செய்திகள் :

சென்னை: 100-வது நாளில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "முதல்வர் செய்வது டிராமா" - கு.பாரதி பேட்டி

post image

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னை ரிப்பன் பில்டிங்குக்கு வெளியே பணி நிரந்தரம் வேண்டி 13 நாட்களாகப் போராடி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 100 வது நாளை எட்டியிருக்கிறது.

தூய்மைப் பணியாளர்களுடன் தேனீர் விருந்து, அவர்களுக்கு மூன்று வேளை உணவுத்திட்டம் என முதல்வர் ஒரு பக்கம் செய்துகொண்டிருக்கையில், இன்னொரு பக்கம் சென்னை மாநகருக்குள் தூய்மைப் பணியாளர்கள் தொடர்ச்சியாகப் போராடி கைதாகிக் கொண்டே இருக்கின்றனர்.

உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி
உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி

இரண்டு நாட்களுக்கு முன்பு மெரினா கடலில் இறங்கி போராட்டம் நடத்தியிருந்தனர். தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை ஓயமாட்டோம் என்கின்றனர். போராட்டத்தின் 100 வது நாளான இன்று ரிப்பன் பில்டிங் முன்பு முன்னெச்சரிக்கையாக நூற்றுக்கணக்கான போலீசாரும் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில், அவர்களின் போராட்டத்தின் 100 வது நாளை முன்னிட்டு போராட்டத்தை முன்னெடுக்கும் உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதியைச் சந்தித்து உரையாடினோம்.

தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் பில்டிங் முன்பு 13 நாட்கள் போராடி நள்ளிரவில் கைதானார்கள். பெரும் பேசுபொருளான அந்தப் போராட்டத்துக்குப் பிறகும் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறீர்கள். உங்களின் போராட்டம் 100 வது நாளை எட்டியிருக்கிறது. கோரிக்கைகளுக்கு இன்னும் செவிமடுக்கப்படவில்லையா?

ஆம், நாங்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு சென்னை மாநகராட்சி இன்னும் செவிமடுக்கவில்லை. அப்படிச் செவிமடுத்திருந்தால் எங்களுக்குப் போராட வேண்டிய தேவையே இருக்காதே. ரிப்பன் பில்டிங் போராட்டத்துக்குப் பிறகும் எங்கள் மக்கள் பல இடங்களில் போராடினார்கள்.

22 குற்றவியல் வழக்குகள் எங்கள் மீது பதியப்படிருக்கின்றன. 12 முறை பெண் தூய்மைப் பணியாளர்கள் கைதாகியிருக்கிறார்கள். கடைசியாக மெரினாவில் வங்கக்கடலில் நடந்த போராட்டம் துரதிஷ்டவசமானது.

கடலில் இறங்கி போராடிய தூய்மைப் பணியாளர்கள்
கடலில் இறங்கி போராடிய தூய்மைப் பணியாளர்கள்

இடுப்பளவு கடல் நீரில் உயிரைப் பணயம் வைத்து பெண்கள் போராடுகின்றனர். ஆனால், அவர்களை அழைத்து அவர்களின் கோரிக்கை என்ன எனக் கேட்க இங்கே யாருக்கும் நேரமில்லை. சினிமா படங்களை மட்டும் பார்த்துவிட்டு இயக்குநர்களை அழைத்து உச்சிமுகர்ந்து பாராட்டுகிறார்கள். எங்களின் போராட்டம் இப்போது 100 வது நாளை எட்டியிருக்கிறது. அரசு செவிமடுக்கும் வரை போராட்டங்களிலிருந்து பின்வாங்கும் எண்ணம் இல்லை.

ராம்கி நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு பெரும்பாலான பணியாளர்கள் பணிக்குத் திரும்பி விட்டார்கள் என அரசு தரப்பு சொல்கிறதே. உண்மையில் எத்தனைப் பேர்தான் பணிக்குத் திரும்பியிருக்கின்றனர்? எத்தனைப் பேர் போராடிக் கொண்டிருக்கின்றனர்?

