The Girlfriend Review: `சால பாகுந்தி சினிமா ரா!' - எப்படி இருக்கிறாள் இந்த `தி க...
திருவள்ளூர் திருவாலங்காட்டு வடாரண்யேசுவரர் கோயில்: திருவடி தரிசனம்; முக்தி தலம்; ரத்னசபை ரகசியங்கள்!
சைவர்களின் மோட்ச ஸ்தலம் என்று போற்றப்படும் தலம் திருவாலங்காடு. பஞ்ச சபைகளில் மூத்ததான ரத்தின சபை இங்குதான் உள்ளது. உத்திரகோசமங்கை, திருவாரூரைப் போல இதுவும் தோன்றிய காலத்தை அறிய முடியாத பழம்பதி. நாலூர், கடவூர், காழி, கச்சி ஆகிய நான்கு மயானத் தலங்களை விடவும் மூத்த மயானத் தலம் இது.
காரைக்கால் அம்மை முக்தி பெற்ற தலம், ஆலங் காட்டு காளியை ஈசன் வென்ற - மாயையை அறுத்த தலம், ஊர்த்துவ தாண்டவம் எனும் அருளல் தத்துவத்தை ஈசன் உலகுக்குச் சொல்லும் தலம்.
தமிழ்நாட்டிலேயே மிகப் பழைமையான முதுமக்கள் தாழியும், கற்காலம் மற்றும் உலோகக் கால கருவிகளும் இந்த வட்டாரத்தில்தான் அதிகம் கிடைத்தன என்கிறார்கள் ஊர் மக்கள். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வெகு நாகரிகமான மக்கள் கூட்டம் வாழ்ந்த ஊர் திருவாலங்காடு. சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இந்தப் பகுதியில் பழையனூர் என்ற ஊரே பெரும் நகரமாக விளங்கியதாகவும் அங்கு வசித்த வேளாள குடிமக்கள் பண்பில் சிறந்தவர்களாக விளங்கினர் என்றும் தேவாரப் பாடல்கள் தெரிவிக்கின்றன.

இப்படிப்பட்ட அற்புதமான தலம் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஈராயிரம் ஆண்டுகளாக வரலாற்றிலும் புராணத்திலும் தனிச் சிறப்பு கொண்டு விளங்கும் ஊர் இது.
இங்கே ஈசன் வடாரண்யேஸ்வரராக அருள்பாலிக்கிறார். உற்சவர் ரத்னசபாபதி. அம்பிகை வண்டார்குழலி என்கிற திருநாமத்தோடு அருள்பாலிக்கிறாள்.
முன்னொரு காலத்தில் சும்ப, நிசும்ப அசுரர்கள் இந்தப் பகுதியைச் சிறைப்பிடித்தனர். மேலும் தொண்டை மண்டலம் முழுக்க வேள்விகளோ, வழிபாடோ நடத்த விடாமல் சகலருக்கும் துன்பம் விளைவித்து வந்தனர்.
அம்பிகை கோபம் கொண்டு தன் அம்சமான காளியைத் தோற்றுவித்து ஆலங்காட்டுக்கு அனுப்பினாள். ரௌத்திர காளியானவள் இரு அசுரரையும் ரக்த பீஜனையும் அழித்து அவர்களது குருதியைக் குடித்தாள். அசுரர்கள் அழிந்தனர் என்றாலும், அவர்களின் ரத்தத்தைப் பருகியதால் அசுரக் குணம் கொண்டவளாகக் காளி உருமாறினாள். அவளைக் கண்டு முனிவர்களும் அஞ்சி நடுங்கினர்.
முனிவர்கள் ஈசனைச் சரணடைந்து வேண்டினர். ஈசன் காளியை அந்த ஊரின் எல்லையை விட்டு நீங்கி அருளுமாறு வேண்டினார். ஆனால் காளியோ ஈசனின் நடனக் காட்சியைத் தரிசிக்க விரும்பி, ‘என்னுடன் நடனமாடி வெற்றிபெற்றால் இந்த ஆலங்காடு உமக்கே’ என்றாளாம்.
ஈசனும் சம்மதித்து ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். ஆடும்போது ஈசனின் காதில் இருந்த குண்டலம் ஒன்று கீழே விழுந்தது. அதை ஈசன் தன் இடது கால் பெருவிரலால் எடுத்து மீண்டும் தன் காதில் பொறுத்திக் கொண்டார். இது நாட்டிய கரணத்தில் எவருமே செய்ய முடியாதது. எனவே, அதைக் கண்டு வியந்து ரசித்த காளி தான் தோல்வி அடைந்ததாகச் சொல்லி வெளியேற முனைந்தாள்.

