All Time High-ல் Market: எந்த துறைகளில் லாபம் பார்க்கலாம்? IPS Finance | Gold | ...
தஞ்சாவூர்: பள்ளிக்கு செல்லும் வழியில் ஆசிரியை நடுரோட்டில் வெட்டிக் கொலை; இளைஞர் வெறிச்செயல்
தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் அருகே உள்ள மேல களக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். இவரது மகள் காவியா (26). இவர் ஆலங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
அதே ஊரை சேர்ந்த கருணாநிதி என்பவரின் மகன் அஜித்குமார் (29). பெயிண்டர் வேலை செய்து வந்தார். ஒரே சமூகத்தை சேர்ந்த காவியாவும், அஜித்குமாரும் கடந்த 13 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

காவியா, அஜித்குமாரை காதலித்தது அவரது பெற்றோருக்கு பிடிக்கவில்லை. நீ டீச்சர் அவன் பெயிண்டர் இது ஒத்து வராது என சொல்லியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், புண்ணியமூர்த்தி தன் மகள் காவியாவை வற்புறுத்தி, உறவினருக்கு திருமணம் செய்து வைப்பதற்கு பேசியுள்ளார். இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது குறித்த தகவல் அஜித்குமாருக்கு தெரியவில்லை என்கிறார்கள்.
தனக்கு நிச்சயத் தார்த்தம் நடந்ததை காவியா, அஜித்குமாரிடம் தெரிவிக்கவில்லை. அத்துடன் தொடர்ந்து அஜித்குமாரிடம் போனில் பேசி வந்துள்ளார். இதே போல் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் இருவரும் செல்போனில் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை காவியா அஜித்குமாரிடம் கூறியுள்ளார். மேலும் நிச்சயத்தார்த்த போட்டோக்களையும் அஜித்குமாருக்கு அனுப்பியுள்ளார்.

அப்போதே இருவருக்கும் வாக்கு வாதம் நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று தனது டூவீலரில் வழக்கும் போல் பள்ளிக்கு கிளம்பி சென்றுள்ளார் காவியா. மாரியம்மன் கோயில் கொத்தட்டை காலனி ராமகிருஷ்ண மடம் அருகே சென்றபோது காவியாவை அஜித்குமார் வழி மறித்துள்ளார்.
எனக்கு ஸ்கூலுக்கு மணியாச்சு நான் போகணும், அப்புறம் பேசிக்கொள்ளலாம் என காவியா கூறியதாக தெரிகிறது.
இதனால் காவியா மீது ஆத்திரத்தில் இருந்த அஜித்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவியாவின் தலையில் வெட்டி குத்தி கொலை செய்துள்ளார்.
சாலையில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அஜித்குமார் அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சரணடைந்துள்ளார்.
இந்தகொலை வழக்கு தொடர்பாக பாபநாசம் டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. அஜித்குமார், `13 வருடங்களாக காதலிச்சோம். இப்ப திடீர்னு வேற ஒருவருடன் நிச்சயத்தார்த்தம் நடந்துள்ளது. காவியாவை வேறு ஒருவர் திருமணம் செய்வதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. காவியாவும் இதற்கு எப்படி சம்மதிச்சார்னு தெரியலை அதனால் கொலை செய்து விட்டேன்' என போலீஸிடம் சொன்னதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் தஞ்சாவூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






















