Delhi Car Blast: மும்பை, சென்னை, கோவையில் பாதுகாப்பு அதிகரிப்பு; நிலைமையை ஆராயும...
Bank account-ல ரூ.1,20,000 உங்ககிட்ட இருந்தா... நீங்க உஷார்?! | #EmergencyFund
'Emergency Fund-ஆ அப்படின்னா என்ன'ன்னு கேட்கும் நிலைமையில்தான் நம்மில் பலரும் இருக்கிறோம். ஏனெனில், அது பற்றிய புரிதலும், அதன் முக்கியத்துவமும் பலருக்கும் தெரிவதில்லை. இப்படித்தான் ரமேஷின் நண்பர் சுரேஷ், ரமேஷ் எவ்வளவு சொல்லியும் அவசரகால நிதி (EmergencyFund) பற்றிய புரிதலை ஏற்படுத்திக் கொள்ளாமல். அந்த பணத்தை சேமிக்காமலேயே இருந்துவிட்டார். திடீரென சுரேஷூக்கு வேலையிழப்பு ஏற்பட, சம்பளத்தை மட்டுமே எதிர்நோக்கி வாழ்ந்து கொண்டிருந்த அவருக்கு பெரும் போராட்ட காலமாக அது அமைந்துவிட்டது. சேமிப்பும் இல்லை, அவசரகால நிதியும் இல்லை என்கிறபோது ரமேஷ் தான் வைத்திருந்த பணத்தில் ஒரு பகுதியை கொடுத்து, சுரேஷூக்கு வேலைகிடைக்கும் வரை அவருடைய குடும்பத்தை பார்த்துக் கொண்டார். ரமேஷ் சொல்லும்போதே சுரேஷ் அவசரகால நிதியை சேமித்திருந்தால், அவருக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

சுரேஷின் நிலைமை நம் யாருக்கும் வரக்கூடாது என்றால் நம் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் ஆறு மாத குடும்ப செலவுக்கான தொகை அவசரகால நிதிச் சேமிப்பாக இருக்க வேண்டும். அந்த நிதியை எப்படி சேமிக்கலாம் என்பதை விளக்கமாக சொல்கிறார் லாபம் நிறுவனத்தின் தலைவர் ஏ.ஆர்.குமார். இனி, அவர் சொன்ன ஐடியாவிலிருந்து....
குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கான செலவுத் தொகை!
"கோவிட் நோய்தொற்று காலகட்டத்தில், பலருக்கும் வேலையிழப்பு ஏற்பட்டது. திடீரென வேலையிழப்பு, மருத்துவ செலவுகள் அதிகரிப்பு போன்ற பல காரணங்களால் பலரது சேமிப்புகளும், முதலீடுகளும் பாதிப்புக்கு உள்ளாகின. அவசரகால நிதி சேமிப்பு இல்லாததால்தான் மக்கள் முதலீட்டுகளிலும், சேமிப்புகளிலும் கை வைக்கவேண்டிய நிலை உருவானது. இனி எதிர்வரும் காலங்களிலும் இது போன்ற இயற்கை பேரிடர்கள் வரலாம், இந்திய நாட்டின் பொருளாதார சுணக்கம் காரணமாக பலருக்கும் வேலையிழப்புகள் நடக்கலாம். இதுபோன்ற காலங்களில் ஏற்படும் நிதிச் சிக்கல்களில் இருந்து தப்பித்துக் கொள்ள நம் ஒவ்வொருவரிடமும் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கான குடும்பச் செலவுத் தொகையை கையிருப்பாக வைத்திருப்பது அவசியம். அதிகபட்சம் ஒரு வருடத்துக்கான தொகையை வைத்திருப்பது சிறப்பான விஷயம்" என்றவர், அந்தத் தொகையை எப்படி, எதில் சேமிக்க வேண்டும் என்பதையும் சொன்னார்.