கடந்த மாதம் அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் படி 421 பேர் ராம்கி நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு பணிக்குத் திரும்பிவிட்டனர் என்கின்றனர். இன்னும் 400 பேர்தான் பணிக்குத் திரும்பவில்லை என்கின்றனர். இதுவே உண்மையற்ற தகவல்தான்.

ஏனெனில், முதலில் ஒரு 1316 பேர் அதன்பிறகு ஒரு 100 பேர் என மொத்தமாக 1416 தூய்மைப் பணியாளர்கள் மண்டல அலுவலங்களுக்குச் சென்று ராம்கிக்குக் கீழ் செல்ல முடியாது, மாநகராட்சிக்கு கீழ் எங்களுக்குப் பணி கொடுங்கள் எனக் கடிதம் கொடுத்திருக்கின்றனர். இவர்களெல்லோருமே இன்னமும் பணிக்குத் திரும்பவில்லை. ஆக, பெரும்பாலானோர் பணிக்குத் திரும்பிவிட்டார்கள் என்பதில் உண்மையில்லை.

எல்லாருமே எளிய பெண்கள். அவர்களின் குடும்பத்துக்கு இந்தப் பணியின் மூலம் கிடைக்கும் வருமானம்தான் வாழ்வாதாரம். மூன்று மாதமாக வருமானம் இல்லை. அப்படியிருந்தும் எப்படி வீதியில் இறங்கி போராடுகிறார்கள். அந்தத் தைரியமான நிலைக்கு அவர்கள் எப்படித் தள்ளப்பட்டார்கள்?

நேற்று கூட ஒரு பெண் தொழிலாளியால் வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லையென காவலர்களை வைத்து அப்புறப்படுத்தியிருக்கிறார்கள். முன்பாவது நாங்கள் போராடி பெற்றுக் கொடுத்த தினசரி 753 ரூபாய் என்கிற ஊதியம் அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது. இப்போது அதுவும் இல்லை.

நிறைய பெண்கள் வீட்டு வேலைக்குச் செல்கின்றனர். கூலி வேலைக்குச் செல்கின்றனர். இதில் கந்துவட்டி கொடுமை வேறு. சொல்லொணா துயர்த்தில்தான் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். ஆனாலும் அவர்களுக்குள் ஒரு அறச்சீற்றம் இருக்கிறது. தங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய நீதி மறுக்கப்படுகிறது என்கிற கோபம் இருக்கிறது.

உண்ணாநிலை போராட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள்
உண்ணாநிலை போராட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள்

எல்லாவற்றுக்கும் மேல் நீங்கள் கடிதமாக எழுதி கொடுத்த உத்தரவாதத்தையும் வாக்குறுதியையும்தானே கேட்கிறோம் என்கிற தெளிவு இருக்கிறது. மூன்றாண்டுகள் கல்லூரி படிப்பை முடித்தவனை மீண்டும் முதலாமாண்டிலிருந்து படி என்றால் எப்படியிருக்கும்? நீங்களே யோசியுங்களேன்.

ஒரு நிறுவனத்தில் 10 ஆண்டுகளாக வேலை பார்க்கிறீர்கள். நாளையிலிருந்து உங்களின் சர்வீஸ் மொத்தமும் அழிக்கப்படுகிறது. நீங்கள் புதிதாகப் பணிக்குச் சேர்ந்தவராகக் கருதப்பட்டால் எப்படியிருக்கும்? அதுதான் இவர்களுக்கு நடக்கிறது. கொத்தடிமைகளாக ராம்கி நிறுவனத்துக்குச் செல்ல இவர்களுக்கு விருப்பமில்லை.

தாங்கள் குப்பையாக கசக்கி வீசப்படுகிறோம் என்பதை அவர்களால் ஏற்க முடியவில்லை.அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியின் கோரம் அவர்களுக்குப் புரிந்துவிட்டது. அதிலிருந்துதான் போராடுவதற்கான தைரியமும் பிறந்திருக்கிறது.

