"திமுக-வினருக்கு தவெக என்றாலே ஒரு உறுத்தலாக இருக்கிறது" - டிடிவி தினகரன்
``நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே?" - எடப்பாடியை தாக்கும் முதல்வர் ஸ்டாலின்!
வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறைக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது.
அதன் பேரில், மத்திய குழு தமிழகம் வந்து டெல்டா மாவட்டங்களில் ஆய்வு நடத்தி சென்றனர். ஆனால், இதுவரை எந்தவித அறிவிப்பும் வரவில்லை. இதனால், கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நவம்பர் 18-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.
ஆனால், நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு டெல்டா விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். நேற்று தஞ்சாவூரில் தி.மு.க விவசாய அணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``நீர்நிலைகள் நிறைந்து, உழவர்கள் கடும் உழைப்பைச் செலுத்தி நெடுவயல் நிறையக் கண்டபோது, கொள்முதல் நிலையங்களை அதிகரித்து நாம் காத்திருந்தோம். ஆனால், அதிகப்படியான மழைப்பொழிவால், நெல்மணிகள் ஈரமாயின.
உடனே, "சாகுபடிக் காலத்திற்கு முன்னதாகவே ஏன் அறுவடை செய்யவில்லை?" என்றெல்லாம் அதிமேதாவித்தன அரசியல் செய்தார், பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவரான மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள்.
நெல்லின் ஈரப்பதத்தை 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கு நான் கடிதம் எழுதினேன். அந்தக் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது. இதோ, கழனியில் பாடுபட்ட உழவர்கள் களத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
போராடும் எங்களுக்குத் துணைநிற்க யாரிடம் அனுமதி பெற வேண்டும் என திரு. பழனிசாமி அவர்கள் காத்திருக்கிறார்? கூட்டணி அமைத்தால், அதனால் தமிழ்நாட்டுக்கு நன்மைகளைப் பெற்றுத்தர வேண்டும். சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணி என்று திரு. பழனிசாமி நினைக்கிறாரா?
மூன்று வேளாண் சட்டங்களை மண்டி போட்டு ஆதரித்த திரு. பழனிசாமி அவர்கள், ஒருமுறையாவது தலையைச் சற்று நிமிர்த்தி நமது உழவர்களின் கோரிக்கைகளைக் கேட்கச் சொல்லியாவது சொல்வாரா? உழவர்கள் நலன் காக்கத் தமிழ்நாடு ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதால்தான் இத்தனையும் கேட்கிறேன். இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழவர்கள் உழைத்த உழைப்பு வீணாகக் கூடாது!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.














