`புது ருசி, புது அனுபவம்' - சீனாவில் பிரபலமாகும் ` கரப்பான் பூச்சி காஃபி' - என்ன...
`புது ருசி, புது அனுபவம்' - சீனாவில் பிரபலமாகும் ` கரப்பான் பூச்சி காஃபி' - என்ன விலை தெரியுமா?
உலகம் முழுவதும் காபி பிரியர்கள் விதவிதமான சுவைகளில் காபி குடித்திருப்பார்கள்., ஆனால் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு புதிய வகை காபி, கேட்பவர்களையே முகம் சுளிக்க வைத்துள்ளது. பீஜிங்கில் 'கரப்பான் பூச்சி காஃபி' (Cockroach Coffee) என்ற காஃபி விற்பனைக்கு வந்துள்ளது.
பொதுவாக காபியின் மீது சாக்லேட் பவுடர் அல்லது கிரீம் தூவி அலங்கரிப்பார்கள். ஆனால், பீஜிங்கில் உள்ள ஒரு பிரபலமான கடையில் (Insect Museum) விற்கப்படும் இந்த காஃபியில், கரப்பான் பூச்சி தூவப்படுகிறது.
கேட்பதற்கே விசித்திரமாக இருக்கும் இந்த காபியின் விலை ஒரு கப்புக்கு 45 யுவான் (இந்திய மதிப்பில் இது சுமார் 520 ரூபாய்) ஆகும்.. கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காஃபி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை குடித்த வாடிக்கையாளர்கள் இதன் சுவை குறித்து கூறுகையில் "இது வழக்கமான காஃபி சுவையில் இல்லாமல், கருகிய வாசனையுடனும், லேசான புளிப்பு சுவையுடனும் இருக்கிறது," என்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அந்த கடையின் ஊழியர் ஒருவர் கூறுகையில் "நாங்கள் ஒரு பூச்சி அருங்காட்சியகத்தை நடத்தி வருகிறோம். எனவே எங்கள் தீம் மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு உணவு வகைகளை வழங்க நினைத்தோம்.
அதனால் தான் இந்த கரப்பான் பூச்சி காஃபியை அறிமுகம் செய்தோம். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது" என்று கூறியுள்ளார்.
கரப்பான் பூச்சிகள் என்றாலே நோய்களை பரப்பக்கூடியவை என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருக்கும். ஆனால், இந்த காபியில் பயன்படுத்தப்படும் பூச்சிகள் உண்பதற்கேற்ற வகையில் பிரத்யேகமாக வளர்க்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட பின்னரே பயன்படுத்தப்படுவதாக கடையின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















