"அதிமுகவின் வரலாறு தெரிந்துகொண்டு பேச வேண்டும்" - நிர்மல் குமாருக்கு ஆர்.பி.உதயக...
"'நோ கமென்ட்ஸ்' சொல்றதுக்கா இவ்வளவு பேர் கிளம்பி வந்தீங்க?" - தவெக அமைச்சரை விமர்சித்த சீமான்
சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழீழ விடுதலைப் பாடகர் தேனிசை செல்லப்பாவுக்கு நினைவேந்தல் கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட நாதக-வின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக-வின் செயல்பாடுகளை விமர்சித்துப் பேசியிருக்கிறார்.
சமீபத்தில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "நோ கமென்ட்ஸ், இதைப்பற்றிப் பிறகு பேசலாம்" எனக் கூறியிருந்தார்.
இது தொடர்பாகவும், திருச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், எதிர்க்கட்சியே இல்லாத சட்டமன்றத்தை உருவாக்குவோம் எனக் கூறியிருந்தது தொடர்பாகவும் சீமான் பேசியிருக்கிறார்.

சீமான் பேசுகையில், "மதுரையில் பேசும்போது நம்முடைய மாண்புமிகு முதல்வர், 'மோடி ஜி, இந்த மீனவர்களுக்காக நீங்கள் கச்சத்தீவை மட்டும் மீட்டுக் கொடுத்துடுங்க, அது போதும்' என்று கோரிக்கை வைக்கிறார்.
சரி, இது தொடர்பாகத் தற்போதைய மீன்வளத்துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள், 'சார், இந்த கச்சத்தீவை மீட்பது குறித்து உங்கள் கருத்து என்ன?' என்று கேள்வி எழுப்புகிறார்கள். அதற்கு அங்கிருந்த அதிகாரி முன்கூட்டியே மூன்று முறை 'நோ கமென்ட்ஸ்' என்று கூறுகிறார்.
அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சரும், 'அதுபற்றி இப்போது நாம் பேச வேண்டாம். நோ கமென்ட்ஸ்' என்கிறார். ஏன்டா, மேடைக்கு மேடை கச்சத்தீவை மீட்போம் என்று பேசிவிட்டு, செய்தியாளர்கள் கேட்கும்போது 'நோ கமென்ட்ஸ்' என்று சொல்வதற்காகவா இவ்வளவு பேர் கிளம்பி வந்தீங்க?
அடுத்ததாக அமைச்சர், 'நாங்கள் தூத்துக்குடியை ஒரு போர்ட்ஸ் நகரமாக, ஒரு துறைமுக நகரமாக மாற்றுவோம். அதுதான் எங்கள் தலைவருடைய கனவு' என்கிறார்.
டேய், தூத்துக்குடி ஏற்கனவே ஒரு துறைமுக நகரம்தான்டா. நாம் கடலில் விழுந்து சாகுறதா அல்லது கிணற்றில் விழுந்து சாகுறதா என்றே தெரியவில்லை. எந்தப் பக்கம் திரும்பினாலும் இவர்களது அரசியல் முட்டுச்சந்தாகவே இருக்கிறது.

தமிழக அறநிலையத்துறை அமைச்சர் திருச்சியில் பேசும்போது ஒரு வரலாற்றுப் பெருமுழக்கத்தை வைக்கிறார். 'எதிர்க்கட்சியே இல்லாத சட்டமன்றத்தை அமைப்போம்' என்கிறார்.
டேய்! உன்னைத்தான்டா நான் தேடிக்கொண்டிருக்கிறேன். இவ்வளவு பெரிய ஜனநாயகவாதிகளாக நீங்கள் இருக்கிறீர்களே! இதற்கிடையே நம் முதல்வர், 'இன்னும் கொஞ்சம் எனக்கு ஆதரவு அளித்திருக்கலாம்' என்று கேட்கிறார்.
அடப்பாவி, இப்போது உங்களுக்குக் கொடுத்திருப்பதே மிக அதிகம்! உண்மையைச் சொல்வதானால், இது ஒரு பெரிய அரசியல் பேரிடர்" எனக் கூறியிருக்கிறார்.




















