செய்திகள் :

திருச்சி மாவட்டம் உத்தமசீலி ஸ்ரீவேணுகோபால சுவாமி: தடைகள் நீங்கி வீடு கட்டி முடிக்க ஒரு திருக்கோயில்!

post image

சோழ மன்னர்கள் ஆட்சியில் ஏராளமான திருக்கோயில்கள் கட்டப்பட்டன. அவற்றைப் பரிபாலனம் செய்ய நான்கு வேதங்களைச் சார்ந்த அந்தணர்களையும் அதைச் சுற்றிக் குடிவைத்து முறையாக பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்தனர்.

அப்படிப்பட்ட தலங்களுக்கு சதுர்வேதி மங்கலம் என்றும் பெயரிட்டனர். அப்படிப்பட்ட ஊர்களில் ஒன்றுதான் உத்தமசீலி.

பத்தாம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஆட்சி செய்த முதலாம் பராந்தக சோழனுக்கு நான்கு மகன்கள் உண்டு என்கிறார்கள். வீர சோழன், வீர நாராயணன், குஞ்சரமல்லன், உத்தமசீலி ஆகியன அவர்களது பெயர்கள்.

உத்தமர்சீலி என்னும் நான்காம் மகனின் பெயரிலேயே இந்த ஊர் அழைக்கப்படுகிறது. முற்காலத்தில் இந்த ஊரை உத்தமசீலி சதுர்வேதிமங்கலம் என்றே அழைத்தனர் என்கிறார்கள்.

உத்தமசீலி ஸ்ரீவேணுகோபால சுவாமி திருக்கோயில்
உத்தமசீலி ஸ்ரீவேணுகோபால சுவாமி திருக்கோயில்

திருச்சியில் இருந்து கல்லணை செல்லும் வழியில், சுமார் 10 கி.மீ தொலைவில், காவிரிக் கரையையொட்டி அமைந்துள்ளது உத்தமர்சீலி. அழகும் அமைதியும் தவழும் இந்தத் தலத்தில் ருக்மிணி-சத்யபாமா சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீவேணுகோபால சுவாமி.

உலகோர் பார்த்து வியக்கும் வண்ணம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கல்லணையைக் கட்டியவர் கரிகாலச் சோழன். இத்தலத்தில் மைத்ரேய மகரிஷி கரிகாலனுக்குக் கல்லணை கட்டுவதற்கான ரகசியத்தை உபதேசித்ததாகவும் அதைக் கைக்கொண்டு அவன் கல்லணையைக் கட்டி முடித்ததாகவும் தலபுராணம் சொல்கிறது.

மேலும் இங்குள்ள ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலைக் கட்டியதும் அவரே என்று சொல்லப்படுகிறது. எனவே இக்கோயிலின் வரலாறு 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது என்கிறார்கள் ஊர் மக்கள். கரிகாலன் கட்டியகோயில் பிற்காலச் சோழர்கள் காலத்தில் புதுப்பிக்கப்பட்டது என்பது மக்கள் கருத்து.

கோயிலின் முகப்பில், ஆதிசேஷன் மீது சயனநிலையில் மகாலட்சுமி சமேதராக அருளும் திருமால், ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகியோர் காட்சி தருகின்றனர். கோயிலுக்கு உள்ளே சென்றதும் ஒரு கையை உயர்த்தி நம்மை ஆசீர்வதிக்கும் ஆஞ்சநேயரைத் தரிசிக்கலாம். அவருக்கு அருகிலேயே விநாயகரும் காட்சி தருவது கூடுதல் விசேஷம்.

உத்தமசீலி ஸ்ரீவேணுகோபால சுவாமி திருக்கோயில் ஸ்ரீ அரவிந்தநாயகி தாயார்
உத்தமசீலி ஸ்ரீவேணுகோபால சுவாமி திருக்கோயில் ஸ்ரீ அரவிந்தநாயகி தாயார்

கிழக்கு நோக்கிய திருக்கோயில், கோயிலின் நுழைவு வாயிலில் இடப்புறம் காவல் தெய்வமான ராஜகருப்புசாமி எழுந்தருளி அனைவரையும் காத்து வருகிறார். கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், முன்மண்டபம் என்ற அமைப்புடன் பெருமாள் சந்நிதி விளங்குகிறது.

கருவறையில் குழலூதும் நிலையில், திருவாயில் வெண்ணெயுடன் ருக்மிணி - சத்யபாமா சமேதராக, நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் வேணுகோபால சுவாமி. இவரை செங்கணிவாய்ப்பெருமாள் என்றும் பக்தர்கள் போற்றுகிறார்கள்.

சுவாமி சந்நிதிக்கு எதிரில் கருடாழ்வார் தனிச் சந்நிதியில் காட்சி தருகிறார். தாயார் ஸ்ரீஅரவிந்த நாயகி என்னும் திருப்பெயர் கொண்டு தனிச் சந்நிதியில் காட்சி தருகிறார். பிராகாரத்தில் ஸ்ரீநம்மாழ்வார், ஸ்ரீராமாநுஜர், ஸ்ரீசேனைமுதல்வர் ஆகியோருக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன.

