Music for Meals: சமூக சேவைக்கு நிதி திரட்ட இசை நிகழ்ச்சி; இளையராஜாவிற்குக் குவிய...
`வாசிப்புப் பழக்கம் தொடர்வது மகிழ்ச்சி' - பவா செல்லதுரை பரிந்துரைக்கும் 3 நூல்கள்!
கோலாகலமாக நடைபெற்று வரும் 49-வது சென்னை புத்தக கண்காட்சியில், வார இறுதியில் குவிந்த வாசக கூட்டத்திற்கு மத்தியில், தனசீலி திவ்யநாதன் எழுதிய ஏவாளும் சாராளும் நூல் வெளியீட்டு நிகழ்வு, Her Stories அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் பவா செல்லதுரை கலந்துகொண்டார்.
வாசகர்களுடனும் எழுத்தாளர்களுடனும் இயல்பாக உரையாடும் அவரது பாணி, அரங்கில் கூடியிருந்த இளம் வாசகர்களின் கவனத்தை ஈர்த்தது. புத்தக வெளியீட்டின் பின்னர், இலக்கியம், வாசிப்பு பழக்கம் மற்றும் இன்றைய சமூக சூழலில் புத்தகங்களின் அவசியம் குறித்து அவர் வாசகர்களுடன் உரையாடினார். குறிப்பாக இளம் தலைமுறையினரிடையே வாசிப்பு பழக்கம் தொடர்ந்து இருப்பது குறித்த அவரது கருத்துகள், நிகழ்வில் கலந்து கொண்ட பலரையும் ஈர்த்தது.

அவரிடம் பேசியபோது, “எப்போதும் போல இந்த வருடமும் புத்தக கண்காட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நான் இன்று தான் இங்கு வருகிறேன். இளம் வாசகர்களின் கூட்டத்தை பார்க்கும் போது, புத்தகம் படிக்கும் பழக்கம் இன்றைய தலைமுறைக்கும் தொடர்வது மகிழ்ச்சியாக உள்ளது. எழுத்தாளர்களும் வாசகர்களும் நேரடியாக ஒன்றிணையும் இடமாகவே நான் புத்தக கண்காட்சியை பார்க்கிறேன்,” என்றார்.
இந்த வருடத்திற்கான தனது புத்தக பரிந்துரைகள் குறித்து பேசுகையில்,
``சமீப காலத்தில் பெண்களை மையப்படுத்தி வெளிவந்த முக்கியமான படைப்பாக சால்ட் பதிப்பகம் வெளியிட்ட எழுத்தாளர் நரனின் `குமாரத்தி' நாவலை அவர் குறிப்பிட்டார்.
சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் யதார்த்தங்களை நேர்மையாக பேசும் இந்த நாவல், அனைவரும் கட்டாயமாக வாசிக்க வேண்டிய படைப்பு என அவர் தெரிவித்தார்.

மேலும், மற்றொரு சமீபத்திய படைப்பாக சால்ட் பதிப்பகம் வெளியிட்ட பிரியா தம்பி எழுதிய `தேவி விலாசம்' நாவலை அவர் எடுத்துரைத்தார். ஆண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொண்டோ, காணாமல் போய்க் கொண்டோ இருக்கும் ஒரு வீட்டின் கதையை, பெண்களின் உலகம் வழியாக சொல்லும் இந்த நாவல், வாசகர்களை சிந்திக்க வைக்கும் படைப்பாக இருப்பதாக அவர் கூறினார்.
தனது மூன்றாவது பரிந்துரையாக `வாரண மௌனம்' நூலை அவர் குறிப்பிட்டார். லாரன்ஸ் ஆண்டனி மற்றும் கிரகாம் ஸ்பென்ஸ் இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய The Elephant Whispers நூலின் தமிழ் மொழிப்பெயர்ப்பாக இது வெளியாகியுள்ளது.
எழுத்தாளர் மானசி தமிழாக்கம் செய்துள்ள இந்த நூல், இயற்கை, மனிதன் மற்றும் விலங்குகளுக்கிடையேயான உறவை பேசும் முக்கியமான படைப்பாக இருப்பதாகவும், எதிர் வெளியீடாக வெளிவந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.



















