"மம்மூட்டிக்கு விருது கொடுக்க அவர்களுக்கு தகுதியில்லை" - தேசிய விருதுகள் குறித்த...
மும்பையில் கைதான போலி விஞ்ஞானி; பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடன் தொடர்பா? - தீவிர விசாரணை
மும்பையில் கடந்த வாரம் அக்தர் உசைனி (60) என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் தன்னை மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றுவதாக தெரிவித்துக் கொண்டார். அவரிடம் இதற்கான போலி அடையாள அட்டையும் இருந்தது.
அவரிடம் விசாரித்தபோது, வேறு பல பெயர்களில் பல்வேறு போலி பாஸ்போர்ட்கள், ஆதார் கார்டுகள் மற்றும் பான் கார்டுகளும் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதோடு, அணு ஆயுதங்கள் தொடர்பான 10 வரைபடங்களும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவரது சகோதரர் அடில் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சகோதரர்கள் இருவரும் 1995-ம் ஆண்டிலிருந்து வெளிநாட்டிலிருந்து நிதி பெற்றுள்ளனர். ஆரம்பத்தில் லட்சங்களில் பணம் பெற்று வந்துள்ளனர்.
ஆனால் 2000-ம் ஆண்டுக்கு பிறகு கோடிகளில் பணம் பெற்று இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாபா அணு ஆராய்ச்சி மையம் மற்றும் அணு ஆயுதங்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து கொடுத்ததற்காக இந்த பணத்தை பெற்றுள்ளனர்.
அக்தர் உசைனி பெயரில் இருந்த வங்கி கணக்குகளில் நடந்துள்ள பரிவர்த்தனைகள் சந்தேகத்தை கிளப்பும் வகையில் உள்ளன என்றும், சில வங்கி கணக்குகளை மூடியிருப்பதும் தெரிய வந்துள்ளதாகவும், அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
அந்த வங்கி கணக்குகளில் நடந்த பரிவர்த்தனை விவரங்களை போலீஸார் சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் கேட்டுள்ளனர்.

அவர்கள் பாகிஸ்தானுக்கும் சென்று வந்துள்ளனர். எனவே பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடனும் இருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும், 2004-ம் ஆண்டு துபாயிலிருந்து அக்தர் உசைனி நாடு கடத்தப்பட்டதாகவும், அதன் பிறகும் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு அக்தர் உசைனி சென்று வந்ததாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஈரானுக்கு மட்டும் 20 முறையும், சவுதி அரேபியாவிற்கு 15 முறையும், மாஸ்கோ, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கும் அவர் சென்று வந்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
அமெரிக்கா, ஈராக் நாடுகளிலிருந்தும் இருவருக்கும் பணம் வந்துள்ளதாகவும், 2004-ம் ஆண்டுக்குப் பிறகு வெளிநாடுகளில் இருந்து மர்ம நபர்களிடமிருந்து அதிக அளவில் பணம் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்தர் 40 முறை வெளிநாடுகளுக்கு சென்று வந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

