தனியார்மயமாக்கலை எதிர்க்கிறீர்கள். பணி நிரந்தரம் கோருகிறீர்கள். ஆனால், நான் தூய்மைப் பணியாளர்களிடம் பேசிய வரை இதைத் தாண்டியும் பல இன்னல்களை எதிர்கொள்கிறார்களே. வார விடுப்பு கூட இல்லாமல் ஓட வேண்டிய நிலையில்தானே அவர்கள் இருக்கிறார்கள்?

நிச்சயமாக, அவர்களுக்கு வார விடுப்பு கிடையாது. மகப்பேறு விடுப்பு கிடையாது. அடிப்படையாக நம் ஊரில் தொழிலாளிகளுக்குக் கிடைக்கும் எந்த உரிமையும் அவர்களுக்குக் கிடையாது. ஒதுங்குவதற்கு கழிவறை கிடையாது. அதைச் செய்கிறோம் இதைச் செய்கிறோம் என்கிறார்களே. தெருவில் இறங்கி சுத்தம் செய்யும் இவர்களுக்குப் பணி நேரத்தின் போது பயன்படுத்தப்பட்ட கழிவறைகளைக் கட்டிக் கொடுத்திருக்கலாமே?

பணி இடத்திலாவது அவர்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா? சூப்பர் வைசர்களின் பாலியல் வசைகளையும் துன்பங்களையும் சகித்துக் கொண்டுதான் அவர்கள் பணி செய்ய வேண்டியிருக்கிறது. அதையெல்லாம் விசாரிக்க ஒரு கமிட்டி கூட கிடையாது. இதில் பெரும்பாலானோர் விளிம்புநிலையில் இருக்கக்கூடிய ஒடுக்கப்பட்ட பெண்கள். சமூகநீதி பேசும் ஆட்சியிலேயே இவர்களின் குரலுக்கு மதிப்பில்லை.

மண்டபத்தில் அடைக்கப்பட்டிருக்கும் தூய்மைப் பணியாளர்கள்
மண்டபத்தில் அடைக்கப்பட்டிருக்கும் தூய்மைப் பணியாளர்கள்

நீங்கள் கேட்கும்படி மண்டலங்கள் 5 மற்றும் 6இல் தனியார்மயத்திலிருந்து பின்வாங்கினால் மற்ற மண்டலங்களும் அதைக் கேட்பார்கள். மேலும், மற்ற துறைகளுக்கும் இந்தப் போராட்டம் ஒரு வெற்றிகரமான முன்னுதாரணமாக இருக்கும். ஒரு 'அரசு' என்கிற இடத்தில் இருப்பதால் திமுக தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளில் சமரசம் செய்கிறதோ?

மண்டலங்கள் 4, 5, 6, 7, 8 ஆகியவற்றை தனியார்மயப்படுத்துவதாகக் கூறினார்கள். இப்போது 4, 7, 8 ஆகிய மண்டலங்களில் தனியார்மயப்படுத்தும் நடவடிக்கைகளை தேர்தல் வரை மேற்கொள்வதில்லை எனும் முடிவுக்கு வந்துவிட்டனர். அதையே எங்களுக்கும் செய்து விடுங்களேன். இவர்கள் தொழிலாளிகளின் குரலாக அவர்களின் உரிமைக்காக நிற்காமல், பெரு முதலாளிகளுக்கு என்ன செய்தியைக் கடத்த வேண்டும் என்கிற மனநிலையில்தான் இருக்கிறார்கள்.

மண்டலங்கள் 5, 6 இல் நாங்களாவது போராடி அரசு நிர்ணயித்திருக்கும் குறைந்தபட்ச ஊதிய உரிமையான ரூபாய் 753யைப் பெற்றிருக்கிறோம்.

ஆனால், ஏற்கனவே தனியார்மயப்படுத்தப்பட்ட மற்ற மண்டலங்களில் இன்னமும் நாளொன்றுக்கு 565 ரூபாய்தான் கூலியாகக் கொடுக்கப்படுகிறது. ஊராட்சிகளில் நிலைமை இன்னும் மோசம். 26 நாட்களுக்கு 12,750 ரூபாய் அவர்களுக்கு ஊதியமாகக் கிடைக்க வேண்டும். ஆனால், 5000 ரூபாயை மட்டுமே ஊதியமாகக் கொடுக்கிறார்கள். அதிலும் கமிஷன் அடிக்கிறார்கள்.

