Bank account-ல ரூ.1,20,000 உங்ககிட்ட இருந்தா... நீங்க உஷார்?! | #EmergencyFund
ஸ்கூட்டர் ரூ.1 லட்சம்; அபராதம் ரூ.21 லட்சம்! என்ன நடந்தது?
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டிய இளைஞர் ஒருவருக்கு, போக்குவரத்து போலீசார் ரூ.20.74 லட்சம் அபராதம் விதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்கூட்டரின் மதிப்பை விட 20 மடங்கு அதிக அபராதம் விதிக்கப்பட்ட இந்த ரசீது, சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, காவல்துறை தங்களது தவறைத் திருத்தி, அபராதத் தொகையை ரூ.4,000 ஆகக் குறைத்துள்ளது.
என்ன நடந்தது?
முசாபர்நகரின் மண்டி பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, அன்மோல் சிங்கால் என்ற இளைஞர் தனது ஸ்கூட்டரில் சென்றுள்ளார். அப்போது அங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
சோதனையில் அந்த இளைஞர் ஹெல்மெட் அணியாததையும், வாகனத்திற்கான முறையான ஆவணங்கள் இல்லாததையும் கண்டறிந்தபின் அவரது ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, போலீசார் அவருக்கு ரூ.20.74 லட்சம் அபராதம் விதித்து ரசீது வழங்கியுள்ளனர். ஸ்கூட்டரின் மதிப்பே சுமார் ரூ.1 லட்சம்தான் என்கிற நிலையில், 20 மடங்குக்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்திருக்கிறார். அந்த அபராத ரசீதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்தப் பதிவு வேகமாகப் பரவி, உத்தரப் பிரதேச காவல்துறைக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இந்த விவகாரம் சர்ச்சையானதை அடுத்து முசாபர்நகர் போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் அதுல் சௌபே விளக்கம் அளித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், "மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 207-இன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், சலான் வழங்கிய துணை ஆய்வாளர் '207' என்ற எண்ணுக்குப் பிறகு 'மோட்டார் வாகனச் சட்டம்' என்பதைக் குறிப்பிட மறந்துவிட்டார்.
இதனால், '207' என்ற எண்ணும், இந்த பிரிவின் கீழ் விதிக்கப்படும் குறைந்தபட்ச அபராத தொகையான ரூ.4,000-ம் ஒன்றாக இணைந்து ரூ.20,74,000 என பதிவாகிவிட்டது. இது ஒரு எழுத்துப் பிழைதான்" என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
மேலும் அன்மோல் சிங்கால் ரூ.4,000 மட்டும் அபராதம் செலுத்தினால் போதும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.




















