Fastag-ஐ எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயன்படுத்த, `இது' ரொம்ப முக்கியம் - உடனே பண...
மனைவிக்கு ஊசி மூலம் பாதரசம் செலுத்திய கணவன்; 9 மாத போராட்டத்திற்கு பிறகு பெண் உயிரிழப்பு
பெங்களூரு அருகே உள்ள அத்திபேலே என்ற இடத்தில் வசித்தவர் வித்யா. இவரை அவரது கணவரும், அவரது மாமனாரும் சேர்ந்து கடுமையாக சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தி வந்தனர்.
திடீரென வித்யாவின் உடல் நிலை கடந்த மார்ச் மாதம் பாதிக்கப்பட்டது. உடனே அவர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கிருந்து அவர் வேறு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு வித்யாவிற்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டதில் அவரது உடம்பில் பாதரசம் கலந்திருப்பது தெரிய வந்தது.

உடனே அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதோடு அவரது மாதிரிகள் மேல் சோதனைக்காக அனுப்பப்பட்டன. இச்சோதனையிலும் உடம்பில் பாதரசம் கலந்திருப்பது தெரிய வந்தது. அவர் அங்கிருந்து விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அவரது உடம்பு முழுவதும் பாதரசம் பரவி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அது உடம்பில் உள்ள சிறுநீரகம் உட்பட அனைத்து முக்கிய உறுப்புகளையும் சேதப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.
வித்யா தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும், அவரது உடல்நிலை மோசமடைந்தது.
இது தொடர்பாக வித்யா போலீஸில் புகார் செய்தார். அவர் போலீஸில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், தனது கணவர் பசவராஜ் தனது தந்தை மாரீஸ்வராச்சாரியாவுடன் சேர்ந்து தொடர்ந்து கொடுமை செய்து அவமானப்படுத்தியும் வந்ததாக குறிப்பிட்டார்.
அடிக்கடி என்னை முட்டாள் என்று எனது கணவர் திட்டுவதாகவும், வீட்டில் அடைத்து வைப்பதோடு உறவினர்கள் யாரையும் சந்திக்க விடாமல் தடுத்ததாகவும் வித்யா கூறினார்.

உறங்கியபோது பாதரசம் செலுத்திய கணவன்
கடந்த பிப்ரவரி, ஆழ்ந்த உறக்கத்தில் சென்றேன். காலையில் தான் கண்விழித்தேன். எனது கையில் ஏதோ ஊசி போட்டது போல ஒரு வலி இருந்தது என்று வித்யா குறிப்பிட்டுள்ளார்.
வித்யாவுக்கு டாக்டர்கள் 9 மாதம் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத்தம்பதிக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது.





















