`எடப்பாடி பழனிசாமிக்கு அட்வைஸ்; விஜய் மீது மறைமுக விமர்சனம்' - உதயநிதி ஸ்பீச் ஹை...
”விளையாட்டு விடுதியில் 9ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை”- 4 பள்ளி மாணவர்கள் மீது போக்சோ வழக்கு
தஞ்சாவூர் மேம்பாலம் அருகே அரசு அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் உள்ளது. இந்த மைதானத்தில் விளையாட்டு பயிற்சி பெறும் மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிப் பள்ளியில் படித்துக்கொண்டு விளையாட்டுப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விடுதியில் தங்கி 14 வயது மாணவன் ஒருவன் 9ம் வகுப்பு படித்து வந்தான். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்கள், 10ம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 2 பேர் என மொத்தம் 4 மாணவர்கள் சேர்ந்து கடந்த சில மாதங்களாக அந்த மாணவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர். சிகரெட் புகைக்கக் கட்டாயப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து இந்த மாணவர்களின் டார்ச்சர் செய்து வந்துள்ளனர். இதில் கடும் மன உளைச்சளுக்கு ஆளான பாதிக்கப்பட்ட மாணவன், தன் பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளார்.
இதையடுத்து மாணவனின் பெற்றோர், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட்டிடம் புகாரளித்தனர். இதன் பேரில், மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நான்கு மாணவர்கள் விடுதியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவன் அளித்த தகவலின் பேரில், குழந்தைகள் உதவி மைய அலுவலர் தியாகராஜன், நான்கு மாணவர்கள்மீது, தஞ்சாவூர் அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தியதுடன், நான்கு மாணவர்கள் மீதும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமையம் முன்பு ஆஜர்படுத்தினர். பின்னர் சிறார் சீர்திருத்த பள்ளியில் நான்கு மாணவர்களும் அடைக்கப்பட்டனர்.
















