைய தொப்புளில் சில புள்ளப்பூச்சிகளை விட்டு, ஒரு தேங்காய் சிரட்டால் மூடி விடுவார்களாம். தவிர, அவர்களுடைய கை, கால்களையும் கட்டி விடுவார்களாம். மண்ணுக்குள் வாழ விரும்புகிற புள்ளப்பூச்சி அவர்களுடைய தொப்புளை குடைய ஆரம்பிக்கும். தொப்புளில் இருந்து ரத்தம் வடிய ஆரம்பித்தவுடன், இந்தப் பூச்சி வயிற்றைக் குடைந்து உள்ளே போய்விடுமோ என அஞ்சி அவர்கள் உண்மையைச் சொல்லி விடுவார்களாம். எதிரிகளிடமிருந்து உண்மையை வெளிக்கொணர பயன்படுத்தப்பட்ட இந்தப் பூச்சி, சில நேரம் அப்பாவிகளை வதைக்கவும் சிறைச்சாலைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறதாம்'' என்றவர், தொடர்ந்தார்.

பூச்சிகளோடும் வாழப் பழகுவோம்!

நம் வீட்டுத்தோட்டங்களிலேயே பார்க்க முடிந்த இந்தப் பூச்சிகளை இப்போது வயல்வெளிகளில்கூட பார்க்க முடிவதில்லை. மண் மாசுபட்டுவிட்டது. ரசாயன உரங்களின் பயன்பட்டால் நிலமும் நஞ்சாகிவிட்டது. விளைவு, மண்புழுக்களைப்போலவே புள்ளப்பூச்சிகளாலும் நிலத்துக்குள் வாழ முடியவில்லை. இன்றைக்கு புழுக்களுக்கும், பூச்சிகளுக்கும் என்ன நிகழ்ந்திருக்கிறதோ/ நிகழ்ந்துக்கொண்டிருக்கிறதோ இதுதான் நாளை நமக்கும் நம் குழந்தைகளுக்கும் நடக்கும். அதனால், பூச்சிகளோடும் வாழப் பழகுவோம்...'' என்கிறார் கோவை சதாசிவம்.

Karnataka:‌ 16 குட்டிகள் உட்பட 23 புலிகளைப் பிடித்த கர்நாடக வனத்துறை; என்ன நடக்கிறது?

கண்மூடித்தனமான தொடர் வேட்டையின் காரணமாக கிட்டத்தட்ட அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்ட வங்கப் புலிகளின் எண்ணிக்கை தென்னிந்திய காடுகளில் தற்போது மெல்ல மீண்டெழுந்து வருகின்றன. உலகில் வங்கப் புலிகள் அதிகம் ... மேலும் பார்க்க

புதுச்சேரி: நகரப் பகுதியில் ஓய்வெடுக்கும் பழம்தின்னி வவ்வால்கள்! | Photo Album

மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள்மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள்மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள்மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள்மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள்மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால... மேலும் பார்க்க

சிறிய தலை, விஷம் கூட இல்லை; பெரிய முட்டையை விழுங்கும் பாம்பு வகை பற்றி தெரியுமா?

பொதுவாக பாம்புகள் என்றாலே விஷத் தன்மை கொண்டவையாக இருக்கும். வேட்டையாடுதல் பண்பைக் கொண்டிருக்கும் தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், விஷமே இல்லாமல், பறவைகளின் முட்டைகளை மட்டுமே உண்டு உயிர்வாழும் ஒரு வி... மேலும் பார்க்க

தென்கிழக்கு ஆசியாவில் பேரழிவு: வெள்ளம், நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 442 ஆக உயர்வு

தென்கிழக்கு ஆசியா முழுவதும் தற்போது கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதில், இந்தோனேசியாதான் பெரும் சேதத்தை... மேலும் பார்க்க

தாய் புலியை பிடித்துச்சென்ற வனத்துறை, ஆதரவின்றித் தவித்த 4 குட்டிகள்; மீட்கப்பட்ட பின்னணி

வனப்பகுதிகளில் வங்கப் புலிகளை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் மாநிலங்களில் ஒன்றாக கர்நாடக மாநிலம் விளங்கி வருகிறது. அதே வேளையில், புலிகளுக்கு விஷம் வைத்து கொல்வது முதல் வாகனங்களில் அடிபட்டு இறப்பது ... மேலும் பார்க்க