10 நாட்கள் வேலைக்கு வராவிடில் வேலையை விட்டு நீக்கிவிடுவோம், எங்களின் ஒப்பந்தம் முடிந்துவிட்டால் அதன்பிறகு பணிக்குப் பொறுப்பு கிடையாது, நாங்கள் நிர்ணயிப்பதுதான் சம்பளம் என அந்தத் தனியார் நிறுவனம் அத்தனைக் கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறது. பணியாளர்களுக்குப் பணி பாதுகாப்பே கிடையாது. எல்லாவற்றுக்கும் 15-20 வருடமாக வேலை பார்த்தவர்களையும் தகுதிகாண பருவத்தில் (probation period) இல் வைக்கிறார்கள். இதில் என்ன நியாயம் இருக்கிறது? தொழிலாளர் நல அமைச்சகம் என்ன செய்கிறது?

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

ரிப்பன் பில்டிங் போராட்டத்துக்குப் பிறகு அரசு தரப்பில் எதுவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா?

இல்லவே இல்லை. தூய்மைப் பணியாளர்கள் கார்ப்பரேஷனுக்கு மனு கொடுக்க சென்றால் கைது செய்கிறார்கள். ஒரு இடத்தில் கூடி பேசினால் கைது செய்கிறார்கள். போராடினால் கைது செய்கிறார்கள். தூய்மைப் பணியாளர்கள் மீது அறிவிக்கப்படாத அவசர நிலையை ஏவி விட்டிருக்கிறார்கள். நாங்கள் உட்காந்து பேச தயாராக இருக்கிறோம். ஆனால், அரசுத்தரப்பில் அதற்கான முன்னெடுப்புகள் எதுவும் இல்லை.

இந்த அரசாங்கத்தில் இப்படியெல்லாம் நடக்குமென எதிர்பார்த்தீர்களா?

நிச்சயமாக இல்லை. ஸ்டாலின் மக்களோடு மக்களாக நிற்பேன் என ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அவர் அப்படியில்லை. பெண்களைக் குண்டுக்கட்டாக வன்முறையைப் பிரயோகித்து கைது செய்திருக்கிறார்கள். வழக்கறிஞர்களைக் கைது செய்திருக்கிறார்கள். ஆனால், பஸ்ஸை உடைத்துவிட்டோம். காவலர்களைத் தாக்கிவிட்டோம் எனப் போராடியவர்கள் மீதே பொய் வழக்கு போடுகிறார்கள். ஜனநாயகக் குரல்களை நசுக்கிறார்கள். நான்கு வாரங்களுக்கு நான் பேசக்கூடாது என நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றார்கள்.

கு.பாரதி
கு.பாரதி

அந்த நான்கு வாரத்தில் இவர்களெல்லாம் இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் இவர்களெல்லாம் சங்கி. விஜய்யைப் பார்த்த புகைப்படத்தை வைத்து அவரின் ஆதரவாளர்கள் என என்னெல்லாமோ அவதூறுகளைப் பரப்பிவிட்டார்கள். எங்களின் கோரிக்கைக்கு எல்லா கட்சிகளின் ஆதரவும் எங்களுக்குத் தேவைப்பட்டது. திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, கம்யூனிஸ்ட்களின் ஆதரவுடன் உண்ணாநிலை போராட்டமெல்லாம் நடத்தினோமே.

இந்த விவகாரத்தில் திமுகவின் கூட்டணிக் கட்சிகள் இன்னும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டுமென நினைக்கிறீர்களா?

எங்களுக்கு எல்லாரின் ஆதரவும் வேண்டும். திமுகவின் கூட்டணிக் கட்சிகள் எங்களின் கோரிக்கைகளை இன்னும் வலுவாக எடுத்துரைத்தால் முதல்வரின் காதுக்கு அது சென்று சேரும் என நம்புகிறோம்.

