ஓசூர்: இளம் பெண்ணுடன் ஏற்பட்ட தன்பாலின ஈர்ப்பு; கைக்குழந்தையை கொன்ற கொடூரத் தாய்...
பி.எஃப் பென்ஷன் சிக்கல்கள்... இந்த டிஜிட்டல் யுகத்திலும் முழுமையாக முடிவுக்கு வராத காரணம்?
இ.பி.எஃப்.ஓ அமைப்பு, ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு அவர்கள் ஓய்வு பெறும் நாளன்றே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்குவதற்காக பிரயாஸ் (PRAYAAS) என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், அக்டோபர் மாதத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்குக் கடந்த வாரம், இ.பி.எஃப்.ஓ சென்னை மண்டலத்தில் பென்ஷன் வழங்கலுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. இது ஏதோ சாதனை நிகழ்வுபோல, செய்தித்தாள்களில் வெளியானது. அந்தளவுக்கு, ஒருவருக்கு ஓய்வூதியம் எந்தச் சிக்கலும், அலைச்சலும் இல்லாமல் கிடைப்பது என்பது சாதனை என்றாகியுள்ளது.
காரணம், ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியம் இதுவரை அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடவில்லை. ஓய்வூதிய விண்ணப்பம் நிராகரிப்பு, ஓய்வூதியக் கணக்கில் வரவு வைப்பதில் தாமதம், பி.எஃப் பணத்தை திரும்பப் பெறுவதில் சிக்கல், ஓய்வூதியத் தொகையில் கணக்கீட்டுத் தவறுகள் என... பி.எஃப் மற்றும் பென்ஷன் கணக்கில் இல்லாத குளறுபடிகளே இல்லை என்று சொல்லலாம்.
இ.பி.எஃப்.ஓ ஓய்வூதியம் என்பது ஊழியர்களின் பணம் மற்றும் உரிமை. ஆனால், இ.பி.எஃப்.ஓ-வின் பென்ஷனைப் பெறுவதற்குள் பலரும் பெரும்பாடு படுகிறார்கள். சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் ஆகிவிட்டன. தொழில்நுட்பத்தில் வேகமாக முன்னேறிவருகிறோம். ஆனாலும், இன்னமும் இந்த நிலை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
இ.பி.எஃப்.ஓ அமைப்பு... அவ்வப்போது குறைதீர்ப்பு முகாம் நடத்துவது, தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது, ஏதேனும் ஒரு திட்டத்தை அறிவித்து ‘இதைச் செய்கிறோம், அதைச் செய்கிறோம்’ என்று சொல்வது என்றெல்லாம் காட்டிக்கொள்கிறதே தவிர, பிரச்னைகள் முடிவது போல இல்லை. இந்நிலையில் தான், சில ஆண்டுகளுக்கு முன்னர் புது வரவாக `பிரயாஸ்’ என்ற திட்டத்தை இ.பி.எஃப்.ஓ அறிமுகப்படுத்தியது. அதற்குப் பிறகும்கூட ஓய்வூதியத்தை எளிமை யாகவும் உடனடியாகவும் பெறுவது என்பது பலருக்குக் கனவாகவே இருக்கிறது.
இந்தக் குளறுபடிகளுக்கு இ.பி.எஃப்.ஓ அமைப்புதான் முதன்மை பொறுப்பு என்றாலும், மத்திய அரசு, நிறுவனங்கள் மற்றும் மக்கள் என அனைத்துத் தரப்பினருக்குமே இதில் பங்கிருக்கிறது. அரசு எந்த ஒரு பிரச்னையையும் ஆராய்ந்து தீர்வு காண்பதில்லை. ‘சீனியர் சிட்டிசன்களை மதிக்கிறோம்’ என்று சொல்லிக்கொள்கிறதே தவிர, அவர்களை மதிக்கிறதா, மிதிக்கிறதா என்று கேட்கும் அளவுக்குத்தான் நடைமுறை நிலவரம் இருக்கிறது.
நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் பி.எஃப் நடைமுறைகளைச் சரிவர பின்பற்றுவதில்லை. மேலும், ஊழியர்களுக்கு பி.எஃப், பென்ஷன் தொடர்பான விஷயங்களைச் சொல்லி விழிப்புணர்வும் ஏற்படுத்துவதில்லை. மக்களும் பெரும்பாலும், பணத்தைப் பெறும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலையிலேயே அலட்சியமாக இருக்கிறார்கள்.
இவையெல்லாம் மாறினால்தான், ஓய்வுக்காலம் என்பது சீனியர் சிட்டிசன் களுக்கு மகிழ்ச்சியாக அமையும். இல்லையென்றால், எத்தனை திட்டங்கள் வந்தாலும் தங்களுடைய பணத்தை, உரிமையைப் பெறுவதற்கு ஓய்வு பெற்றவர்கள் அலையும் அவலம் தொடரவே செய்யும்.
- ஆசிரியர்

