மரங்களும் செடிகளும் நிறைந்த சோலையில், புள்ளினங்களில் பலவித ஓசைகளோடு திகழும் தெய்விகச் சூழலில் அமைந்திருக்கும் கோயிலில் நமக்கு ஏற்படும் பரவச உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது.

மேலும் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசியம் தரிசித்து வழிபடவேண்டிய கோயில் இது. இந்தக் கோயிலுக்கு வந்து வேண்டிக் கொண்டால், குழந்தை பாக்கியம் கிடைப்பதாகப் பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.

மேலும் வீடு கட்டும் பணியில் தடை ஏற்பட்டால், இங்கு வந்து வேணுகோபால சுவாமியை வேண்டிக் கொண்டு சென்றால், உடனே வீடு கட்டும் பணி நல்லபடியாக முடிவதும் பக்தர்கள் நம்பிக்கையாக இருக்கிறது.

உத்தமசீலி ஸ்ரீவேணுகோபால சுவாமி திருக்கோயில்
உத்தமசீலி ஸ்ரீவேணுகோபால சுவாமி திருக்கோயில்

இயற்கை எழில் கொஞ்சும் இந்த ஆலயத்துக்கு வந்தாலே மனம் இலகுவாகிறது. கவலைகள் தீர்கின்றன. வேண்டும் வரம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுவிடுகிறது. புராதனமான இந்தப் பெருமாளை வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை உத்தமர்சீலிக்கு வந்து வழிபடுங்கள். அந்த உத்தமனின் திருவருளால் உங்கள் வாழ்க்கை உன்னதமாகும்.

தினமும் கோயில் காலை: 6 முதல் 9 மணி வரை மாலை: 5 முதல் 7 மணி வரை திறந்திருக்கும்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து கல்லணை செல்லும் வழியில் சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது உத்தமர்சீலி. திருச்சியில் இருந்து பேருந்து வசதிகளும் உள்ளன.

கோவை மாவட்டம், ஊதிமலை உத்தண்ட வேலாயுத சுவாமி: தங்கம் வாங்கும் யோகம் அருளும் சித்தர் கோயில்!

தமிழக மலைத்தலங்கள் சித்தர்கள் வாழும் பூமி. பெரும்பாலும் அதில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பார். சித்தர்கள் அந்த முருகனை வழிபடுவதோடு மக்களுக்கும் தங்களால் ஆன மருத்துவச் சிகிச்சைகளை வழங்... மேலும் பார்க்க

திருவள்ளூர் மாவட்டம், மேல்பொதட்டூர் தரணி வராகப்பெருமான் திருக்கோயில்: நிலப்பிரச்னை நிச்சயம் தீரும்!

பகவான் விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் வராக அவதாரம் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தது. வராக அவதாரம் எடுத்து பூமியை மறைந்த இரண்யாட்சனை அழித்து பூமியைக் காத்த அந்த அவதார ரூபத்தில் பெருமாளை வழிபடுவது மிகவும் வ... மேலும் பார்க்க

கோவை மாவட்டம் மருதமலை மருதாசலமூர்த்தி கோயில்: பிரச்னைகள் தீர்க்கும் பாம்பாட்டிச் சித்தர் விபூதி

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு இணையான பெருமையையும் மகிமையையும் உடைய தலம் மருதமலை. கோயம்புத்தூரில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மருதமலை. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற இந்தத் தலத்தி... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டம், பொன்பரப்பி ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர்: தேன் அபிஷேகம் செய்தால் திருமணம் கைகூடும்!

நம் தேசத்தின் ஆலயங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அங்கே வழிபாடு செய்தால் சகல வரங்களும் கிடைக்கும். மேலும் இத்தலங்கள் சித்தர்களும் முனிவர்களும் வழிபட்ட தலங்கள் என்பதால் இத்தலத்தின் சாந்நித... மேலும் பார்க்க

புதுச்சேரி மணக்குள விநாயகர் திருக்கோயில்: பயமில்லாத வாழ்வு அருளும் வெள்ளைக்காரப் பிள்ளையார்!

அறம், பொருள், இன்பம், வீடெனு முறையே,தன்னை யாளுஞ் சமர்த்தெனக் கருள்வாய்,மணக்குள விநாயகா! வான்மறைத் தலைவா!தனைத்தான் ஆளுந் தன்மைநான் பெற்றிடில்எல்லாப் பயன்களும் தாமே எய்தும்,அசையா நெஞ்சம் அருள்வாய்; உயிர... மேலும் பார்க்க

திருப்பூர் மாவட்டம், கொடுவாய் ஸ்ரீ விண்ணளந்த பெருமாள்: நாக தோஷம் தீர்க்கும் கருடர்; வர ஹஸ்த அனுமன்!

கொங்கு மண்டலத்தில் புகழ்பெற்ற மூன்று விஷ்ணு ஆலயங்கள் உள்ளன. கருவலூர் ஸ்ரீ வீர ராஜேந்திர விண்ணகரப் பெருமாள் மற்றும் விஜயமங்கலம் ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள் கோயில் மற்றும் கொடுவாய் விண்ணளந்த பெருமள் திருக... மேலும் பார்க்க