கு.பாரதி
கு.பாரதி

கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தப் போராட்டத்தில் இன்னும் அழுத்தமான பங்களிப்பைக் கொடுக்கவில்லை. அதனால் வலதுசாரி அமைப்புகள் போராட்டத்துக்குள் ஊடுருவ தொடங்கிவிட்டன என்கிற விமர்சனமும் உங்கள் மீது வைக்கப்பட்டதே?

இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கும் நாங்கள் கம்யூனிஸ்டுகள். அம்பேத்கரியத்தையும் பெரியாரியத்தையும் உள்வாங்கிய கம்யூனிஸ்டுகள். நாங்கள்தானே இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கிறோம். பிறகு எப்படி வலதுசாரிகள் இந்தப் போராட்டத்தை அபகரிக்க முடியும்?

இந்தப் போராட்டத்துக்கு வெளியே பாட்டாளி வர்க்க விடுதலையாகப் பார்க்கும் போது சூழல் வேறு. ஆனால், சென்னை மாநகராட்சியிடம் கேட்கும் இந்தப் போராட்டத்தில் எல்லோருடைய ஆதரவையும் நாங்கள் எதிர்நோக்கிதான் இருந்தோம். வலதுசாரிகள் உள்ளே புக ஒரு இடம் உருவாகிவிட்டதென திமுக விமர்சித்தால், அந்த இடம் ஏற்பட காரணமாக இருந்ததே நீங்கள்தானே. அவர்களே இடத்தையும் கொடுத்துவிட்டு அதைக் காரணம் காட்டி போராட்டத்தை நீர்த்து போகச் செய்யும் வேலையிலும் இறங்குகிறார்கள்.

துப்புரவுப் பணியாளர்களை தூய்மைப் பணியாளர்களாக மாற்றிவிட்டோம் என முதல்வர் பெருமைப்படுகிறார். தூய்மைப் பணியாளர்களுக்கு விருந்து வைக்கிறார். மூன்று வேளையும் உணவு உட்பட பல நலத்திட்டங்களை அறிவிக்கிறார். இதிலெல்லாம் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?

இதெல்லாம் ஒரு டிராமா ஷோ. இத்தனை நாட்களாக ஏன் இதையெல்லாம் அறிவிக்கவில்லை? சென்னை மாநகராட்சியில் மட்டும்தான் தூய்மைப் பணியாளர்கள் இருக்கிறார்களா? தாம்பரம் மாநகராட்சியில் இல்லையா? அவர்களுக்கெல்லாம் ஏன் எதையும் அறிவிக்கவில்லை? மூன்று வேளை உணவு கொடுக்க 156 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறார்கள்.

தனியாருக்குக் கீழ் இருக்கும் மண்டலங்களின் ஊழியர்களுக்கு அரசு ஏன் செலவளிக்க வேண்டும்? மற்ற மண்டலங்களில் 565 ரூபாய் கூலி கொடுக்கிறார்கள் இல்லையா? குறைந்தபட்ச ஊதியத்தின் படி அவர்களுக்கு 761 ரூபாய் கிடைக்க வேண்டும். பாக்கியிருக்கும் கிட்டத்தட்ட 200 ரூபாயை அரசு தங்களின் கையிலிருந்து கொடுக்கப்போகிறது. இதையெல்லாம் ஒரு அரசு ஏன் செய்ய வேண்டும்?

நீங்கள்தான் தனியாருக்குக் கொடுத்துவிட்டீர்களே? அந்த நிறுவனங்களுக்கு இதையெல்லாம் செய்ய சொல்லி நீங்கள் உத்தரவிட முடியாதா? அரசு, தனியார் கையில் கொடுத்து அவர்கள் ஊழியர்களுக்குக் கொடுப்பதற்குப் பதில் அரசே நேரடியாக ஊழியர்களுக்குக் கொடுத்து விடுங்களேன். இதைத்தானே நாங்கள் கேட்கிறோம்.

போராட்டத்தின் 100 வது நாளில் முதல்வர் ஸ்டாலினுக்கு உங்களின் கோரிக்கை என்ன?