செலவுகள் போகத்தான் சேமிப்பு என்கிற பழக்கமே இன்றைய பெரும்பாலான மக்களிடம் இருக்கிறது. சேமிப்புக்கு ஒதுக்கியது போகத்தான் செலவுக்கு என்கிற நிலையை உருவாக்கிக் கொள்ளும்போது அந்த குடும்பத்தில் நிதிப் பிரச்னைகள் உருவாவது தடுக்கப்படும். முறையாக பட்ஜெட் போட்டு செலவு செய்யும்போது, நிச்சயமாக ஒரு தொகை மீதம் இருக்கும். அப்படி மீதம் இருக்கும் தொகை 500 ரூபாயாக இருந்தாலும் சரி, ரூ.1,000-ஆக இருந்தாலும் சரி, அந்தந்த மாதத்தின் உபரித் தொகையை தனியாக எடுத்து வங்கியிலோ அல்லது அஞ்சலகத்திலோ ஆர்.டி அல்லது எஃப்.டி-ஆக போட்டு வைக்கலாம்.
குறைந்தபட்ச வருமானம்தான் கிடைக்கும் என்றாலும் அவசரகால நிதிக்கு இந்த சேமிப்பு ஏற்புடையதுதான். வங்கி, அஞ்சலக சேமிப்புகள் தரக்கூடிய வருமானத்தைவிட சற்று கூடுதல் வருமானம் கிடைக்க வேண்டும் என்கிறவர்கள், மியூச்சுவல் ஃபண்டில் இருக்கும் பேலன்ஸ்டு மற்றும் டெப்ட் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்து வரலாம். இப்படி சிறுக சிறுக சேமித்தால்கூட ஒரு குடும்பத்துக்கு தேவைப்படும் அவசரகால நிதியை சேமிக்க முடியும்.
உதாரணத்துக்கு ஒரு குடும்பத்துக்கு தற்போதைய நிலையில் மாதம் ரூ.20,000 செலவு ஆவதாக கணக்கில் எடுத்துக் கொள்வோம். அவசரகால நிதி சேமிப்புக்கான ஃபார்முலாவின்படி பார்க்கும்போது குறைந்தபட்சம் ஆறு மாத செலவுக்கான தொகை என்றால், ரூ.1,20,000-ஐ அவசரகால நிதியாக சேமிக்க வேண்டும். அல்லது அதிகபட்சமாக ஒரு வருடத்துக்கான ரூ.2,40,000-ஐ சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
மாத்தியோசி பிளான்!

ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை கால போனஸ்கள் நமக்கு கிடைக்கின்றன. ஒருசிலருக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படுகிறது. ஒரு சிலருக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும். சேல்ஸ் அண்டு மார்க்கெட்டிங் பிரிவில் வேலை செய்கிறவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளம் போக கூடுதலாக இன்சென்ட்டிவ் கிடைக்கலாம். இந்த பணத்தைக் கொண்டும் அவசரகால நிதியை சுலபமாக சேர்க்க முடியும்.
அவசரகால நிதியை கடனாக தராதீர்கள்!

நம்மில் பெரும்பாலானவர்கள் செய்யும் தவறு, அவசரகால தேவைகளுக்கு அடுத்தவர்களிடம் பண உதவி கேட்டு நிற்பது. அல்லது நண்பர்களுக்கும், உறவுக்காரர்களுக்கும் நாம் உதவாமல் வேறு யார் உதவுவார் என தாராள மனத்துடன், அவசரகால தேவைக்காக வைத்திருக்கும் பணத்தை எடுத்து கொடுப்பது. கடனாக வாங்கியவர் திருப்பி கொடுத்துவிட்டால் பரவாயில்லை, காலதாமதம் செய்தாலோ அல்லது தராமல் விட்டுவிட்டாலோ ரிஸ்க் பணம் கொடுத்தவருக்குத்தான். அதனால் அவசரகால தொகையை கடன் கொடுக்க பயன்படுத்தாதீர்கள். அவசரகால நிதியை கொண்டு பங்குச்சந்தையிலும் முதலீடு செய்ய வேண்டாம். ஏனெனில் அவசர தேவைகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அப்போது பங்குச்சந்தை சரிவில் இருந்து, உங்களுடைய முதலீட்டுத் தொகையும் மைனஸில் இருந்தால், பிரச்னையுடன் சேர்ந்து பணம் இருந்தும் பயன்படுத்த முடியவில்லையே என்கிற மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்" என்றார் தெளிவாக
உங்களிடம் அவசரகால நிதி சேமிப்பு இருக்கிறதா, இல்லையா என்பதைத்தானே இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள். யோசிப்பதோடு நிறுத்திவிடாமல், இந்த நிமிடத்தில் இருந்தே அதற்கான தொகையை எப்படி சேமிப்பது என திட்டமிடுங்கள்!


