ஈசன் அவளைச் சாந்தப்படுத்தி, 'கோபம் விடுத்து, ஊரின் வெளியே குளக்கரைக்கு அருகே தனித்து இரு. இங்கு என்னைத் தேடி வருவோர், முதலில் உன்னை வழிபட்டு விட்டே என்னை வழிபடுவார்கள். அப்போதுதான் அவர்களுக்கு முழுப்பலன் கிடைக்கும்' என்று அருளினார். அதன்படியே குளக்கரையில் கோயில்கொண்டாள் ஆலங்காட்டு காளி.
திருவாலங்காட்டு ரகசியங்கள்
பஞ்ச சபைகளில் இத்தலம் ரத்ன சபை. ஈசனின் இடதுத் தோளில் பரந்துவிரிந்து கிடக்கும் சடைமுடிகளில் ஒன்றின் நுனியில் உள்ளதே பூலோகம் என்பார்கள். பிறவியில் இருந்து பிறவா நிலை அடைய ஈசனின் திருவடியைச் சரணடைய வேண்டும். ஆனால் அவரின் திருவடியோ பிரமனும் விஷ்ணுவுமே அறியாதது. சாதாரண மானுடர்களுக்கு அது சாத்தியமா...
அதனால்தான் ஈசன் உயிர்கள் எளிதில் உய்யும் வண்ணம், தன் இடது திருவடியை இடது செவிக்கருகில் வரும் வண்ணம் காலைத் தூக்கி ஆடி அருள்கிறார் இத்தலத்தில். அதாவது `இங்கே வந்து என்னை வழிபடுவோருக்கு எனது திருவடியை நானே சூட்டுவேன்’ என்று சிவம் உணர்த்துவதே முதல் ரகசியம்.
ரத்தின சபையில் நடராஜர் சந்நிதியின் பின்புறத்தில் ஓர் அறையில் ஐக்கியமாகி இருக்கிறார் காரைக்கால் அம்மை. எப்போதும் சிவானந்த திளைப்பில் அவர் ஈசனின் திருநடனத்தை இங்கே தரிசிப்பதாக ஐதிகம். முயலகன் மீது ஈசன் திருநடனம் புரிய, அருகில் ஆச்சர்யம் பொங்கக் காட்சி தருகிறாள் அன்னை சமிசீனாம்பிகை.
`சமிசீனம்’ என்றால் ஆச்சரிய பாவனை என்று பொருள். நான்கு அடி உயர திருமேனியராக எட்டு கைகளுடன் காட்சி அருளும் இந்த ரத்தினசபாபதிக்கு ஆருத்ரா நாளும், பங்குனி உத்திரமும் விசேஷம். அப்போதுதான் ஊருக்குள் திருவுலா வருவார் இவர். இந்த ஆதி சபையில் காலம் அறிய முடியாத பெரிய ஸ்படிக லிங்கமும், சிறிய மரகதலிங்கமும் உள்ளன. அதோடு விசேஷமான திருமுறைப் பேழையும் இங்கு உள்ளது.
கண்டவர் வியக்கும் ரத்தின சபையின் விமானம் செப்புத் தகடுகள் வேயப்பட்டு, ஐந்து கலசங்களுடன் விளங்குகிறது. காளியோடு ஈசன் ஆடிய திருநடனத்தைக் கண்ட தேவர்கள், இங்கு மயங்கி விழுந்தனராம். அவர்கள் மீது கங்கை நீரைத் தெளித்து ஈசன் எழுப்பினாராம். அதனால் இங்கு பக்தர்களுக்குத் தீர்த்தம் கொடுக்கும் வழக்கம் உள்ளது.
சபையின் மத்தியில் ரத்தினசபாபதி திகழ, அவர் அருகே காரைக்கால் அம்மையின் திருமேனியும் உள்ளது. தூக்கிய திருவடி ஆன்மாவுக்கு அடைக்கலம் தருவதே முதல் ரகசியம் என்று அறிந்தோம் அல்லவா? அதேபோல், இங்கே இரண்டாவது ஆலங்காட்டு ரகசியம் காரைக்கால் அம்மையின் முக்தியே ஆகும்.
'தாங்கிய வனப்பு நின்ற தசைப்பொதி கழித்து, இங்கு உன்பால் ஆங்குநின் தாள்கள் போற்றும், பேய்வடிவு அடியேனுக்குப் பாங்குற வேண்டும் என்று பரமர்தாள் பரவி நின்ற’ புனிதவதி அம்மையையும் இங்கே வந்து தரிசிக்க ஈசனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.



