தூய்மைப் பணியாளர்கள் வீட்டில் உண்ணாவிரதம் இருக்கக் கூட உரிமையில்லை. உடனே கைது செய்துவிடுகிறார்கள். கைது செய்து பல மணி நேரமாக வேனில் வைத்துக் கொண்டு சுற்றுகிறார்கள். தண்ணீர் கொடுப்பதில்லை, பாத்ரூம் செல்ல அனுமதிப்பதில்லை. நடு இரவில் நடுரோட்டில் பெண்களை இறக்கி விடுகிறார்கள்.

இத்தனையையும் கடந்துதான் 100 நாட்களாகப் போராடியிருக்கிறோம். இனியும் போராடுவோம். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் இதையெல்லாம் முதல்வரின் காதுக்கு எடுத்து செல்கிறார்களா எனத் தெரியவில்லை. அதிகாரிகள் தனியார் நிறுவனத்தின் சேவகர்களாக மாறிவிட்டார்கள். ரிப்பன் பில்டிங்கில் துறைக்குச் சம்பந்தமில்லாத அமைச்சர் சேகர்பாபுதான் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இப்போது அவரே அறநிலையத்துறையில் ஊழியர்களைப் பணிநிரந்தரம் செய்வேன் என ஒற்றைக் காலில் நிற்கிறார். கோயிலில் பணி செய்தால் சுத்தம். குப்பை அள்ளினால் அசுத்தமா? உங்களுடன் ஸ்டாலின் என முதல்வர் கூறுகிறார். அவரின் அரசை தவிர எல்லாரும் எங்களின் பக்கம்தான் நிற்கிறார்கள். முதல்வரும் எங்களுக்கு எதிரில் நிற்காமல் எங்களுடன் நிற்க வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.

போதை: பள்ளிப் பேருந்தின்மீது கல்வீச்சு;`ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில்'- எடப்பாடி பழனிசாமி காட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் கிராமத்தை அடுத்த அரசலங்குடியில் தனியார் பள்ளி மினிபேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே கொந்தளிப்பையும் ஏற்பட... மேலும் பார்க்க

``புகழொடு தோன்றும் பண்பு... அன்பு இளவல்" - சீமானுக்கு எம்.பி கமல்ஹாசன் வாழ்த்து!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 59-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சீமானின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கட்சியினர் இன்று காலையில் இருந்தே சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை ... மேலும் பார்க்க

கமல் வீட்டுக்குச் சென்ற ஸ்டாலின்: ``நேற்றைய மாலை விருந்தில்" - கமல்ஹாசன் நெகிழ்ச்சி

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் அவரது வீட்டுக்குச் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.கமல்ஹாசனின் பிறந்தநாள் நேற்று கொண... மேலும் பார்க்க

`அரசு நிலம் என்று தெரியாது'- அரசு நில விற்பனை ரத்து, வழக்கில் அஜித் பவார் மகன் பெயர் மிஸ்ஸிங்!

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மகன் பார்த் பவாருக்கு புனேயில் உள்ள முந்த்வா என்ற இடத்தில் உள்ள அரசு நிலம் 40 ஏக்கர் வெறும் ரூ.300 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது... மேலும் பார்க்க

தென்காசி: "தென்மாவட்டங்களில் நடக்கும் கனிமவள கொள்ளைக்கு காட்ஃபாதர் அப்பாவு" - திலகபாமா குற்றச்சாட்டு

தென் மாவட்டங்களிலிருந்து, வெளி மாநிலங்களுக்குக் கடத்தப்பட்டு வரும் கனிம வளக் கொள்ளையைக் கண்டித்து தென்காசி மாவட்டம், தென்காசி புதிய பேருந்து நிலையம் எதிரே பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட... மேலும் பார்க்க

அதிமுக: `செங்கோட்டையன் விவகாரம்; திமுக மீது சந்தேகம்!' - பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பு தொடர்பாக பேச பா.ஜ.க தான் என்னை அழைத்தது என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``எ... மேலும் பார்க்க