நெல்லை பாய்ஸ்: ``நெல்லைக்கு அரிவாளும், வன்முறையும்தான் அடையாளமா?" - திருமாவளவன் ...
விருதுநகர்: ``வாரச்சந்தைக்கு நிரந்தர இடம் வேண்டும்'' - நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்
விருதுநகர், ஆவியூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த காய்கறி வியாபாரிகள் விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட ஏ.ஏ.சாலையில் திங்கள்தோறும் வாரச்சந்தை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர்.
அப்போது, அங்கு வியாபாரம் செய்ய நகராட்சி நிர்வாகம் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து சாலையில் காய்கறிகளை கொட்டி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், நகராட்சி ஆணையாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நகராட்சி மைதானத்தில் வியாபாரம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த இரு மாதங்களாக அங்கு வியாபாரம் செய்து வந்தனர். இங்கு, குறைந்த விலையில் காய்கறி கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.

இந்நிலையில், நேற்று, நகராட்சி மைதானத்தில் கடைகள் வைத்து வியாபாரம் செய்யக் கூடாது என திடீரென போர்டு வைக்கப்பட்டது. எனவே, நிரந்தர இடம் கேட்டு நகராட்சி அலுவலகத்தை காய்கறி வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.
பின்னர் நகராட்சி மைதானம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த டி.எஸ்.பி, யோகேஸ்வரன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் தேவா, சி.பி.எம் நகர் செயலாளர் ஜெயபாரத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தையின் போது, இந்த வாரம் மட்டும் நகராட்சி மைதானத்தில் வியாபாரம் செய்யலாம் என்றும் அதன் பிறகு நகராட்சி நிர்வாகம் ஒதுக்கீடு செய்யும் இடத்தில் வியாபாரம் செய்யலாம் என கூறப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் காய்கறி வியாபாரிகள் மனு அளித்தனர்.



















