பிசினஸ்மேன்களே! - உங்கள் நிறுவனத்தின் ஃபைனான்ஸை சிறப்பாக்கி, அதிக லாபம் சம்பாத...
``டெல்லியில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதல்'' - NIA விசாரணை என்ன சொல்கிறது?
டெல்லியில் கடந்த வாரம் செங்கோட்டை அருகில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர். இக்குண்டு வெடிப்பில், வெடிகுண்டு இருந்த காரை ஓட்டி வந்த டாக்டர் உமர் உல் நபியும் குண்டு வெடிப்பில் இறந்தார்.
இக்குண்டு வெடிப்பு தற்கொலைப்படைத் தாக்குதலா அல்லது எதிர்பாராத விதமாக நடந்த சம்பவமா என்பது குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வந்தது. வெடிகுண்டு நிரப்பிய காரை எடுத்து செல்லும்போது பயத்தில் வெடிகுண்டை வெடிக்க செய்திருக்கலாம் என்று ஆரம்பத்தில் நம்பப்பட்டது. தற்போது, இது ஒரு தற்கொலைப்படைத் தாக்குதல் என்று தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

உமரின் டி.என்.ஏ மாதிரி, அவரது தாயாரின் டி.என்.ஏ மாதிரியுடன் ஒத்துப்போவது நேற்று உறுதி செய்யப்பட்டது. குண்டு வெடித்த காரில் இருந்து உமரின் உடல் பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், டாக்டர் உமருக்கு உதவி செய்ததாக காஷ்மீரை சேர்ந்த அமீர் ரஷீத் அலி என்பவரை தேசிய புலனாய்வு முகமை டெல்லியில் கைது செய்துள்ளது.
தற்கொலைப்படை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை வாங்க உதவி செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஹரியானாவில் உள்ள அல் பாலா மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றிய டாக்டர் உமர், அதே கல்லூரியில் பணியாற்றிய டாக்டர் முஜாமில் ஷகீல் மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த டாக்டர் அடில் ஆகியோருடன் சேர்ந்து இக்குண்டு வெடிப்புக்கு சதித்திட்டம் தீட்டியிருந்தனர்.

இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை, டெல்லி போலீஸ், ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீஸார் இணைந்து விசாரித்து வருகின்றனர். வெடிகுண்டு இருந்த கார் எங்கெல்லாம் பயணம் செய்தது என்பதை ஆய்வு செய்ய 1,300 கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் இந்தியா கேட் உட்பட முக்கிய இடங்களில் அக்கார் தென்பட்டுள்ளது, ஆனால் எங்கேயும் நிற்காமல் சென்றுள்ளது. தேசிய புலனாய்வு முகமை, டாக்டர் உமருக்கு சொந்தமான மற்றொரு காரையும் பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகிறது.
டாக்டர் முஜாமில் ஹரியானாவில் மறைத்து வைத்திருந்த வெடிமருந்துகளை ஸ்ரீநகர் போலீஸ் நிலையத்தில் சேமித்து வைத்திருந்தனர். அந்த வெடிமருந்துகள் வெடித்து சிதறியதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். டெல்லியில் மேலும் 6 இடத்தில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்ய ரூ. 20 லட்சம் நிதி திரட்டி இருந்தனர். அதில் 3 லட்சம் ரூபாய்க்கு அமோனியம் நைட்ரேட் வாங்கப்பட்டு இருந்தது.



















