போதை: பள்ளிப் பேருந்தின்மீது கல்வீச்சு;`ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில்'- எடப்பாட...
ஊட்டி: "அண்ணா பெயரைக் கெடுக்கவே முறைகேடாக போட்டிகளை நடத்துகின்றனர்" - பெண்கள் புகாரின் பின்னணி என்ன?
அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கடந்த செப்டம்பர் மாதம் முதல் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள எச்.ஏ.டி.பி மைதானத்தில் இன்று காலை ஓட்டப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆண்கள், பெண்கள் பிரிவில் வயது மற்றும் கிலோமீட்டர் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா தொடங்கி வைத்த இந்த ஓட்டப் போட்டியில் பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர். 25 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பிரிவில் அதற்கும் குறைவான வயதுடைய பெண்களைப் பங்கேற்கச் செய்து பரிசுகளை வழங்கிய விவகாரத்தால் போட்டியாளர்கள் பலரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய 25 வயதிற்கு மேற்பட்ட பெண் போட்டியாளர்கள், "நீலகிரி மாவட்ட விளையாட்டுத்துறை மூலம் நடத்தப்படும் பல போட்டிகளில் தொடர்ந்து முறைகேடுகள் நடந்து வருகின்றன. முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளிலும் ஏகப்பட்ட விதிமீறல்கள் நடந்திருக்கின்றன.

இன்று காலை நடத்தப்பட்ட 25 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான ஓட்டப் போட்டியில் 14 முதல் 22 வயதுடைய பெண்கள் பலரையும் ஓடவிட்டார்கள். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பலரும் இவர்களுடன் ஓடியும் ஈடு கொடுக்க முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. ஏன் என்று கேட்டால் ஆள் பற்றாக்குறை காரணமாக எல்லோரையும் ஓடச் செய்தோம் என அலட்சியமாகப் பதில் சொல்கிறார்கள்.
இதனால் ஆவேசமடைந்த பலரும் விளையாட்டுத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டோம். காவல்துறையினர் வந்து சமாதானம் செய்து வைத்தனர். அண்ணா பெயரைக் கெடுக்கவே இப்படி முறைகேடாக போட்டிகளை நடத்துகிறார்கள்" எனக் கொந்தளித்தனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பதில் அளித்த நீலகிரி மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா, "ஊட்டியில் நடத்தப்படும் விளையாட்டு போட்டிகளில் ஆட்கள் குறைவான அளவிலேயே பங்கேற்கிறார்கள். இதன் காரணமாகவே 25 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பிரிவில் அனைத்து வயதுப் பெண்களும் பங்கேற்கும் பொது பிரிவாக மாற்றப்பட்டது" எனப் பதில் அளித்துள்ளார்.

















