`என் மகள் இறந்த மாதிரியே, நானும் சாகப் போகிறேன்!’ - ஆட்டோ ஓட்டுநரின் விபரீத முடி...
2026 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: ஒரு டிக்கெட் விலை ரூ.95 கோடியா? விண்ணை தாண்டும் மறுவிற்பனை சந்தை
வட அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டிக்கான ஒரு சாதாரண டிக்கெட், மறுவிற்பனை சந்தையில் சுமார் 11.5 மில்லியன் டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் 95 கோடி ரூபாய்) பட்டியலிடப்பட்டுள்ளது கால்பந்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகள் இணைந்து நடத்தும் இந்த உலகக்கோப்பை தொடர், வரலாற்றிலேயே முதன்முறையாக 48 அணிகள் பங்கேற்கும் போட்டியாக நடைபெறுகிறது. இதன் இறுதிப்போட்டி, ஜூலை 19, 2026 அன்று நியூ ஜெர்சியில் உள்ள 82,500 இருக்கைகள் கொண்ட மெட்லைஃப் மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டிக்கு இன்னும் பல மாதங்கள் உள்ள நிலையில், டிக்கெட்டுகளுக்கான தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ஸ்கை ஸ்போர்ட்ஸ் (Sky Sports) வெளியிட்டுள்ள தகவலின்படி, இறுதிப்போட்டிக்கான ஒரு டிக்கெட் மறுவிற்பனை இணையதளத்தில் 11.5 மில்லியன் டாலர் என்ற நம்பமுடியாத விலைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த டிக்கெட், மெட்லைஃப் மைதானத்தின் பிளாக் 307, வரிசை 22, இருக்கை 12-க்கு உரியது. இது களத்துக்கு மிக அருகிலும் இல்லாத, எந்தவிதமான விஐபி சலுகைகளோ, சிறப்பு விருந்தோம்பல் தொகுப்புகளோ இல்லாத ஒரு சாதாரண இருக்கைக்கான டிக்கெட் என்பதுதான் இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இந்த விலைப் பட்டியல், உலகக்கோப்பை டிக்கெட் விற்பனையில் நிலவும் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
உலகக்கோப்பை டிக்கெட் விலை நிர்ணயம் குறித்து ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வந்த சூழலில், இந்த மறுவிற்பனை விலை மேலும் சர்ச்சையை அதிகரித்துள்ளது. முன்னதாக, கோல் கம்பத்திற்குப் பின்னால் உள்ள நான்கு டிக்கெட்டுகள் சுமார் 2.3 மில்லியன் டாலர்களுக்கு மறுவிற்பனைக்கு வந்ததாக வெளியான செய்திகளும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
2022 கத்தார் உலகக்கோப்பையுடன் ஒப்பிடும்போது, இந்த முறை அதிகாரப்பூர்வ டிக்கெட் விலையே பல மடங்கு அதிகமாக உள்ளது. கத்தாரில் இறுதிப்போட்டிக்கான அதிகபட்ச அதிகாரப்பூர்வ டிக்கெட் விலை சுமார் 1,600 டாலராக இருந்த நிலையில், 2026 இறுதிப்போட்டிக்கான சில அதிகாரப்பூர்வ டிக்கெட்டுகளின் விலையே 11,000 டாலர்களைத் தாண்டியுள்ளது. இது மறுவிற்பனை சந்தைக்கு முன்பான விலையாகும்.

இந்த கடுமையான விமர்சனங்கள் குறித்து ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பொழுதுபோக்கு சந்தையின் யதார்த்தங்களுக்கு ஏற்பவே விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
"அமெரிக்காவில் டிக்கெட்டுகளை மறுவிற்பனை செய்வது சட்டப்பூர்வமானது. நாங்கள் குறைந்த விலையில் டிக்கெட்டுகளை விற்றால், அவை மறுவிற்பனை சந்தையில் இன்னும் அதிக விலைக்கு விற்கப்படும்," என்று அவர் கூறினார்.
மேலும், 2.3 மில்லியன் டாலர் டிக்கெட் குறித்து நகைச்சுவையாகக் குறிப்பிட்ட அவர், "யாராவது அவ்வளவு பணம் கொடுத்து டிக்கெட் வாங்கினால், அவருக்காக நானே தனிப்பட்ட முறையில் ஒரு ஹாட் டாக் மற்றும் கோக் வாங்கி வருவேன்" என்றார். ஒரு டிக்கெட் அதிக விலைக்கு பட்டியலிடப்பட்டிருப்பதால், யாராவது அதை வாங்கிவிடுவார்கள் என்று அர்த்தமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஃபிஃபா நேரடியாக மறுவிற்பனை விலைகளை நிர்ணயிக்காவிட்டாலும், அதிகாரப்பூர்வ மறுவிற்பனை தளங்கள் மூலம் நடைபெறும் ஒவ்வொரு பரிவர்த்தனையிலும், டிக்கெட் வாங்குபவரிடம் இருந்து 15% மற்றும் விற்பவரிடம் இருந்து 15% என கட்டணம் வசூலிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், விண்ணை முட்டும் இந்த மறுவிற்பனை விலைகள் மூலம் ஃபிஃபாவும் லாபம் ஈட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






















