``ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து அவருக்கு பொருத்தமானதல்ல" - தஸ்லிமா நஸ்ரீன்
சென்னை: காதலன் வீட்டில் மாணவி தற்கொலை - மருந்து பிரதிநிதி கைது!
சென்னை, நுங்கம்பாக்கம், புஷ்பா நகரைச் சேர்ந்தவர் பூஜா (24). இவர், கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஸ்குமார். இவர் மருந்து பிரதிநிதியாக வேலைப்பார்த்து வருகிறார். பூஜாவும் ஹரிஸ்குமாரும் பள்ளியில் படிக்கும் போதிலிருந்து காதலித்து வந்திருக்கிறார்கள். பூஜாவின் காதலை அவரின் வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் ஹரிஸ்குமாரும் பூஜாவும் பழகி வந்திருக்கிறார்கள். இந்நிலையில் ஹரிஸ்குமாரின் அம்மா, 17.01.2026-ம் தேதி பூஜாவின் அம்மாவுக்கு போன் செய்து உங்களின் மகள் திடீரென மயங்கிவிட்டார் எனக் கூறியிருக்கிறார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பூஜாவின் அம்மா, ஹரிஸ்குமாரின் வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது பூஜாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கும் தகவல் கிடைத்து அங்கு சென்றிருக்கிறார் பூஜாவின் அம்மா.

மருத்துவமனையில் பூஜா இறந்துவிட்டதாக தகவல் கிடைத்ததும் பூஜாவின் அம்மாவும் அவரின் குடும்பத்தினரும் கதறி துடித்தனர். பின்னர் ஹரிஸ்குமாரிடம் என் மகள் எப்படி இறந்தாள் என்று விசாரித்தபோது தூக்குப் போட்டுக் கொண்டதாக தெரிவித்திருக்கிறார். இதையடுத்து மகளை ஹரிஸ்குமார் கொலை செய்து விட்டதாக பூஜாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். அதோடு பூஜாவின் தந்தை கண்ணன், சூளைமேடு காவல் நிலையத்தில் என் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார், இயற்கைக்கு மாறான முறையில் மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பூஜா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவந்தது.
இதுகுறித்து சூளைமேடு போலீஸார் கூறுகையில், `` சம்பத்தன்று காதலன் ஹரிஸ்குமாரின் வீட்டுக்கு பூஜா சென்றிருக்கிறார். அங்கு இருவரும் தங்களின் திருமணம் குறித்து பேசியிருக்கிறார்கள். அப்போது பூஜா, தன்னை பதிவு திருமணம் செய்து கொள்ளும்படி ஹரிஸ்குமாரிடம் வற்புறுத்தியிருக்கிறார். அதற்கு ஹரிஸ்குமார், காலஅவகாசம் கேட்டிருக்கிறார். அதனால் பூஜாவுக்கும் ஹரிஸ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது கோபத்திலிருந்த ஹரிஸ்குமார், காதலி பூஜாவைப் பார்த்து செத்து போ என கூறியிருக்கிறார். இதில் மனமுடைந்த பூஜா, அறைக்குள் சென்று துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்திருக்கிறார். அதனால் பூஜாவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹரிஸ்குமார் மீது வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்திருக்கிறோம்'' என்றனர்.















