Pudhiya Geethai: "விஜய் சார், கிறிஸ்துவர்னு 'கீதை' டைட்டில் வைக்க விடல!" - இயக்க...
"விசில் அடிச்சா இதயம் நல்லா வேலை பார்க்கும்" - செங்கோட்டையன் கருத்து அறிவியல் பூர்வமானதா?
பொதுவாகவே, அரசியல்வாதிகள் அவ்வப்போது மருத்துவர் அவதாரம் எடுத்து, சிகிச்சை, உடல்நலம் பற்றிய கருத்துகளை பொதுவெளியில் சொல்வதுண்டு. அப்படியான கருத்துகள் பெரும்பாலும் அறிவியல் பூர்வமான ஆதாரத்துடன் சொல்லப்படாது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடங்கி நமது மாநில தலைவர்கள் வரை இது போன்ற கருத்துகளை அவ்வப்போது சொல்வதுண்டு. கோவிட் வைரஸை கொல்ல உடலுக்குள் கிருமிநாசினி செலுத்துவது போன்ற சிகிச்சை இருக்கிறதா என்று செய்தியாளர் சந்திப்பில் சீரியஸாக கேள்வி எழுப்பினார் அதிபர் ட்ரம்ப்.

'கோமியம் குடித்தால் கோவிட் தொற்று ஏற்படாது', 'மாட்டுத் தொழுவத்தில் தூங்கினால் புற்றுநோய் குணமாகும்' என்பது போல நம் நாட்டு அரசியல்வாதிகள் பேசிய பல உதாரணங்களைக் கூறலாம். சமீபத்தில் ஒரு மூத்த அரசியல்வாதி விரதம் இருந்தால் கேன்சர் செல் இறந்து போகும் என்ற வகையில் பேசியிருந்தார். தற்போது தேர்தல் காலம் என்பதால், இந்த வகை கருத்துகளை சற்று அதிகமாகவே கேட்க முடிகிறது.
அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த மூத்த அரசியல்வாதி கே.ஏ.செங்கோட்டையன், "நம்முடைய விசில் சின்னத்துக்கு ஒரு பெருமை இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, விசில் சின்னம் தான் இந்தியாவை நாளை ஆளப் போகிறது. சின்னக் குழந்தைகளுக்கு சளி பிடித்திருந்தால் விசில் ஊதினால் போதும். சளி நின்று போய்விடும்.

மூச்சுப் பயிற்சி வேண்டும் என்பார்கள். முதியவர்கள் விசில் அடித்தால் இதயம் நன்றாக வேலை செய்ய ஆரம்பித்து விடும். இயற்கையோடு நாம் வாழ்கிறோம். அதனால் தான் நமக்கு விசில் சின்னம் கிடைத்திருக்கிறது" என்று பேசியிருந்தார் செங்கோட்டையன்.
விசிலுக்கும் உடல் நலத்தை மேம்படுத்தும் தன்மை இருக்கிறதா என்று சென்னையைச் சேர்ந்த மூத்த நுரையீரல் மருத்துவர் பிரசன்ன குமார் தாமஸ் அவர்களிடம் கேட்டோம். "குழந்தைகளுக்கு விசில் ஊதுவதால் சளி தொந்தரவு சரியாகும் என்பதில் துளியும் உண்மை இல்லை. தவிர, மருத்துவ ரீதியாக அது சாத்தியமும் இல்லை.
பெரியவர்களுக்கு சுவாசப் பிரச்னைகள் இருந்தால், விசில் ஊதுவது அவர்களின் சுவாசத் திறனை (Respiratory Capacity) மிகச் சிறிய அளவில் மேம்படுத்தக்கூடும். ஆனால், விசில் ஊதுவது என்பது ஒரு சீரான அல்லது நீடித்த சுவாசம் (Sustained Breathing) கிடையாது. நுரையீரல் திறனை அதிகரிக்க, கோவிட் போன்ற நுரையீரல் தொற்றுக்குப் பிறகு, மூச்சுப்பயிற்சி போன்வற்றுக்கு பலூன் ஊதும் சிகிச்சைதான் பரிந்துரைக்கப்படுகிறது.

விசில் ஊதுவதையும் பலூன் ஊதுவதையும் ஒன்றாகக் கருத முடியாது. பலூன் ஊதும்போது காற்றையும் அழுத்தத்தையும் நுரையீரலுக்குள் தக்க வைப்பதால் அது நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. ஆனால் விசில் ஊதும்போது அழுத்தம் அனைத்தும் விசில் சத்தமாக ஒரே முறையில் வெளியேறிவிடுவதால் நுரையீரலுக்குள் அழுத்தம் தங்குவதில்லை. பலூன் ஊதுவதைப் போல விசில் ஊதுவதை நீண்ட நேரம் செய்யக்கூடாது. மேலும், விசில் ஊதுவதால் இதயத் துடிப்பு அல்லது இதயத்தில் ரத்த ஓட்டம் (Heart Pumping) சீராகும் என்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை." என்று திட்டவட்டமாகக் கூறுகிறார்.


















