Rajini:``அவர்கள் என்னை 'டேய் சிவாஜி' என அழைத்து பேசும்போது" - குதூகலத்துடன் பேசி...
ஹீலியம் சிலிண்டர்கள் வெடிப்பது ஏன்? தொடர் விபத்துகளால் பலூன் வியாபாரிகளுக்குத் தடை விதிக்க கோரிக்கை
கடற்கரை, வணிக வீதிகள், சுற்றுலாத் தலங்கள், திருவிழாக்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் தவறாமல் இடம்பிடிப்பவை `ஹீலியம்' வாயுவால் நிரப்பப்பட்ட பலூன்கள்.
குழந்தைகள் மட்டுமல்ல பல நேரங்களில் பெரியவர்களும் அந்தப் பலூன்களின் அழகில் தொலைந்து போவார்கள். அந்தப் பலூன்களை நிரப்பும் `ஹீலியம்' சிலிண்டர்கள் சமீபகாலமாக வெடிகுண்டுகளாக மாறி அப்பாவி மக்களைக் காவு வாங்கி வருகின்றன.
சம்பவம் - 1
திருச்சி தெப்பக்குளத்தைச் சுற்றி நிரந்தரக் கடைகளும், தற்காலிகக் கடைகளும் இருக்கும். அதனால் அந்தப் பகுதி எப்போதும் மக்கள் நெரிசலுடன் காணப்படும்.
2022 அக்டோபர் 2-ம் தேதி இரவு படுபிஸியாக இயங்கிக் கொண்டிருந்தன தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள கடைகள்.

அங்கிருந்த பிரபல ஜவுளிக் கடை ஒன்றின் வாசலில் ஹீலியம் சிலிண்டருடன் நின்று கொண்டிருந்த உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த அனார்சிங், பலூன்களுக்குள் ஹீலியம் வாயுவைச் செலுத்தி விற்பனை செய்து கொண்டிருந்தார்.
பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்துச் சிதறியது அந்த ஹீலியம் சிலிண்டர். அப்போது அந்தப் பக்கமாகச் சென்ற சின்னதாராபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர், உடல் சிதறி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆறுமாதக் குழந்தை உட்பட சுமார் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் அந்த விபத்தில் சிக்கி, படுகாயங்களுடன் உயிர் பிழைத்தனர். தப்பித்து ஓடிய பலூன் வியாபாரி அனார்சிங் அதன்பிறகு கைது செய்யப்பட்டார்.
சம்பவம் - 2
கர்நாடக மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்று மைசூர் அரண்மனை. வருடத்தின் அத்தனை நாட்களிலும் அந்தப் பகுதி சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும்.
குறிப்பாக வார இறுதி நாட்களிலும், விழாக்காலங்களிலும் அரண்மனையைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளால் மைசூரே திணறும்.
அதன்படி கடந்த 2025 டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனர். அரண்மனையைச் சுற்றியுள்ள கடைகளும் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருந்தன.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சலீம் என்ற பலூன் வியாபாரி, வேகவேகமாக ஹீலியம் வாயுக்களை பலூன்களுக்குள் அடைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது பயங்கர சத்தத்துடன் அந்த ஹீலியம் சிலிண்டர் வெடித்துச் சிதறியது.
அதில் பலூன் வியாபாரி சலீம் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். அதேபோல அங்கு சுற்றுலா வந்திருந்த மஞ்சுளா, லட்சுமி என்ற இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த விபத்தில் பத்து பேருக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் உயிர் பிழைத்தனர்.
சம்பவம் - 3
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை பகுதியில் கடந்த 19.01.2026 அன்று ஆற்றுத் திருவிழா நடைபெற்றது. அதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர்.
அங்கு கீழ்பெண்ணாத்தூரைச் சேர்ந்த ஏழுமலை என்பவர், பலூன்களில் ஹீலியம் வாயுவை நிரப்பி விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்தச் சிலிண்டர் பயங்கரச் சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
அந்த இடத்தைச் சுற்றி நின்று கொண்டிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். தூரத்திலிருந்து அதைப் பார்த்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.

விபத்து நடைபெற்ற இடத்தில் கை, கால்கள் தனித்தனியாகச் சிதறிக் கிடந்ததால் போர்க்களமாகக் காட்சியளித்தது. இந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கலா என்ற பெண் அதே இடத்தில் இரண்டு கால்களும் சிதறி உயிரிழந்தார். அதேபோல இரண்டு கால்களும் சிதறிய நிலையில் பதினோரு வயது சிறுவன் ஒருவன் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான். பலூன் வியாபாரியான ஏழுமலையும் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
ஹீலியம் சிலிண்டர்கள் ஏன் வெடிக்கின்றன ?
``ஹீலியம் மந்தமான வாயு என்பதால் தானாகவோ அல்லது நெருப்புடன் வினைபுரிந்தோ வெடிக்காது. ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி (Bronchitis) போன்ற சுவாசப் பிரச்னைகள் உள்ள நோயாளிகள் எளிதாகச் சுவாசிக்க, ஆக்சிஜனுடன் ஹீலியம் கலந்த 'ஹீலியாக்ஸ்'(Heliox) பயன்படுத்தப்படுகிறது.
மேலும் காற்றைவிட லேசானது என்பதால் அந்த வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் அந்தரத்தில் மிதக்கும். அதனால் ஆரம்பத்தில் வளிமண்டல ஆராய்ச்சிக்காக அனுப்பப்படும் வானிலை பலூன்களில் நிரப்பப்பட்ட ஹீலியம், அதன்பிறகு பொழுதுபோக்கு பலூன்களில் அடைத்து விற்பது அதிகரித்தது.
ஹீலியம் தானாக வினைபுரிந்து வெடிக்காது என்றாலும், சிலிண்டரின் கொள்ளளவை விட அதிகமாக நிரப்பும்போது அழுத்தம் தாங்காமல் வெடிக்கும் வாய்ப்புகள் அதிகம். அதேபோல துருப்பிடித்த சிலிண்டர்களில் ஹீலியத்தை நிரப்புவதும் விபத்துக்கான காரணம்.

அதேபோல ஹீலியம் வாயு விலை அதிகம் என்பதால் இப்படியான பலூன் வியாபாரிகள் அதை முறையாக கடைகளில் நிரப்புவதில்லை. அலுமினியம் மற்றும் காஸ்டிக் சோடாவைப் பயன்படுத்தி வீட்டிலேயே தயாரித்து நிரப்புகிறார்கள். அப்படி செய்தால் அது ஹீலியம் வாயுவாக இருக்காது. உண்மையில் அது ஹைட்ரஜன் வாயு. சிறு தீப்பொறி பட்டாலும் அது எளிதில் வினைபுரிந்து அது வெடித்துச் சிதறும்'' என்கின்றனர் அறிவியல் ஆர்வலர்கள்.
பொதுவெளியில் பலூன்களில் ஹீலியம் நிரப்பி விற்பனை செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனே தடை விதிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ஹீலியம் சிலிண்டர்களைக் கையாள்வது குறித்த பயிற்சியையும், உரிமத்தையும் கொடுத்து முறைப்படுத்த வேண்டும். அதேபோல ஹீலியம் என்ற பெயரில் வீட்டில் தயாரிப்பவர்கள் மீது கடுமையான குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.



















